துணிவு இல்லாத அதிகாரிகள், குவியும் வழக்குகள்
என்ன செய்ய வேண்டும்?
திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும் அரசுக்கு விசுவாசமாக இருப்பது தான் அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் அரசுக்கு காட்டும் விசுவாசம், அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சில, திறமையற்ற, நேர்மையற்ற, அனுபவமற்ற அதிகாரிகள் தான் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்; இத்தகையவர்கள், விரைவாகவும், துணிந்தும் முடிவெடுக்கும் திறமையற்றவர்கள்.
இத்தகையவர்களுக்கு எந்த முடிவெடுப்பதற்கும், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அச்சம். 'சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ' என்ற பயம். அதனால் தான், பிறர் செய்வதற்கெல்லாம் தலையை ஆட்டி, காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பர்.
துறைமுகத்திலேயே கப்பல் நங்கூரமிட்டிருப்பது அதன் பாதுகாப்புக்கு உகந்தது தான். ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல.
ஆங்கிலத்தில், 'கரேஜ் ஆப் கன்விக் ஷன்' என்ற அருமையான வார்த்தை உண்டு. தாம் செய்யும் செயல் குறித்து மிகத் தெளிவாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் துணிவு தான், வலிமையான, தெளிவான நம்பிக்கையின் காரணமாக ஏற்படும் துணிவு அது. மனதில் அந்த துணிவு இருந்தால் செய்யும் செயலில் தயக்கம் ஏற்படாது.
இத்தகைய திறமை இல்லாத சிலர் முக்கிய பொறுப்பில் அமர்ந்து, கடமையில் துாங்கி, புகழை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதைச் செய்வதற்கும் இவர்களிடம் துணிவு இருப்பதில்லை.
சட்டத்தைக் காரணமாகக் காட்டி, தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தான், ஒரு சில அதிகாரிகள் தெரிந்தே செய்கின்றனர். சுய லாபத்துக்காகவும், சொந்த விருப்பு, வெறுப்புக்காகவும் செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் அறியாமையால் செய்கின்றனர்.
இதனால் பல அப்பாவி அலுவலர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகமாக படித்து, அகில இந்திய அளவில் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தவர்களில் சிலர், பணியில் இருக்கும் போது, சாமானியர்கள் கொடுக்கும் மனுக்களைப் படிக்குமளவுக்கு கூட பொறுமையாக இருப்பதில்லை.
உயரதிகாரிகளை அணுகும் ஒரு சாதாரண குடிமகனின் மனு, பரம பத விளையாட்டில் பாம்பிடம் கடிபட்ட காய் போல, அலட்சியம் காட்டிய அதிகாரியிடமே வந்து சேர்ந்து, மனு கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் நிலை தான் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிலவுகிறது.
அதற்காக, இந்த அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள்; கையூட்டு பெற்று கீழ்மட்ட அலுவலர்களைக் கண்டுகொள்வதில்லை என, சொல்லி விட முடியாது.
சமூகத்தில் தாதாக்கள் உருவாவது போல, இதுபோன்ற அதிகாரிகளின் தலைமையின் கீழ் சில தாதாக்கள் உருவாகி கோலோச்சி கொண்டிருப்பர்; அவர்களுக்கு பயந்து அப்பாவி ஊழியர்கள் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டிருப்பர்; பணிய மறுப்பவர்கள் பழிவாங்கப் படுவர். பழிவாங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருப்பர்.
பொதுமக்கள் பலர் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும், அரசு அலுவலர்கள் தங்கள் மீது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைக்காகவும் நீதிமன்றத்துக்கு ஓடவேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது, இதுபோன்ற திறமையற்ற, பொறுப்பற்ற அதிகாரிகள் தான்.
இப்போதெல்லாம் சில அதிகாரிகளே, 'கோர்ட்டுக்கு போய், உத்தரவு வாங்கி வாருங்கள்' என, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், அப்படிப் போய் வாங்கி வந்தாலும், தங்கள் துறை சட்ட ஆலோசகரிடம் கருத்துரை பெற வேண்டும் என்ற சாக்கில், நாளை கடத்தி, எதிர் தரப்பினர் அதற்கு மாற்று உத்தரவு வாங்க ஆலோசனையும் வாய்ப்பும், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழிகின்றன. 'வாய்தா' தேதி தெரிந்து கொள்ளவே நிறைய பேர் நீதிமன்றத்தில் கூட்டம் சேர்ந்து, அங்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலி வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தை விட்டு, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் நேரடியாக வந்து மோத ஆரம்பித்து விட்டனர்.
இதில் பல நல்ல, மூத்த வழக்கறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் சிலரின் போக்கு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மன வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.
முன்பெல்லாம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து கட்சிக்காரரை சந்திப்பதையும், அவர்களுக்காக காவல் நிலையம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் தொழிலுக்கு இழுக்கு என்று நினைப்பர்.
ஆனால் இன்று, இளம் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகளை, அலுவலகங்களுக்கு சென்று சந்திக்கின்றனர்.
உண்மையில் வழக்கறிஞர்களும், அரசு அதிகாரிகளும் சுயநலம் இல்லாமல், சமூக பொறுப்போடு நடந்து கொண்டால், கோர்ட்டுக்கு போகாமலேயே பல பிரச்னைகளை சுமுகமாக முடிக்க முடியும்; ஏழை, எளியவர் களுக்கு வீண் செலவு இல்லாமல் நீதி கிடைக்கச் செய்ய முடியும்.
பல சிறிய பிரச்னைகள், திறமையற்ற அதிகாரிகளாலும், பொறுப்பற்ற, லாப நோக்கத்தோடு செயல்படும் போலி வழக்கறிஞர்களாலும் பெரிதாக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
இ - மெயில்: spkaruna@gmail.com
- மா.கருணாநிதி -
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு),
சென்னை.
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.08.2016
No comments:
Post a Comment