பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நமக்கான தேவைகளை பெறுவதற்கும், உரிமைகளை அடைவதற்கும் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டியதிருக்கிறது.
பணவசதி உள்ளவர்கள் லஞ்சம் மூலமாக அதனை அடைந்து விடுகின்றனர். பணவசதி இல்லாதவர்களும், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற வைராக்கியம் உள்ளவர்களும் சட்டத்தின் உதவியை நாடுகின்றனர்.
முன்பெல்லாம் பொதுமக்கள் கையாண்ட “மொட்டைக் கடிதம்” என்ற ஒரு ஆயுதத்திற்கு அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் பயந்து நடுங்குவார்கள்.
தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துக் கொள்ள சிலர் “மொட்டைக் கடிதத்தை” தவறாக பயன்படுத்தியதால் அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற நிலையை எடுக்க வேண்டியது வந்தது.
ஆனால், இப்போதெல்லாம் உரிய ஆவணங்களுடன் புகார் அனுப்பினால்கூட அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எத்தனையோ முறை விண்ணப்பித்து்ம் ஒரு நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் சலித்துக் கொள்வதை நான் மட்டுமல்ல, அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு!
உளி, சுத்தியல் கொண்டு பாறையை உடைப்பதை பார்த்திருக்கிறீர்களா?
ஒரே அடியில் பாறை உடைந்து விடுகிறதா? இல்லை.
பலமுறை அடித்த பிறகுதான் பாறை உடையும்.
ஆனால், ஒவ்வொரு முறை சுத்தியலால் அடிக்கும் போதும் பாறைக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். பாறையின் வலிமை உள்ளுக்குள் பலவீனமாகும். அந்த மாற்றம் வெளியில் நமக்குத் தெரியாது.
அதே போலத்தான் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்ற புகார் மனுக்களும்.
ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்றுதடவை என்று அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மனுக்களை துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு (வட்டம், கோட்டம், மாவட்டம், கோட்டை) அனுப்பிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து போராடுங்கள்.
சுத்தியல் மூலமாக விழுகின்ற அடிகளால், பாறைக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தைப் போல, உங்களது தொடர்ச்சியான புகார்மனுக்கள் அரசாங்கத்துறைக்குள்ளும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.
வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்!
............................................................................................அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment