சான்றொப்பம் தேவையில்லை-என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசு அரசாணை எண்:96 - நகல் இணைக்கப்பட்டுள்ளது
சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர்- நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
குரூப் "ஏ', "பி' பிரிவு அரசு அதிகாரிகள் சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வழங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த நடைமுறை மக்களுக்குப் பயனளிக்காததோடு, அவர்களின் நேரத்தையும், அரசு அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மக்களின் சிரமத்தைக் குறைப்பது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதில் உள்ள பிரச்னைகள், அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள் தேங்குவதைக் குறைத்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது சான்றொப்பம் இடப்பட்ட நகல்களோடு, அசல் சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன. எனவே, சான்றொப்பம் இடும் நடைமுறை உண்மையில் எவ்விதப் பயனையும் தரவில்லை. மறு ஆய்வுக்குப் பிறகு அனைத்து அரசுத் துறைகளிலும் சான்றொப்பமிடும் நடைமுறையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசுத் துறைகளிலும் குரூப் "ஏ', "பி' பிரிவு அதிகாரிகள் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும். நேர்காணல் அல்லது பணி நியமனத்தின்போது அசல் சான்றிதழ்களை காண்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் - 13.10.2014
No comments:
Post a Comment