disalbe Right click

Friday, September 30, 2016

டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!

DIJI LOCKER - என்ன செய்ய வேண்டும்?
டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!
டூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. 
அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். 
வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே! டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், 
தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது.  இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது. 
ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. 
எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை. மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். 
இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும்.
மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். 
உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. 
இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.
 டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். 
தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
செய்தி - .சஷஃபியுல்லா (மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி : நாணயம் விகடன் - 20.09.2016  

EMI லாபமா? நஷ்டமா?


EMI லாபமா? நஷ்டமா? - என்ன செய்ய வேண்டும்?

கன்ஸ்யூமர் ஸ்பெஷல்
இஎம்ஐ கடன் மூலம் நாம் பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். இஎம்ஐயில் பர்சனல் லோனையோ, கன்ஷுயூமர் லோனையோ வாங்குவது தவறல்ல. அந்தக் கடனை வாங்கும்முன் அது நம் முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்று பார்ப்பது முக்கியம்.

பொதுவாக தனிநபர் கடன், நுகர்வோர் கடனுக்கு 14% முதல் 22% வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 14% வட்டியில், ஒரு நுகர்வோர் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை 3 வருடங்களில் திரும்பச் செலுத்தினால், இஎம்ஐ-ஆக ரூ.10,255 கட்டவேண்டும். 

வட்டிக்கு மட்டும் ரூ.69,200-ஆக செல்லும். இதுவே 22 சதவிகித வட்டிக்கு தனிநபர் கடன் என்றால், வட்டிக்கு செல்வதோ ரூ.1.12 லட்சம். 

வாங்கிய கடனோ ரூ.3 லட்சம் ரூபாய்தான்.

சில உதாரணங்கள் மூலம் பார்த்தால், இன்னும் தெளிவாக இருக்கும். உதாரணத்துக்கு, 

ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் தங்க நெக்லஸ் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அவர் நகை வாங்கும்போதே குறைந்தது 15 – 20% செய்கூலி, சேதாரம் போய்விடும். இந்த நகையை பர்சனல் லோன் வாங்கி, அதன் மூலம் வாங்கி இருந்தால், அதற்கான வட்டி 22% மற்றும் சேதாரம் 20% சேர்ந்து மொத்தம் 42%  போய்விடும். 

தங்கத்தின் விலை 42% அதிகரித்து இருந்தால் மட்டுமே இஎம்ஐ மூலம் வாங்கும் கடன் நமக்கு லாபம் அளிக்கும். 


இதேபோல்தான் இஎம்ஐ மூலம் தனிநபர் கடன் வாங்கி, நிலத்தில் முதலீடு செய்வதும். மனை வாங்கும்போது பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் 8%, தரகர் கட்டணம் 2% என குறைந்தது 10% செலவு ஆகிவிடும். 

இதனை தனிநபர் கடன் 22% வட்டியில் வாங்கி இருந்தால், மூன்றாண்டு கழித்து விற்பதாக இருந்தால் மனை விலை 32 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருந்தால் மட்டுமே லாபம். 

எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இஎம்ஐ -ல் கடன் வாங்கலாம். இல்லை என்றால் கடன் வாங்குவது கூடாது. அதிலும் இஎம்ஐ-ல் கடன் வாங்குவது கூடாது. 

மேலே குறிப்பிட்டதுபோல, இஎம்ஐ கடன் பெற்று, அந்தக் கடனுக்காக மாதம்தோறும் (அதாவது, 36 மாதங்களுக்கு) வட்டியாக ரூ.10,000 அல்லது ரூ.15,000 (வட்டி விகிதத்துக்கேற்ப  செலுத்தும் திறனுடைய ஒருவர் ஏன் அந்த  இஎம்ஐ தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடாது? 

இதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தியாகம், குறிப்பிட்ட அந்தப் பொருளை சில ஆண்டுகள் கழித்துப் பயன்படுத்துவதுதான். 

குறிப்பிட்ட அந்தப் பொருள் (தங்க ஆபரணம், பெரிய அளவு டிவி, வாஷிங் மெஷின், டைனிங் டேபிள், ஃப்ரிட்ஜ்) இல்லாமல் வாழப் பழகி இருக்கும் ஒருவரால் இன்னும் சில ஆண்டுகள் அது இல்லாமல் இருக்க முடியாதா?

   
இஎம்ஐ-ல் பொருள்கள் வாங்கு வதற்கு பதில் அதற்கான தொகையை மாதா மாதம் முதலீடு செய்து, வாங்கினால் எவ்வளவு லாபம் என்று பார்ப்போம். 

ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 

இந்த ஃபண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், முதலீடு செய்த தொகை ரூ.3.6 லட்சம். 

3 ஆண்டுகளில் இது ரூ.4.4 லட்சமாகப் பெருகி இருக்கும். அதாவது, லாபம் மட்டும் ரூ.75,000.  

இஎம்ஐ கடன், முதலீடு இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதை ஆராய்ந்தால், இஎம்ஐ கடன் லாபமல்ல என்பது தெளிவாக விளங்கும்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com.

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற


பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தைக்கு அரசு நிதியுதவி - A- Z தகவல்கள்!

பெண் குழந்தை பிறந்தால் அதை சுணக்கத்தோடு வரவேற்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். படிப்பு, கல்யாண செலவு என்று உடனே மனதில் பெரிய லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.  

இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டால், பெற்றோர் கலங்கித்தான் போய்விடுகிறார்கள். 

பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதில் முக்கியமானது சிவகாமி அம்மையார் நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். இதன் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப்  பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுக வேண்டும்?

விண்ணப்பம்

சிவகாமி அம்மையார் நினைவு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான, விண்ணப்பம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம். 

அல்லது

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படிவத்தை பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். 

நிதி விவரம்

ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூபாய் 25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெண் குழந்தைகள், 1.8.2011 க்கு பிறகு பிறந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 

ஆண் குழந்தை இருக்கக் கூடாது. 

பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவும் கூடாது. 

பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

இணைக்க வேண்டியவை

குடும்ப அட்டை, 

வருமானச் சான்று, 

சாதி சான்று, 

பெற்றோரின் வயதுச்சான்று, 

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, 

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்), 

குடும்பப் புகைப்படம்- 1, 

ஆண் வாரிசு இல்லை என, வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று, 

இருப்பிடச் சான்று 
(விண்ணப்பத்தாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று, வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

குறிப்பு

எந்தக் குழந்தையின் பெயரில் அரசு, தொகையை முதலீடு செய்ததோ அந்தக் குழந்தை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். 

அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதி

விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

மேலும் அதிக தகவலுக்கு

மேலதிக தகவல்களுக்கு உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

- -----------------------------------------------------------------------------------------சு.சூர்யா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் - 29.09.2016

Thursday, September 29, 2016

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்


ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - என்ன செய்ய வேண்டும்?

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணத்தில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பமின்றி, சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப். 26 தொடங்கி அக். 3 வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை நடைபெறுகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், உறுதிமொழி ஆவணம் மற்றும் ரூ. 20-க்கான பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் (சான்று உறுதி அலுவலர்) சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

உறுதிமொழி ஆவணத்தில் பகுதி ‘அ’வில் வேட்பாளரின் விவரம், நிரந்தரக் கணக்கு எண் (பான்), வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, தண்டனை ஏதும் பெற்றுள்ளாரா?, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்துகள் விவரம், தொழில், கல்வித் தகுதிகள் என 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 

அடுத்து பகுதி ‘ஆ’ வில், பகுதி ‘அ’ வில் குறிப்பிடப்பட்ட 1 முதல் 10 வரையிலான விவரங்களின் சுருக்கம் இடம் பெற்றுள்ளது.

கடைசியாக பக்கம் 10-ல் வேட்பாளரும், சான்றுறுதி அலுவலரும் கையொப்பமிட வேண்டும்.

இந்த தேர்தலில், புதிய நடைமுறையாக நோட்டரி பப்ளிக் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதி மட்டுமல்லாது, உறுதிமொழி ஆணையரும் (வழக்கறிஞர்களில் உறுதிமொழி ஆணையராக பதிவு செய்துள்ளவர்கள்) சான்றளிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் உறுதிமொழி ஆவணத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் வேட்பாளர்கள் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. மனுக்கள் திரும்பப் பெறுவது போன்ற செயல்களில் வேட்பாளரோ அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரோ எளிதில் அடையாளம் காண முடியும். 

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனு வாபஸ் பெறும் நடைமுறைகளில் பிரச்சினையின்றி திடமான முடிவுகளை எடுக்க முடியும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்கும்போது, நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதியிடம் சான்று பெறத் தேவையில்லை. 

ரூ.20-க்கான பத்திரத்தில் வேட்பாளரே சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என்ற நடைமுறையையும் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடு பவர்கள் சான்றொப்பம் பெற பணம் செலவு செய்யத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.09.2016

Wednesday, September 28, 2016

சி டி சி என்றால் என்ன?


சி டி சி என்றால் என்ன - என்ன செய்ய வேண்டும்?

மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் மாத சம்பளம் பெறுபவரா? உங்களுடைய வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள CTC என்ற மாத சம்பளத்திற்கும், உங்கள் கையில் கிடைக்கும் உண்மையான தொகையை பார்க்கும் போது, சற்று வருத்தப்பட்டதுண்டா?? 

உங்களின் வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

நிறுவனம்

இந்த ஏமாற்றத்திற்காக உங்களுடைய கம்பெனியை குறை சொல்லி எந்த பலனும் இல்லை. 
ஆனால், CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் போனது நம்முடைய தவறுதான்.

CTC (cost to company) என்றால் என்ன? 

CTC என்பது அதன் பெயரைப் பொறுத்தே விளங்கும். அதாவது உங்களை பணிக்கு அமர்த்துவதால் அந்நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் இதன் விளக்கம். இவை மட்டுமல்லாமல், சில நேரங்களில் போனஸ் போன்றவைகளும் நன்மதிப்பிற்காக சேர்க்கப்படலாம். உங்களுடைய சேமநல நிதி (PF) உட்பட எல்லா வகையான கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது தான் CTC ஆகும்.

20 சதவீத சம்பளம் 

நீங்கள் புதிய நிறுவனத்தில் அல்லது முதல் முறையாக நிறுவனத்தில் மாத வருமானம் பற்றி விவாதிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி, சேமநல நிதி போன்றவைகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படி குறைகிறது? 

ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதைக் கணக்கிடுவோம். 
இப்போது அஜய் என்பவரின் ஊதியத்தைக் கணக்கிடுவோம். 
அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000 
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000 
மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000 
போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000 
ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000 
(மாத சம்பளம் ரூ.31,917)

பிடித்தங்கள்

அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000 
தொழிலாளர் சேமநல நிதி (அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000 
மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000
தொழில் வரி (Professional Tax)- ரூ.3600 
நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 
(நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283) 
இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary.

வித்தியாசம் 

மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

வருமான வரிச் சலுகை

எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு சேமநல நிதி வேண்டாம் என்று சொல்ல முடியும். அந்த வகையில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் பெறும் வரி சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.

வரி மற்றும் மருத்துவ காப்பீடு 

வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

கூப்பன்கள் 

சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது. 

Posted By: Prasanna VK

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 27.09.2016



கோர்ட் டைரக்‌ஷன் - ஐகோர்ட் உத்தரவு


கோர்ட் டைரக்‌ஷன் - ஐகோர்ட் உத்தரவு -என்ன செய்ய வேண்டும்?

சென்னை: 'ஒரு புகாரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகுவது ஏற்புடையதல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களை, பதிவு செய்ய உத்தரவிடும்படி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, வழக்கறிஞர் ஒருவர், ''உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில், சட்ட அம்சங்களை வரையறுத்துள்ளது;
அதன்படி, போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை அணுகிய பின் தான், உயர் நீதிமன்றத்தை அணுக முடியும்,'' என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஒரு குற்றம் தொடர்பாக, யார் புகார் அளித்தாலும், அதை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் பெற வேண்டும். ஆரம்ப விசாரணை நடத்த விரும்பினால், சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பணி பதிவேட்டின் நகல் வழங்க வேண்டும். 

புதுச்சேரி என்றால், அதற்கென தனி ரசீது வழங்க வேண்டும்
.
ஆரம்ப விசாரணைக்கு பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையில்லை என்றால், புகாரை முடித்து வைத்ததற்கான அறிக்கை நகலை வழங்க வேண்டும்.

அந்த அறிக்கையை பெற்ற பின், புகார்தாரர் விரும்பினால், மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்யலாம்; 

அந்த மனு மீது, போலீசார் விசாரணை நடத்தும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.

புகாரை பெற, போலீஸ் நிலைய அதிகாரி மறுத்தால், பதிவு தபாலில், எஸ்.பி., அல்லது துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 

அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.

புகாரை பெற்ற பின், 15 நாட்களுக்குள், மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்;

 அதன் நகல், புகார் மனுவின் நகலை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் விசாரணைக்காக, மாஜிஸ்திரேட் அனுப்ப வேண்டும்.

உத்தரவுக்கு பின், ஒரு வாரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால், அந்த போலீஸ் அதிகாரி மீது, மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்கலாம்; 

உயர் நீதிமன்றத்தை, புகார்தாரர் அணுகலாம்.

ஆரம்பகட்ட விசாரணையை, ஆறு வாரங்களில் போலீசார் முடிக்கவில்லை என்றாலும், உயர் நீதிமன்றத்தை புகார்தாரர் அணுகலாம்.

 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தவறினால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; 

அது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 28.09.2016

பி.எஃப் மூலம் இலவச ஆயுள் காப்பீடு


பி.எஃப் மூலம் இலவச ஆயுள் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 

நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 

ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது. 

இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (Employee's Deposit Linked Insurance - EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம். 

யாருக்கெல்லாம் இது பொருந்தும்? 
இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 

பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (Employee's Provident Fund Organisation - EPFO) மூலம் கட்டமைக்கப்பட்டது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை 
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. 

இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை.

காப்பீடு தொகை 
இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம்.

எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும்.

எவ்வளவு தொகை பெற இயலும்?
 குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 

இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும்.

உரிமைகோரல் செயல்முறை 
ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம். 

வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும். 

இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது. 

-------------------------------------------------------------------------------------------Written by: Tamilarasu

நன்றி : குட் ரிட்டன்ஸ் - தமிழ் - 27.09.2016

Monday, September 26, 2016

எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா!


எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா! - என்ன செய்ய வேண்டும்?

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்ததார ராக இருக்கக்கூடாது, கண்டுபிடிக் கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படு வதாக தேர்தல் ஆணையம் எச்ச ரித்துள்ளது.

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட் சிப் பதவிகளுக்கு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நேற்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினரும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர் தலில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, மோதல்கள், சர்ச்சைகள் ஏற்படு வதை தடுக்க வேட்பாளர் தகுதி மற்றும் தகுதியின்மை, வாக்காளர் களை அணுகும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், நன்ன டத்தை விதிகள், சட்டத்திருத்தங்கள் அடங்கிய 14 அத்தியாயங்கள் அடங் கிய வழிகாட்டுதல் கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதில் குறிப்பிடப் பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

$ குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்துக்கு மேல் தண் டனை பெற்றிருப்பின் தண் டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளி லிருந்து ஆறு ஆண்டு காலத் துக்கும் தேர்தலில் போட்டியிடு வதற்கு தகுதி அற்றவராக கருதப்படுவார்கள்.

$ தேர்தல் குற்றச்செயல்களுக் காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதி யற்றவராக கருதப்படுவர்.

$ தேர்தலில் போட்டியிடுபவர் மன நலம் குன்றியவராக இருக்கக் கூடாது.

$ 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண் டனை பெற்றவராக இருத்தல் கூடாது.

$ பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சிகளில் கவுன்சிலராக போட்டியிடுகிறவர்கள், அந்த உள்ளாட்சியுடன் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூல மாகவோ எந்த ஒரு வேலைக் கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்த தாராக இருக்கக் கூடாது. கண்டுபிடித்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவர்.

$ அரசுப் பணியாளராகவோ, அலு வலராகவோ இருக்கக் கூடாது.

$ உள்ளாட்சிகளுக்கு சேர வேண்டிய தொகைகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.

$ சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட தகுதியின்மை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

$ கடந்த கால உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கினை உரிய காலத் தில் தாக்கல் செய்ய தவறிய மைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வராக இருப்பின், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தகுதியற்றவராகக் கருதப் படுவர்.

$ வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, அச்சுறுத்தல் களோ கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் பணியை செய்ய வேண்டும்.

$ போட்டி வேட்பாளர் களை போட்டியிட விடாமல் செய் வதை தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்ய வைக்கவோ முறையற்ற வழிகளை கையா ளக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி மனித தாக்குதல் கூடாது

$ மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக் கூடாது.

$ சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக் கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக் கூடாது.

$ தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எவருக்கும் நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடாது.

$ வாக்காளர்களுக்கு உணவு வழங்குதல் மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல் கூடாது. வேட்பாளர் பெயரை முன்மொழிபவரது பெயர், போட்டியிடும் உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

$ வேட்புமனு படிவங்கள் தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும். அச்சிட்டப் படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.09.2016

Saturday, September 24, 2016

பாதையில்லா நிலத்திற்கு பாதை


பாதையில்லா நிலத்திற்கு பாதை - என்ன செய்ய வேண்டும்?


பாகப் பிரிவினை பத்திரம் மூலமாக கிடைத்த சொத்தில் பாதைக்காக எந்த ஒரு உரிமையும் குறிப்பிடப்படாமல் இருந்தால் உங்கள் உறவினரிடமிருந்து நீங்கள் உங்களுக்கு கிடைத்த நிலத்திற்கு, பாதைக்கான உரிமையைக் கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.

ஒரு வேளை உங்களுடைய பாகத்துக்கு வந்த நிலத்துக்கு நான்கு புறங்களிலும் பாதை இல்லாமல் இருந்தால், நீதிமன்றம் மூலமாக பாதையைப் பெறலாம்.

அதற்கு நீங்கள், உரிய நீதிமன்றத்தில் வசதியுரிமை பாத்தியப்படி [EASEMENT OF NECESSITY] உங்கள் பாக நிலத்துக்கு நான்கு புறங்களிலும் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிடும் நிலப்பகுதியைப் பாதையாக பயன்படுத்தும் உரிமையைப் பெறலாம்.

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 24.09.2016

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து


திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்கள் 
என்ன செய்ய வேண்டும்?

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வைணவ பக்தர்களுக்கு, குறிப்பாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு பாத யாத்திரை செல்வது, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து திருமலைக்கு மலையேறிச் சென்று மலையப்ப சுவாமியை தரிசிப்பதென உற்சாகப் பெருவெள்ளம்தான்

திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல இரண்டுவிதமான பாதைகள் இருக்கின்றன. திருப்பதி பஸ்-ஸ்டாண்டில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபிரி வழியாகச் செல்வது ஒரு வழி. 

மற்றொன்று சீனிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீ வாரிமெட்டு வழி. பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் அலிபிரி வழியைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

இந்தப் பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். 

அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4  முதல் 6 மணி நேரம்  ஆகும். 

இப்படியாக நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனம்தான் திவ்ய தரிசனம். நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டுக்குச் செல்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதை எடுத்துச்சென்று பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.

* மலையேறிச் சென்று மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதென முடிவு செய்துவிட்டால், முதல் நாளே கீழ்திருப்பதி வந்து, தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ‘சீனிவாசன் காம்ப்ளக்ஸிலோ’, ‘விஷ்ணு நிவாஸிலோ’ அறையெடுத்துத் தங்கி அலமேலுமங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் முடித்து இரவு ஓய்வெடுத்து மறுநாள் அதிகாலையில் மலையேறுவது மிகுந்த உற்சாகத்தைத் தரும்.

* பஸ்-ஸ்டாண்டிலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும் 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் என்கிற ரீதியில் பஸ்கள் செல்கின்றன. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தேவஸ்தான இலவசப் பேருந்துகளும் செல்கின்றன.

* அலிபிரியில் நம்முடைய லக்கேஜ்களை சிறிய பூட்டு போட்டு பூட்டி தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து விட்டால் போதும். அவர்கள் வழங்கும் ரசீதைக் காண்பித்து, அவற்றை நாம் மலையின் மீது சென்று பெற்றுக்கொள்ளலாம். லக்கேஜ் பைகளில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்களை வைக்க வேண்டாம்.

* இந்த மலைப் பாதையில்  2,400 படிக்கட்டுகள் ஏறி முடித்ததும், ‘காலி கோபுரம்’ என்னும் இடம் வரும். இங்குதான் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அங்கேயே அன்னப்பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள் கொண்ட 9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். 

* மலையேறி வந்ததும், திருமலை பஸ்-ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள மாதவ நிலையத்தில் ரெஸ்ட்ரூம் செல்லவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு  நமது உடைமைகளை அங்குள்ள ஃப்ரீ லாக்கரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்லலாம்.

* மலைப்பாதை முழுவதும் 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள், ஆம்புலென்ஸ் வேன் மற்றும் ரோந்துப் பணியாளர்கள் உண்டு. இரவிலும் பக்தர்கள் செல்லும்விதமாக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகாலை நேரத்தைத் தேவுசெய்வதே நல்லது.

* பாதி தூரம் வந்ததும் ஏறுவதற்கு உடல் நலம் முடியாமல் போனால் ஆங்காங்கே உட்கார்ந்து பொறுமையாக வரவேண்டும் அப்போதும் முடிய வில்லையென்றால் ஒரு சில இடங்களில் உள்ள இணைப்புச் சாலைகளின் வழியாக வந்து பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். 

ஆனால் திவய தரிசனத்துக்கான அனுமதி கேன்சலாகிவிடும். பிறகு நாம் சர்வதரிசனத்திலோ சிறப்பு தரிசனத்திலோ சாமி தரிசனம் செய்யலாம்.

 * மலைப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. அங்காங்கே சின்னச்சின்ன பெட்டிக்கடைகளும் உண்டு. பொதுவாக நாம் பழங்கள் மற்றும் கேரட் வெள்ளரி சாலட் வகைகள் எலுமிச்சைப்பழம் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லாம்.  

* நாராயண ஸ்தோத்திரம், ஹனுமன் சாலிசா, போன்ற பக்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம் அல்லது கோவிந்தனின் நாமத்தை உரக்க உச்சரித்துக்கொண்டும் செல்லலாம். பயணம் களைப்பில்லாமல் உத்வேகத்துடன் செல்லலாம்.

* ஏழுமலைகளும் எம்பெருமான் வாசம் செய்யும் புனித ஸ்தலமென்பதால் காலணிகள் அணியாமல், மது, சிகரெட், மாமிசங்களைப் புறக்கணித்து பயபக்தியுடன் சென்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும். 

* வருடத்தின் எந்த மாதத்திலும் மலை யேறிச்சென்று வழிபடலாம் என்றாலும், ஏப்ரல், மே  போன்ற கோடை கால மாதங்களையும் அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களையும் தவிர்ப்பது நல்லது. 

* குடும்ப உறுப்பினர்கள், ஒருமித்த சிந்தனையுள்ள நண்பர்கள் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டால், பயணமும் இனிமையாகும், சோர்வாகவும் இருக்காது. தனி நபராக இருந்தால் மக்களோடு மக்களாக பயணம் செய்யுங்கள்.

---------------------------------------------------------------------------------------------- எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் - 23.09.2016


Thursday, September 22, 2016

பேரிடர் மேலாண்மை படிப்பு


பேரிடர் மேலாண்மை படிப்பு - என்ன செய்ய வேண்டும்?

துறை அறிமுகம்: பேரிடரிலிருந்து மீளப் படிப்போம்!

மழைக் காலம் வந்துவிட்டது. அதிலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் கண் முன் வந்து பயமுறுத்துகிறது. 

வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிஹார், அசாம் ஆகியவை சென்ற மாதம் வெள்ளப் பெருக்கில் தத்தளித்ததும் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்துன்பத்தால் அல்லாடியதும் நமக்குத் தெரியும். 

இந்தியாவில் மட்டுமல்ல இத்தாலியில் நிலநடுக்கம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, இந்திய எல்லை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல் எனப் பலவிதமான பேரிடர்களால் மக்கள் பேராபத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், வறட்சி, பயங்கரவாதத் தாக்குதல், அணுக்கதிர் வீச்சு உள்ளிட்ட பேரழிவுகளால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30 லட்சம் பேர் பலியாகிவிட்டார்கள், 80 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா.வின் ஆய்வறிக்கை. 

எதிர்பாராத நேரத்தில் சில மணி நேரங்களில் நம் வாழ்வைச் சூறையாடும் இயற்கைச் சீற்றங்களும் பேரிடர்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து மீளப் பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

ஆனால் ஒன்றை யோசிக்க வேண்டியிருக்கிறது. 

பேரழிவுகள் நிகழ்வதை நம்மால் முழுவதுமாகத் தடுக்க முடியாது என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாக எடுப்பதன் மூலம் கூடுமானவரை அவை ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

 நம்மை அச்சுறுத்தும் விஷயமே இதுதான். போன ஆண்டு பெய்த கனமழையைத் தாண்டி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் பெருமழையை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதுதான். ஆனால் இப்போதும் அதே நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

அரசும் கல்வி அமைப்பும்

இந்தியாவில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல் உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம், பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பேரழிவுகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்டதுதான் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.
2001-ல் குஜராத் பூகம்பத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் தேவை மேலும் தீவிரமாக உணரப்பட்டது. அதன்படி 25 டிசம்பர் 2005-ல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது.

எவ்வாறு அரசு இதுகுறித்துத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டுமோ அதுபோலவே கல்வி நிறுவனங்களும் இதை எதிர்கொள்ளக் கற்றுத்தர வேண்டும் இல்லையா? 

இதைப் படிப்பாக அறிமுகப்படுத்தி அதற்குரிய வேலை வாய்ப்புகளை உண்டாக்கினால் மட்டுமே சரியான முறையில் பேரழிவுகளை எதிர்கொள்ள முடியும். இயற்கைச் சீற்றங்களையும் பேரழிவுகளையும் எதிர்கொள்ளவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சொல்லித் தருவதுதான் பேரிடர் மேலாண்மை (Disaster Management) படிப்பாகும்.

பேரழிவுகள் ஏன் நிகழ்கின்றன, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளின் தீவிரத்தை எப்படிக் குறைப்பது, பேரிடரில் சிக்கிக்கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து, நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை எப்போது எப்படி வழங்குவது உள்ளிட்டவை பேரிடர் மேலாண்மையில் விரிவாகக் கற்றுத்தரப்படுகின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டமாகவும் இந்தப் படிப்பு இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரிடர் மேலாண்மையை எங்கே படிக்கலாம்?

# சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் அஃப் ஜியோஇன்ஃபர்மாட்டிக்ஸ், பூனே

# தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், புதி டெல்லி

# டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சைன்சஸ், மும்பை, ஜம்செட்ஜி டாடா செண்டர் ஃபார் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட்

# இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், புது டெல்லி

# டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், போபால்

# அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இவற்றைத் தவிரவும் மேலும் பல நிறுவனங்களில் பேரிடர் மேலாண்மை கற்றுத்தரப்படுகிறது.

அடிப்படைத் தகுதி
இளங்கலை பட்டப்படிப்பாக வழங்கப்படும் பேரிடர் மேலாண்மையில் சேர பிளஸ் டூவில் குறைந்தது 55% எடுத்திருக்க வேண்டும். 

கலை, வணிகவியல், கணிதம், கணினி, அறிவியல் இப்படி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் இதைப் படிக்கலாம். முதுகலைப் பட்டமாகப் படிக்க ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதை அடுத்து ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்பு
பேரிடர் மேலாண்மையை முறையாகப் படித்தவர்கள் சமூகச் செயற்பாட்டாளர், பொறியாளர், மருத்துவ நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர், மறுசீரமைப்பு பணியாளர் உள்ளிட்ட பொறுப்புகளை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் வகிக்க முடியும்.

தொண்டு நிறுவனங்களில், சமூக வேலை அமைப்புகளில், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச மையங்களில், துணை ராணுவத் துறையில், பேரிடரைக் கண்காணிக்கும் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அரசாங்கத் துறைகளான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், தீ அணைப்புத் துறை, வறட்சி மேலாண்மை மையங்கள், காப்பீடு நிறுவனங்கள், சட்டம் அமலாக்கத் துறை, ரசாயனத் துறை, சுரங்க பணி, பெட்ரோல் தயாரிக்கும் துறை ஆகியவற்றில் அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளன. 

இதேபோல உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசச் செஞ்சிலுவை, ஆக்ஸ்ஃபாம், கேர் உள்ளிட்ட நிறுவனங்களும் வேலை கொடுக்கக் காத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேரிடர் மேலாண்மை என்பது சேவைக்கான படிப்பும் வேலையும் ஆகும். அதைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மனிதநேயமும், பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமும் துணிச்சலும் அவசியம்.

...........................................................................................................................................ம. சுசித்ரா

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 20.09.2016

புத்தகப்பையினால் பாதிப்பு


புத்தகப்பையினால் பாதிப்பு - என்ன செய்ய வேண்டும்?

'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

அதிக சுமை உள்ள பள்ளி புத்தகப் பைகளை, நீண்டகாலம் மாணவர்கள் சுமப்பது, அவர்களின் உடல் நலனில் எதிர் விளைவை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் வளர வேண்டிய நிலையில், அவர்களுக்கு, முதுகு தண்டுவடத்தில் வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட, பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

முடிந்த அளவுக்கு அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள், தங்களின் புத்தகப் பைகளில், விளையாட்டு பொருட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் பல பொருட்களை வைத்துக் கொள்வது வழக்கம். அதனால், எடை கூடும் என்பதால், பெற்றோர், தினமும் சோதிக்க வேண்டும்

குழந்தைகளின் தோளில், பைகள் இறுக்கமாக இருக்க வேண்டும்; அங்கும், இங்கும் தொங்கினால், தோள்களை பாதிக்கும்.இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர் நாளிதழ் - 22.09.2016

Wednesday, September 21, 2016

எண்ணைக் குளியல் - என்ன செய்ய வேண்டும்?


எண்ணைக் குளியல் - என்ன செய்ய வேண்டும்?

இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம், வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. 

அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும்  எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.

நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.

                                        
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது.  நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். 

வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.

வாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.

 பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம்  உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம். 

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றுவது, நம் முன்னோர்களின் வாழ்வியலை பின்பற்றுவதுதானே!

- தி.ஜெயப்பிரகாஷ்

நன்றி : விகடன் செய்திகள் - 10.09.2016