disalbe Right click

Monday, October 31, 2016

நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா


நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்களில் விண்ணப்பித்து நிலம், கட்டிட அனுமதி விவரங்களை அறியலாம்:
ரியல் எஸ்டேட் துறையினர் தகவல்
பொதுமக்கள் தாங்கள் வாங்கிய நிலம், கட்டிடத்துக்கான அனுமதி உள்ளதா என்பதை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் அல்லது கட்டிடங்களை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்போது தாங்கள் வாங்கிய நிலத்தின் அனுமதி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள், தங்கள் நிலம் தொடர்பான ‘லே-அவுட்’-க்கு யார் அனுமதியளித்துள்ளனர் என்பதை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய பகுதி என்றால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அந்த ‘லே அவுட்’ டை அங்கீகரித்திருக்க வேண்டும். மற்ற பகுதிகள் என்றால், நகர ஊரமைப்பு திட்ட இயக்ககம் (டிடிசிபி) அங்கீகாரம் இருக்க வேண்டும்.
இவற்றை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக, தமிழ்நாடு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டி.மணிசங்கர் கூறியதாவது:
நிலம் அல்லது வீட்டை சென்னைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கினால், அதற்கான ஆவணத்துடன், இந்த நிலம் அல்லது கட்டிடம் தொடர்பான அனுமதி விவரங்களை அளிக்கக்கோரி, சிஎம்டிஏ-வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள, ஆவண எண், ஆவணத்தை சரிபார்த்து அனுமதி தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள். உடனடியாக தெரிய வேண்டும் எனில் வாய்மொழியாக விவரங்களை அளிப்பார்கள்.
எழுத்துப் பூர்வமாக வேண்டும் எனில், 30 நாட்களுக்குள் அளிப்பார்கள். அதில், அந்த ‘லே அவுட்’ அல்லது குடியிருப்பு அனுமதி பெற்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை அறியலாம்.
சென்னைக்கு வெளியில் உள்ள மற்ற பகுதிகளுக்கான அனுமதி விவரங்களை டிடிசிபி அலுவலகத்தில் இருந்து பெற முடியும். சாதாரண பொதுமக்கள் இவற்றை பார்ப்பதில்லை. காலதாமதமாகும் என அலுவலர்கள் தெரிவித்தால், நிலத்தை விற்பவர் அவசரம் காட்டுவார்கள்.
அப்போது, நிலத்தை வேறு யாராவது வாங்கிவிடுவார்கள் என அவசரப்பட்டு, பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக, அரசும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதில்லை.
மேலும், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அடுக்குமாடி கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறும் அமைப்புகள், அது தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளும் வசதியை அளிப்பதில்லை.
தற்போதைய சூழலில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அனுமதி தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளத்தில் பார்க்க முடியாது. அரசு வெளிப்படையாக இந்தத் தகவல்களை தெரிவிக்க முன்வர வேண்டும்.
மேலும், நிலத்தை மேம்படுத்துவோர், அதற்கான ‘லே அவுட்’ அனுமதி பெறும் போது, சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அந்தத் தொகையில், அரசு சாலை, குடிநீர், கழிவுநீர் அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு அதை உடனடியாக செய்வதில்லை. இதனால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, நிலத்தை மேம்படுத்துபவரே இந்த வசதிகளை செய்து அளித்தால் அனுமதிப்பதாக அறிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தற்போது, கட்டிட வரைபடம் அனுமதியை விரைவாக அளிப்பதற்கான முயற்சியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிஎம்டிஏ-வில் திட்ட அனுமதி விண்ணப்ப பரிசீலனைக்கான தானியங்கி மென்பொருள் ‘ஏபிபிஏஎஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பு கட்டிடங்கள், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதியை வெளிப்படையாக வழங்க முடியும்.
‘லே-அவுட்’ அனுமதியை பொறுத்தவரை, பொதுமக்கள் இடத்தை வாங்கும் முன், வரைபடத்தில் அளிக்கப்பட்டுள்ள அனுமதி எண், ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

கி.கணேஷ்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 01.11.2016



வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போகாமலிருக்க


வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போகாமலிருக்க
என்ன செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் இருந்து டெபிட் கார்டு மூலம் சமீபத்தில், பல கோடி பணம் சுருட்டப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இவ்வாறு பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது.

பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நாள் தினம், மற்றும் உங்கள் செல்போன் எண் இந்த திருட்டின் மூல காரணம். 

சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம் என்பது இவர்களுக்கு அத்துப்படியாம். 

மோசடி நடப்பது இப்படித்தான்: பேஸ்புக் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை எடுத்துக்கொள்வார்கள். 

செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். 

அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள். பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான் கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள். 

வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள். வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங் பார்மட்டை கொண்டு புது பாஸ்வேர்டை உருவாக்குவார்கள். 

பிறகு என்ன..? உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணி பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள். 

இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள்.

By: Veera Kumar
நன்றி: ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  »  31.10.2016

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்கு இணையதள இணைப்பு: இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் அரசு கேபிள் நிறுவனம்- வங்கிக்கடன் பெற்றுத்தரவும் திட்டம்
தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள இணைப்பு வழங்கும் திட்டத்தில், இளைஞர்களைத் தொழில்முனைவோராக்கும் முயற்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்கு வங்கிக்கடன் வசதியையும் செய்துதர திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தமிழகம் முழுவதும் 73 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் இணைப்புகள் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து வழங்கப்படும் சான்றுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வழங் குதல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் கூடுதலாக, ஆதார் பதிவுக்கான வசதியையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது தனியார் இணைய சேவை நிறு வனங்களுக்குப் போட்டியாக அரசு கேபிள் டிவி நிறுவனமும் பொது மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் இறங்கியுள் ளது. இதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி வெளி யிட்டு, தனியாரான ‘வோடபோன்’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உயர்நிலை இணைப்பைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்குகிறது.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் அரசு கேபிள் டிவியின் இணைய இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைக்கும் முன்னரே, நாங்கள் இதற்கான பணிகளில் இறங்கி, ஆயிரத்து 300 இணைப்புகளைக் கைவசம் வைத்திருந்தோம். இதற் கான தொலைத்தொடர்பு அனு மதியும் முறையாக பெறப்பட்டுள் ளது.
முதலில், அரசு கேபிள் நிறுவன ஆபரேட்டர்கள் மூலம் இத்திட்டத் தைச் செயல்படுத்த முயற்சி எடுத் தோம்.
அவர்கள் முதலில் இத்திட் டத்துக்கான பைபர் ஆப்டிக்கல் கேபிள், இணைய இணைப்பை பிரித்தளிக்கும் தளவாடப் பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
ஆனால், ஆபரேட்டரின் அலுவ லகம் வரையிலான இணைப்பை அரசு கேபிள் டிவி நிறுவனமே சொந்த செலவில் வழங்கும் என தெரிவித்திருந்தோம். அதன்படி 32 பேர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்து, பொதுமக்களுக்கு இணையதள இணைப்புகளை வழங்கினர்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால், திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் அரசு பொறுப்பேற்றதும், பணிகளைத் தொடங்கினோம். தொடர் முதலீடு, ஆட்கள் நியமனம் போன்றவற்றால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்தே, தொழில் முனைவோராக முயற்சிக்கும் இளை ஞர்கள் மூலம் இத் திட்டத்தைத் செயல்படுத்த முடி வெடுத்தோம். தற்போது இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது டன், தொழில்முனைவோர் மேம் பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கைகோர்த்துள் ளோம்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடும் செய்ய முடிவெடுத்துள்ளோம். இத்திட்டத் தில் இணைபவருக்கு பொதுமக் களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகையில் 46 சதவீதம் வழங்கப்படும்.
தற்போது இத்திட்டத்தில் சேர 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் நாங்கள் பேசி வரு கிறோம். மத்திய அரசின் வட்டார அளவிலான இணையதள திட்டத் தைத் தமிழக அரசு செயல்படுத்தும் என முதல்வர் ஏற்கெனவே கடந்த ஆண்டு அறிவித் திருந்தார் . அத்திட்டத்துக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதற்கு முன் னோடியாக, தற்போது தமிழக அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
திட்டத்தில் இணையவும், இணைப்புக்காக வும், பழுது தொடர்பான தகவல் களுக்கும் ‘18004252911’ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணைப்பு பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் கட்டணம் செலுத் தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தைப் பொறுத்தவரையில், மாதம் ரூ.299 முதல் ரூ.1,349 மாத கட்டண அடிப்ப டையில், இணைய வேகத்துக்கு ஏற்றவகையில் திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. இக்கட்டணம் தவிர, கூடுதல் வரிகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்பதால் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இணையதள இணைப்பு குறித்து, கேபிள்டிவி தொழில்நுட் பப் பிரிவு நிபுணர் கூறும்போது,
‘‘அரசு இணையதள இணைப்பைப் பொறுத்தவரை, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
வாடிக்கையாளர்களின் வீட்டு இணைப்பில் உள்ள தொ ழில்நுட்ப கோளாறுகளை, இங்கு இருந்தபடியே சீரமைக்க முடியும். தற்போது அதற்குத் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இணைப்பு அறுபட்டிருந்தால் மட்டுமே, வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதி முகவரை அணுக வேண்டிவரும்’’ என்றார்.
கி.கணேஷ்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 31.10.2016


Sunday, October 30, 2016

பெண்களுக்கு - சர்க்கரை நோய்

பெண்களுக்கு - சர்க்கரை நோய் - என்ன செய்ய வேண்டும்?
இயந்திரமயமான உலகமே பல்வேறு வகையான வியாதிகள் வருவதற்கு காரணமாகிறது. அதில் முக்கியமானது சர்க்கரை வியாதி.
இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள், நடுத்தர வயதினர் என்று எல்லா வயதினருமே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்கள்தான் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். ஏனெனில், இந்நோய் தாயை மட்டுமின்றி, பிறக்கும் குழந்தையையும் பாதிக்கிறது.
கர்ப்பகால சர்க்கரை நோய், உலக அளவில் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் மக்களுக்கு ஏற்படுகிறது.
கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக தாக்கும் வாய்ப்புள்ளவர்கள் யார் தெரியுமா?
1. 30 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள்
2. குழந்தை எடை அதிகமாக இருத்தல்
3. இதற்கு முன்னால் பிறந்த குழந்தையின் எடை 4.1 கிலோ கிராமை விட அதிகமாக இருத்தல்
4. தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுதல்
5. கர்ப்பம் தரிக்கும் முன் தாயின் எடை அதிகமாக இருத்தல்
6. தாய், தந்தை மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு சர்க்கரை நோய் இருத்தல்
7. மருத்துவரின் முதல் சந்திப்பிலே, சிறுநீரில் சர்க்கரை இருத்தல்
8. சினைப்பையில் நீர் கட்டி மற்றும் வளர்சிதை பரும வியாதி ரத்தகொதிப்பு நோய் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல்
9. அதிக முறை கர்ப்பம் தரித்தல்
மேலே சொல்லப்பட்ட பிரிவில் எந்த வகையில் நீங்கள் இருந்தாலும், மருத்துவரை அணுகி, அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக திருமணம் ஆனவுடன் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை. எனவே திருமணத்திற்கு முன்பு உடல் பருமன் இல்லாத பெண்கள், திருமணத்திற்கு பிறகும் உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பின்னும் உடல் எடை அதிகரித்து விட்டால், உடல் எடையை குறைத்துவிட்டு கர்ப்பம் தரிக்க வழிவகுக்க வேண்டும்.
திருமணத்திற்கு பின் பெண்கள் பாத்திரம் கழுவுதல், வீடு கூட்டுதல், சின்ன சின்ன வீட்டு வேலைகளை யாருடைய உதவியும் இல்லாமல் செய்ய வேண்டும்.
தாமாகவே வீட்டு வேலை பார்த்தால் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க முடியும்.
அதேபோல், திருமணத்திற்கு முன்னும், பின்னும் மற்றும் கர்ப்பம் தரிக்கும் முன்னும், பின்னும், உடற்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
எனவே நம் நாட்டு பெண்கள் கவனிக்க வேண்டியது தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, கர்ப்ப கால சர்க்கரை நோய் வருவதை தடுப்பது மட்டுமின்றி, நீங்கள் அரும்பாடுபட்டு பெற்றெடுக்கும் உங்கள் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். பெருகி வரும் கர்ப்பக்கால சர்க்கரை நோய், கர்ப்ப காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
விளைவுகள் என்ன?
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், கர்ப்பிணிகளுக்கு ரத்தகொதிப்பு, கருச்சிதைவு, மூச்சு முட்டல், கால் வீக்கம், தலைவலி போன்ற பிரச்னைகளும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
சில நேரங்களில் சிறுநீரக தொற்று மற்றும் பிறப்புறுப்பில் கிருமிகள், வெள்ளைப்படுதல், அரிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தைக்கு பிறவி நோய்களும், தண்டுவடம் மற்றும் சில வகை இருதய மற்றும் நரம்பு கோளாறுகளும் ஏற் படும் வாய்ப்பு உண்டு.
கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள் அதிக எடையுள்ள குழந்தைகளை சுமப்பதால் பிரசவ கோளாறுகள் பிரசவத்தின்போது ஏற்பட வாய்ப்பு உண்டு.
சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு.
பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறைகள் குழந்தையை வெளிக் கொணர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சர்க்கரை நோயை அறியலாம்
மிகச்சிறிய ரத்த பரிசோதனை மூலம் கர்ப்ப கால சர்க்கரை நோயை அறியலாம்.
*50 கிராம் குளுக்கோஸை நீரில் கலந்து அருந்திவிட்டு, ஒருமணி நேரத்தில் ரத்த சர்க்கரை அளவை கணக்கிட வேண்டும்.
* 130 மி.கி., மேல் இருந்தால், கர்ப்ப கால ரத்தசர்க்கரை அளவு சர்க்கரை நோய் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
* 'ஓரல் ஜி.டி.டி.' குளுக்கோஸ் தாங்கும் பரிசோதனை செய்வதன் மூலமும் கர்ப்ப கால சர்க்கரை நோயை அறியலாம்.
பாதிக்கப்பட்ட தாய்மார்கள் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ள உணவையும் உட்கொள்ள வேண்டும்.
காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக்கொண்டால் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வராது.
பால், பாதாம் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு மிகச்சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது வயிற்று பிரச்னை வராமல் பாதுகாக்கும்.
முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தியால் தகுந்த உணவுகள் எடுக்க முடியாமல் போகலாம். அப்போது சர்க்கரை குறை நிலை ஏற்படாமல் இருக்க பழச்சாறு, கஞ்சி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
1. வயிறு நிறைய சாப்பிடாமல் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக அளவு குறைவாக 5 வேளை அல்லது 6 வேளை சாப்பிடலாம்.
2. பட்டினியாக கர்ப்ப கால சர்க்கரை நோயாளிகள் இருந்தால் சர்க்கரை அளவு குறையும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இரவு உணவு எடுக்காமல் இருக்கக்கூடாது.
3. இனிப்பு சுவைக்காக செயற்கை சர்க்கரையை பயன்படுத்தக்கூடாது. அதில் உள்ள வேதிப்பொருள் குழந்தையை பாதிக்கலாம்.
டாக்டர் சுஜாதா சங்குமணி, மகப்பேறு நிபுணர்மதுரை,
போன் : 0452- 267 5411
நன்றி : தினமலர் நாளிதழ் - 31.10.201