disalbe Right click

Monday, October 10, 2016

நொறுங்கத் தின்றால் 100 வயது


நொறுங்கத் தின்றால் 100 வயது - என்ன செய்ய வேண்டும்?

பசித்துப் புசி, ருசித்துப் புசி’என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை. டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனை பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.

செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருட்கள், வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் தொடங்கிவிடுகின்றன. 

உணவை, உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியம். சரியான தொடக்கம், பாதி வெற்றி என்பதைப் போல, சரியாக மென்று விழுங்கினாலே, செரிமானப் பணியில் 50 சதவிகிதம் முடிந்தது போலத்தான்.

உணவு உண்ணும் முறை

சிறிய சிறிய விள்ளல்களாக உண்ண வேண்டும்.

நிதானமாகச் சீராக மெல்ல வேண்டும்.

வாயில் உள்ள உணவு உமிழ்நீரோடு கலந்து, அதன் தன்மையை இழந்த பிறகே விழுங்க வேண்டும். ஒரு வாய் உணவை 32 முறை மெல்ல வேண்டும் எனக் கூறுவது ஒரு உதாரணம்தான். அதன் அர்த்தம், நன்றாக உணவு கூழாகும் வரை மெல்ல வேண்டும் என்பதே.

ஒரு வாய் உணவை முழுதாக மென்று விழுங்கிய பிறகே, அடுத்த வாய் உணவை உண்ண வேண்டும்.

பேசாமல் உணவு உண்பது நல்லது.

சரியாக மென்று உண்ணாவிட்டால்…

சரியாக மெல்லப்படாததால், இரைப்பைக்குள் சென்ற உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்காது.

அதிக அளவு உணவை உட்கொள்ளும் நிலை ஏற்படும்.

பற்களுக்குப் போதிய செயல்பாடு இல்லாமல், வலுவற்றுப்போகும்.

மென்று உண்பதன் பலன்கள்

சராசரியாக நாம் உண்ண தொடங்கியதில் இருந்து 20 நிமிடங்களில் நம் மூளைக்கு நம் வயிறு நிறைந்துவிட்டது என்ற தகவல் செல்லும். நாம் மெதுவாக மென்று உண்ணும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். இதனால், உடல் எடைக் குறைவதோடு, உடல் பருமன் 
ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்
நம் உமிழ்நீரில் உள்ள என்சைம், கொழுப்பை உடைக்கக்கூடியது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, நன்கு செரிமானம் ஆகும்.

உணவு சிறிய பகுதிகளாக மாறுவதால் சீக்கிரமாக ஜீரணமாகிவிடுகிறது.

உணவை மெல்லும்போது, பற்களுக்கு அது நல்ல பயிற்சியாக உள்ளது. மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர், வாயில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.

உமிழ்நீர் நம் உணவில் உள்ள பச்சையம் (Starch), ஃப்ரக்டோஸ் (Fructose), மற்றும் குளுக்கோஸ் (Glucose) ஆகியவற்றைப் பிரித்து செரிமானத்துக்கு ஏற்ப மாற்றுகிறது.

மெதுவாக மென்று உண்பதால், உணவின் ருசியை உணர்ந்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், மனதுக்கு முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

‘நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு’ என்ற நம் மூத்தோர் வாக்கில் பொய் ஏதுமில்லை. பொறுமையாக மென்று உண்டால் ஆரோக்கிய வாழ்வு அனைவருக்குமே நிச்சயம்.

சுவிங்கம் மெல்வது நல்லதா?

சூயிங்கம் மெல்வதால் பற்களும் ஈறுகளும் வலுவாகின்றன என்று சொல்வார்கள். அதில் உண்மை இல்லை. அடிக்கடி சூயிங்கம் மெல்வதும் உடலுக்குத் தீங்கானதுதான். 

நாம் அதை மெல்ல ஆரம்பித்ததும், மூளைக்கு உணவு உள்ளே வருகிறது என்ற தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், செரிமானத்துக்குத் தேவையான ரசாயனங்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. 

ஆனால், உள்ளே உணவு போகாத நிலையில் அது வயிற்றில், குடலில் புண்களை ஏற்படுத்துகிறது. மேலும், தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் வைத்து மெல்வதால், பல்வலி ஏற்படவும், தாடையில் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி : டாக்டர் விகடன் - 01.10.2016

No comments:

Post a Comment