disalbe Right click

Saturday, October 15, 2016

வீட்டு மனைகள் வாங்கலாமா


வீட்டு மனைகள் வாங்கலாமா - என்ன செய்ய  வேண்டும்?

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை கோடியைத் தாண்டிவிட்டது. சிறுநகரங்களிலோ அவை லட்சங்கள். 

இந்நிலையில் வீட்டு மனைகளை முதலீட்டுக்காக வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளையே நாடுகிறார்கள்.

நடுத்தர மக்கள் கிராமப் பஞ்சாயத்துக்குட்பட்ட எல்லையில் வீட்டு மனைகளை வாங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ முதலீட்டுக் கோணத்தில் கிராமப் புறங்களில் மனைகளை வாங்குவதும் உண்டு. 

எல்லாம் சரிதான், இப்படி வாங்கப்படும் மனைகள் அரசின் அனுமதி பெற்றதா என்பதைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

விளை நிலங்கள் மனைகளாக்கப்படுவதைத் தடுக்க சமீபத்தில் உயர் நீதி மன்றம் முக்கியமான உத்தரவைப் பிறத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள்தான் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றன. 

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இப்படி ஒரு அதிகாரம் கிடையவே கிடையாது.

குறைந்த விலையில் மனைகளை வாங்கும் பலரும் இந்த விஷயத்தை சரிவர கவனிப்பதில்லை. பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி மனைகளை விற்பவர்களும் உண்டு. பின்னர் அங்கீகாரம் வாங்கிக்கொள்ளலாம் என்றும்கூடச் சொல்லுவார்கள்.

சி.எம்.டி.ஏ., டிடிசிபி இந்த இரு அமைப்புகளின் அங்கீகாரங்களைப் பெறாமல் விற்கப்படும் மனைகளை வாங்கினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

வாங்கிய மனை, மனையாகவே இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த மனையில் வீடு கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போதுதான் பிரச்சினைகள் தெரிய வரும். 

முறையான அங்கீகாரம் இல்லாத மனையில் கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்காது. அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மனையில் வீடு கட்ட வங்கிகளும் வீட்டுக் கடன் அளிப்பதில்லை. 

பின்னாளில் பிரச்சினை வரலாம் என்ற கோணத்தில் வங்கிகள் கடன் வழங்காமல் பின்வாங்கிவிடும்.

பஞ்சாயத்து மனையில் அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள் ஏதேனும் வருகின்றனவா, சாலை விரிவாக்கம் செய்யப்படக்கூடிய பகுதியா என்பதெல்லாம் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அமைப்புகளுக்குத்தான் தெரியும். 

எனவேதான் இந்த அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு இவ்வளவு மதிப்பும் கொடுக்கப்படுகிறது. அதனால் பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி விற்கப்படும் மனைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.10.2016

No comments:

Post a Comment