disalbe Right click

Wednesday, October 19, 2016

கோவில் இல்லாத ஊரில்


கோவில் இல்லாத ஊரில் ..... என்ன செய்ய வேண்டும்?

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? 

இதுபற்றிச் சொல்கிறார், டாக்டர்.எஸ்.சாந்தினிபீ… 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர்.

மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன. 

இவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அள்ளித்தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே. 

அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கை பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்போர்களிடம் கொடுக்கப் பட்டன. கைம்மாறாக, ஆடுமேய்ப்பவர்கள் நாள்தோறும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு விளக்குக்கு 96 ஆடுகள் எனில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு எத்தனை ஆடுகள் விடப்பட்டிருக்கும்! இதன் மூலம் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்வாதாரம் பெற்றனர். 

கோயிலுக்கு வரும் நெய், நெல், பழம், காய்கறி, பூமாலை மற்றும் அபிஷேகப் பொருட்களை அளக்கும் மற்றும் எண்ணும் பணியினாலும் எண்ணற்றோர் பலன் அடைந்தனர். நெல்லைக் குத்தவும், தரம் பிரிக்கவும் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர். கோயில் நந்தவனங்களைப் பராமரிக்க, பூக்களைப் பறிக்க, மலர் மாலைகளைத் தொடுக்க ஒரு சிறு தொழில்கூடம்போல பலரும் செயல்பட்டனர். 

அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு மற்றும் அர்த்த ஜாமம் என பல வேளை பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தமையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்தன. 

ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு வகைகள் கோயிலுக்கு உள்ளே சமைக்கப்பட்டன. இத்துடன், இலையில் எத்தனை வகை காய், கூட்டு, வெற்றிலை, பாக்கு இடம்பெற வேண்டும் என்பதை தானம் வழங்கியவரே நிர்ணயித்தார். இவை அனைத்தும் சேர்ந்ததே ஒரு தளிகை எனப்படும். 

இப்படி ஒரே ஒரு வேளைக்காக ஆயிரக்கணக்கான தளிகைகள் தயாரிக்கப்பட்டதாக ரங்க கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

கடவுளுக்கான துணிகளை நெய்பவர்கள், ஆபரணங்களைச் செய்பவர்கள், ஆடையில் விலையுர்ந்த கற்களைப் பதிப்பவர்கள், துப்பரவாளர்கள் என பலர் தங்கள் பணிகளினால் பயன்பெற்று வந்தார்கள்.
கோயில் நிலங்களில் வேளாண்மை நடந்தது. 

தானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்ப்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் என தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றி பயன் பெற்றனர். 

கோயில்களின் நாற்புற வாசல்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் உள்ள பானைகளில் எந்நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கவும், அருந்துவதற்கு எடுத்துக் கொடுக்கும் பணிகளிலும் பலர் அமர்த்தப்பட்டனர். 

உதாரணமாக, தஞ்சை பெரிய கோயிலை பேரரசன் ராஜராஜன் கட்டிய புதிதில் 900 பேரை பணி அமர்த்தியதாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பணியாற்றியவர் களுக்கு என அரசு சார்பில் அளிக்கப்பட்ட குடியிருப்புகளின் விலாசம் மற்றும் ஊதிய விவரமும் அங்குள்ள கல்வெட்டுகளில் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவ்வளவு பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பினை தந்த வேறு ஓர் அமைப்பு அக்காலத்தில் இருந்திருக்குமா என்பது ஐயமே! 

தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடன் உதவி செய்து நவீன கால வங்கிகள்போல் செயல் பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கை சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காக கோயில் சொத்து பயன்பட்டது. 

மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாக தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்து கல்வெட்டுகளில் `பொதுமக்கள் கால தோஷம் காரணமாக கோயிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனக் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயில்களின் பரந்த இடம் கல்வி நிலையங்களாக செயல்பட்டன. பாகூர், திருபுவனி, எண்ணாயிரம், திருமுக்கூடல், திருவாடுதுறை மற்றும் திருவற்றியூர் ஆகிய ஆறு இடங்களில் உயர் கல்விக்கூடங்கள் இருந்தது பற்றியும், அதன் மாணவர்கள், ஆசிரியர்கள், இவர்களது சம்பள விவரம் மற்றும் போதிக்கப்பட்ட பாட விவரங்கள் என அனைத்தும் அந்த ஆறு இடங்களில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

கோயில்கள் விழாக்காலங் களில் கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் செயல்பட்டன. அதே போல, போக்கற்ற வர்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் உணவும் உறைவிடமும் தரும் இடமாகவும் திகழ்ந்தன. தன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் கோயில்கள் வாழ்வளித்துள்ளன. 

இந்நிலைக்கு ஆளான மக்கள் தம்மை கோயிலுக்கு விற்றுக்கொண்டு அடிமையாகிவிடும் வழக்கம் இருந்துள்ளது. 

இதில் கிடைக்கும் தொகையில் அம்மக்கள் தாம் பட்ட கடனை அடைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கோயிலுக்குப் பணி செய்து கிடப்பார்கள். திருபுவனியின் கல்வெட்டுகளில் மூன்று தலைமுறைகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 உறுப் பினர்கள் தங்களை கோயிலுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்ட செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

தற்போது கடன் சுமையால் நடைபெறும் தற்கொலைகள் அக்காலத்தில் நடைபெறாமல் காத்துள்ளன கோயில்கள். 

கோயில் அமையப்பெற்ற ஊர் மக்கள் மட்டுமின்றி, அவ்வூரைச் சுற்றியிருந்த மக்களும் அந்தக் கோயிலால் பயன்பெற்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படாமலும் கோயில்கள் உதவின. 

இப்படிப் பன்முகப் பயனாக செயல்பட்டமை தான்… ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழி ஏற்படக் காரணம்.

ஆலயங்கள் போற்றுவோம்!

நன்றி : அவள்விகடன் - 01.11.2016

No comments:

Post a Comment