கர்ப்பப்பையை பாதிக்கும் பீகாஸ் சிண்ட்ரோம் - என்ன செய்ய வேண்டும்?
பெண்களின் பருவ வயதுக்குப் பின் அவர்களின் கர்ப்பப்பையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களுக்குத் துணைபுரிவது, பூப்படைந்தவுடன் அவர்களது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
ஆனால், இந்த ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்க வேண்டும். அளவு மாறுபட்டால், பல பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற ஹார்மோன் கோளாறுகளால் இளம் பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
ஹார்மோன் கோளாறால் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியக் குறைபாடு, பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம். மார்பகப் புற்று, கர்ப்பப்பைவாய்ப் புற்று, தைராய்டு பிரச்னைகள், இரும்புச்சத்துக் குறைபாடு எனப் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளின் வரிசையில், அடுத்த சவாலாக வந்து நிற்பதுதான் இந்த பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம்.
இது எந்த இளம்பெண்ணுக்கு வேண்டுமானாலும் வரலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பி.சி.ஓ.எஸ் பாதிப்பு உள்ளது.
பெண்களின் கர்பப்பையில் உருவாகும் சிறு சிறு கட்டிகளே பி.சி.ஓ.எஸ் சிண்ட்ரோம் என்னும் குறைபாடு. (Poly Cystic Ovary Syndrome - PCOS).
என்னென்ன பாதிப்புகள்?
பூப்படைந்த பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும். ஆண்களுக்குச் சுரக்கும் ஆன்ட்ரஜன் ஹார்மோன்கள் மிகக் குறைந்த அளவிலேயே பெண்களுக்குச் சுரக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் பெண்களுக்கு ஆன்ட்ரஜன் சுரப்பு சற்று அதிகமாகிவிடும்.
இதனால் ஆண்களைப்போல கை, கால், முகத்தில் முடி முளைக்கும். கன்னங்களின் ஓரம், மூக்கின் கீழ் மீசைபோல மெலிதான 'பூனை முடி' ஆகியவை முளைத்தால், ஹார்மோன் குறைபாடு உள்ளது என அர்த்தம்.
இன்சுலின் ஹார்மோன் கணையத்தில் சுரக்கும். பி.சி.ஓ.எஸ் குறைபாட்டால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால், வழக்கத்தைவிட இன்சுலின் சுரப்பு அதிகமாகிவிடும். இதனால் பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்குச் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
திடீரென உடல் எடை கூடும். மனஅழுத்தம், முகத்தில் எண்ணெய்ப் பிசுக்குள்ள சிறுசிறு கட்டிகள் ஆகியவை ஏற்படும். திடீரென ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சீரற்ற மாதவிலக்கு, அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம்
என்ன காரணம்?
பி.சி.ஓ.எஸ் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அலோபதி மருத்துவத்தில் கண்டறியப்படவில்லை. இது பரம்பரை நோயாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
என்ன சிகிச்சை?
இதனை முற்றிலுமாகக் குணமாக்க மருந்துகள், சிகிச்சைகள் இல்லை. இந்தக் குறைபாடு உள்ளதா, கர்பப்பையில் கட்டிகள் உள்ளனவா என அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை மூலமாக மருத்துவர்களால் கண்டறியப்படும். பின்னர், அதற்குண்டான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.
புகை / மதுப் பழக்கங்களைக் கைவிடுதல், முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றுதல், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்!
வைட்டமின் ஏ, டி, ஈ, சி, பி ஆகியவை பி.சி.ஓ.எஸ் குறைபாடுடைய பெண்களுக்கு மிகவும் அவசியம். அன்றாட உணவில் இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ-
கேரட், பசலைக் கீரை, முலாம்பழம், முட்டை, அவகேடோ, சால்மன் மீன்.
வைட்டமின் டி-
புரோகோலி, காளான், சூரிய ஒளியில் நிற்பது.
வைட்டமின் சி-
பேரீச்சை, உலர் திராட்சை, தக்காளி, கொய்யா, ஆரஞ்சுப் பழம்.
வைட்டமின் பி -
அவகேடோ, மீன், இறைச்சி, முட்டை, ஆஸ்பராகஸ், பருப்பு வகைகள்.
வைட்டமின் ஈ -
குடமிளகாய், நட்ஸ், வேர்க்கடலை, கீரைகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள்!
பால்
பெண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாட்டை கால்சியம் தூண்டிவிடும். இதனால் முகத்திலும் உடலிலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்தக் குறைபாடு உள்ள பெண்கள் முடிந்தவரை பால் மற்றும் பால் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
சோயா
சோயாவில் அதிகப் புரதம் உள்ளது. கருமுட்டை உருவாகுவதின் வேகத்தைக் குறைக்கும். எனவே, கர்ப்பக்காலத்தில் சோயா பாலைத் தவிர்க்க வேண்டும்.
அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள்
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடுவது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' என்னும் அளவுகோல்.
அரிசி சாதம், தோசை, இட்லி, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் உள்ள மாவுச்சத்து காரணமாக, கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சாச்சுரேட்டட் கொழுப்பு
இறைச்சி மற்றும் பாலில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்வது தடைப்படும்.
டரான்ஸ் ஃபேட்
நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பாக மாறுவதே டிரான்ஸ் ஃபேட். சமையலில், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, உடல் பருமன், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பி.சி.ஓ.எஸ் குறைபாடு உள்ள பெண்களுக்கு, இந்த நோய்கள் வர இரு மடங்கு அதிகம் என்பதால் ஹோட்டல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், எண்ணெய் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
நன்றி : விகடன் செய்திகள் – 21.10.2016
No comments:
Post a Comment