ஆன்லைன் பர்சேஸ் - என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் பர்ச்சேஸ்… நில்… கவனி… வாங்கு!
ராஜேஷ், சென்னையின் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்றில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இன்னும் திருமணமாகாத இளைஞன் என்பதால், தனி வீட்டில் வாசம். பேஸ்ட், பிரஷ் தொடங்கி காய்கறி, கம்ப்யூட்டர் வரை ஆன்லைன் ஷாப்பிங் அவருக்கு கைவந்த கலை.
நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் ஷாப்பிங் வாழ்க்கையில், ஆசைக்காக ஒரு செல்போன் வாங்கப் போய் அவர் பட்டபாடு… செல்போன் மாடல், விலை எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தவர் செய்த ஒரே தவறு, அதை பெயர் தெரியாத ஒரு விற்பனைத் தளத்தில் ஆர்டர் செய்ததுதான்.
செல்போனுக்காக ஆர்வமாகக் காத்திருந்தவருக்கு பார்சலில் வந்து சேர்ந்தது ஒரு செங்கல். அதிர்ந்து போனவர் கஸ்டமர்கேர்க்கு போன் போட்டால், பதிலாக எதிர்முனையில் கிடைத்தது வெறும் ‘பீப்’ ஒலி.
இதில் கொசுறாக அவருடைய கிரெடிட் கார்டு நம்பரை அந்த ஆன்லைன் வெப்சைட் மூலமாக மனப்பாடம் செய்த மற்றொரு வெப்சைட், கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாயை அவருக்கே தெரியாமல் தீட்டிவிட்டது.
என்ன செய்வதென்றே தெரியாமல் கஸ்டமர் கேருக்கும், கிரெடிட் கார்டு புகார் தரும் நம்பருக்கும் ஓயாமல் அழைத்து நொந்துபோன ராஜேஷ் இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்.
ஆனால் ராஜேஷைப் போல நம் எல்லோராலும் ஆன்லைன் பர்ச்சேஸை முழுவதுமாகத் தவிர்க்க இயலாது. உலக அளவில் மூன்று கோடி பேர் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதை பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி இருக்கையில் ஆன்லைன் பர்ச்சேஸை நம்மால் மட்டும் எப்படி தவிர்க்க முடியும்..? ஆனால், பர்ச்சேஸ் செய்யும்போது எதையெல்லாம் வாங்கலாம், எதையெல்லாம் வாங்கக்கூடாது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனப் பார்ப்போம்.
வெப்சைட்டின் நம்பகத்தன்மை!
உண்மையில் ஐந்து நிமிடத்தைக்கூட வேஸ்ட் செய்ய முடியாத டெக்னாலஜி வளர்ச்சி அடைந்துள்ள இந்த வைரல் உலகில், வெளியில் சென்று பொருள் வாங்க முடியாத பலருக்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான் தக்க சமயத்தில் கைகொடுக்கிறது. ஆனால், ஒரு பெட்டிக் கடையில்கூட பேரம் பேசி பொருள் வாங்கும் நாம், ஆன்லைன் தளங்களில் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு பொருள் கிடைத்தால் போதும் என க்ளிக் செய்து விடுகிறோம்.
அந்தத் தளத்தின் உண்மைத் தன்மை, இதுவரை பொருட்கள் வாங்கியவர் களின் கருத்துக்கள், பொருளின் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் உலகுக்குள் கொட்டிக் கிடக்கும் வெப்சைட்கள் கணக்கிலடங்காதவை.
அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம்ரோடு என்று ஆடைகள், புத்தகங்கள், கேட்ஜெட் என்னும் எலெக்ட்ரானிக் அயிட்டம்கள் தொடங்கி அரிசி, பருப்பு, கேக் என்று உணவுப் பொருட்கள் வரை விற்கும் தளங்களும் எக்கச்சக்கம். அதில் நியாயமான விலை, நம்பகத்தன்மை கொண்ட வெப்சைட்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்கள் பொருள், பத்திரமாக உங்கள் கைகளுக்கு வந்துசேரும்.
கவனிக்கவேண்டிய கஸ்டமர் ரெவியூ!
நீங்கள் ஒரு புடவையோ, டீ-சர்ட்டோ அழகாக இருக்கிறது. விலையும் கம்மி என்று முடிவு செய்து ஆர்டர் செய்திருப்பீர்கள். ஆனால், கைகளுக்கு வந்து சேர்வதோ நிறம் மங்கிய, இல்லையெனில் வேறு டிசைன், வேறு கலரில் என்று உங்களை கொலைவெறிக்கு உள்ளாக்கும் ஒரு ஆடையாக இருக்கும்.
இந்த பிரச்னைகளைத் தவிர்க்க, ஆடைகளை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும்போது அதிக அளவிலான கஸ்டமர் ரெவியூக்கள் பெற்ற தளத்தினைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஆடையின் நிறம், சைஸ் ஆகியவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்துகொள்ளுங்கள். கூடுமானவரையில் உங்களுக்கு பரிட்சயமான பிராண்ட் துணிகளையே தேர்ந்தெடுங்கள்.
விலை உயர்ந்த பொருட்களைத் தவிர்க்கலாம்!
ஒரு துணிக்கே இவ்வளவு யோசிக்க வேண்டுமென்றால், விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களான செல்போன், டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்க எவ்வளவு யோசிக்க வேண்டும் என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் கம்பேரிசன் வெப்சைட்கள் மூலமாக ஒரு பிராண்டின் விலை மாறுபாடுகள், தர நிர்ணயம் போன்றவற்றில் கவனமாக வையுங்கள்.
45 இன்ச் டிவிக்கு பதில், 16 இன்ச் டிவியையோ, பிராண்ட் செல்போ னுக்கு பதில் சைனா மேட் செல்போன் ஒன்றையோ ஆன்லைன் டீலர் உங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டால் அதை திருப்பி அனுப்பி, அவர்களிடமிருந்து ரீஃபண்ட் பெறுவதற்குள் நீங்கள் கடையிலேயே நேரடியாக அதை வாங்கியிருக்கலாம் என்று தோன்றிவிடும்.
பெரும்பாலும் விலையுயர்ந்த தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், முக்கியமாக உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்ப்பது நலம்.
ஏனெனில், தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஆன்லைன் பர்ச்சேஸில் ஒருமுறை விற்பனை செய்துவிட்டால், 15 நாட்கள் கெடுக்குள் திரும்பி மாற்றிக்கொள்ளமுடியும் என்கிற கெடுவெல்லாம் பெரும்பாலான விற்பனைத் தளங்களில் கிடையாது.
அதேபோன்று ஆன்லை னில் விற்பனையாகும் பிராண்ட் இல்லாத எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏனெனில், ஒரு சிறிய கோளாறு என்றால்கூட நீங்கள் வீதி வீதியாக சர்வீஸ் ஷோருமைத் தேடி அலைய வேண்டி வரும்.
உணவுப் பொருட்கள், உஷார்!
உணவுப் பொருட்களை வாங்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் வாங்குங்கள். அடிக்கடி வாங்கிப் பழகிய வெப்சைட் என்றால் பிரச்னை இல்லை.
புதிதாக வாங்கத் தொடங்கும்போது கூடியவரை கூகுள் சஜஷனில் முன்னிலையில் உள்ள வெப்சைட்டைத் தேர்ந்தெடுங்கள். தேதி முடிவடைந்த பொருட்களைக்கூட வேறு கவர்களில் மாற்றி விற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆன்லைன் உணவுப் பொருள் ஷாப்பிங்கில் அதிகம்.
லெக்ட்ரானிக் பொருட்கள், எச்சரிக்கை!
எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில், நம்பகமான தளத்தில் ஆஃபர்களைக் கணக்கிட்டு வாங்குங்கள். ஒரு நல்ல, தரமான பொருளுக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. அதை விட்டுவிட்டு ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தில் இரண்டே நாளில் பொருள் கைக்கு வந்துவிட வேண்டும் என்று ஓட்டை, உடைசல் செல்போனையோ, வாரண்டி இல்லாத டிவி, மிக்ஸியையோ வாங்கிவிட்டால் அவதிப்படப் போவது நீங்கள்தான். அதுவும்,
இஎம்ஐ போட்டு கடனில் வாங்கும் பொருட்களில் தரம் இல்லையென்றால், அதிக விலை கொடுத்தும் வேஸ்ட்தான். இவற்றையெல்லாம் தாண்டி குறைந்த விலையில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள், சார்ஜர், பர்னிச்சர் என்று எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் சென்று ஒன்றுக்கு நான்கு பொருட்களின் விலை மாறுபாடுகளை ஆராய்ந்து வாங்குவதே நல்லது.
எனினும், ஆன்லைன் ஷாப்பிங்கில்தான் இவற்றையெல்லாம் வாங்குவேன் என்பவர்கள் பொருள் கைக்கு கிடைத்த அன்றே அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் வாங்கிய இணைய தளத்தில் புகாரினைப் பதிவு செய்துவிடுங்கள்.
அதிக அளவிலான பயனாளர்களின் வருகை இருக்கும் ஆன்லைன் வெப்சைட்களையே பொருட்கள் வாங்கத் தேர்ந்தெடுங்கள். ரீஃபண்ட் பாலிசிகளைத் தெளிவாக மெயின்டெய்ன் செய்யும் தளங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குங்கள். விலை அதிகமாக இருந்தாலும் தரமான, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய பிராண்ட் பொருட்களையேத் தேர்ந்தெடுங்கள்.
பணம் பத்திரம்!
உங்கள் சொந்தக் கணினி இல்லாமல், வெளியில், அலுவலகக் கணினிகளில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வைரஸோ, மால்வேரோ உள்நுழைந்து உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைத் திருடிவிடலாம். அதனால், ஹைப்பர் லிங்கில் தேவை இல்லாத இணையப் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும் தளங்களில் பர்ச்சேஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஜிகினா ஆஃபர்களை நம்பாதீர்!
முக்கியமாக, ஆன்லைன் ஜிகினா வேலைகளை நம்பி பொருட்களை வாங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது ஆபத்து. முடிந்தவரை, ‘இன்றே கடைசி’, ‘விசாலமான ஹோட்டல் அறை 750 ரூபாய் மட்டுமே’ போன்ற ஆஃபர்களை தவிர்த்துவிடுங்கள். ஹோட்டல் ஆஃபர்களை ஏதோ ஒரு தளத்தில் புக் செய்துவிட்டு, புது ஊர், புது இடத்தில் சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டால் ரொம்பக் கஷ்டம்.
கடைசியாக ஒன்றே ஒன்று… இது ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட உலகம். முடிந்தவரை எச்சரிக்கை உணர்வோடு பர்ச்சேஸ் செய்வது மட்டுமே உங்கள் பணத்துக்கான பாதுகாப்பாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------பா.விஜயலட்சுமி
நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016
No comments:
Post a Comment