தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து
என்ன செய்ய வேண்டும்?
தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மக்கள் தொகை 5 கோடிக்கு மேல் உள்ளது. தற்போது தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.
கடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6 ஆயிரத்து 36 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வெளிமாநில சட்டக் கல்லூரி களில் சேர்ந்து படிக்கின்றனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2014 ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதை தடுக்கும் விதமாக ஒரு சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் கொண்டு வந்தது. இந்த தடைச் சட்டம் கடந்த 2014 செப்டம்பர் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் போதுமான எண்ணிக்கையில் அரசு கல்லூரிகள் இல்லை. இந்தச் சட்டத்தை பொருத்தவரை எத்தனை ஆண்டுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக தெரிவிக்கவில்லை.
அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டியதுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்த இந்தத் தடைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அதை ரத்து செய்கிறோம்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் 37 சட்டக் கல்லூரிகளும், கர்நாடகாவில் 98 சட்டக் கல்லூரிகளும் உள்ளன.
ஆனால், 700 பொறியியல் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 3 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன.
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்று இன்னும் அமலில்தான் உள்ளது.
இதற் காக அந்த அறக்கட்டளை 8 முறை வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே வன்னியர் சங்கத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். சட்டக் கல்லூரி தொடங்குவதற்காக அவர்கள் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் வன்னியர் சங்கம் சார்பில் சட்டக் கல்லூரி தொடங்க அளிக் கப்பட்ட விண்ணப்பத்தை காலதாமத மாக நிராகரித்ததற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரூ. 20 ஆயிரத்தை வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் எத்தனை வழக்கறிஞர்கள் தேவைப்படுவர்? என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார்.
அப்போதுதான் எத்தனை சட்டக்கல்லூரிகள் தேவைப்படும்? தற்போதுள்ள கல்லூரிகள் போதுமான தாக உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும் என உத்தரவிட்டனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.10.2016
No comments:
Post a Comment