disalbe Right click

Saturday, October 8, 2016

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை


தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை - என்ன செய்ய  வேண்டும்?

பத்திரப் பதிவுத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் தற்போது உள்ள நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நாம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் பலவற்றை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

சமீபத்தில் அம்மாநிலம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே பத்திரப் பதிவுகளைக் கணினிப் பதிவேடு (E-Registration) செய்யும் முறை உள்ளது. 

இந்த வசதியானது குத்தகைப் பத்திரம் மற்றும் புதிய குடியிருப்புகளுக்கான விற்பனைப் பதிவுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு உள்ளது.

மேலும் மகாராஷ்டிரம் இந்தியாவில் முதல் முறையாக IGR (Inspector General Of Registration) அழைப்பு மையத்தைப் பத்திரப் பதிவுத்துறைக்காகவே அமைத்துள்ளது. 

தற்போது இந்தச் சேவையானது மத்திய பிரதேசத்திலும், கேரளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் வேலை நேரமானது அனைவரும் எளிதில் அணுகும் முறையில் உள்ளது. 

மும்பை, மும்பை புறநகர் மாவட்டம், தானே, கல்யாண், பன்வால் மற்றும் புனேவில் பதிவுத் துறை அலுவலங்கள் அமைந்துள்ளன. இவ்வலுவகங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், சில அலுவலகங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் உபயோகிக்கப்படும் மென் பொருளானது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இவை அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றவாறு உள்ளன. நாள் ஒன்றுக்கு எவ்வளவு பத்திரம் பதியப்படுகிறது, எவ்வளவு வருமானம் போன்ற தகவல்களை ஆன்லைனில் அத்துறை தினமும் வெளியிடுகிறது. 
மாதம் மற்றும் ஆண்டுக்கான மொத்த வருமானமும் ஆன்லைனில் பதியப்படுகிறது. 

ஆன்லைன் பொதுத் தரவு நுழைவு வசதிகள் பல மாநிலங்களில் உள்ளன. இதன் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எளிதாகிறது. 

மேலும் பதிவுசெய்த பத்திரமானது பதிவுசெய்த அரை மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

தற்போது தமிழ்நாடு, அசல் பத்திரத்தைப் பதிவுசெய்த இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்குகிறது.

மகாராஷ்டிர சாரதி (SARATHI) என்ற சிற்றேடை நிறுவியுள்ளது 

இது ஆவணங்கள் பதிவு,முத்திரைவரி மதிப்பீடு, இ-கட்டணம் (E-PAYMENT), இ-சேவை (E-SERVICE) மற்றும் திருமணப் பதிவு போன்ற முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஸ்கேன் செய்த ஆவணச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுகின்றன. கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்திச் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இது போன்ற ஆன்லைன் வசதி ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளது. 
அங்கு 1999-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. 

ஆனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் certificed copy (பதிவு சார் தகவல்கள்) பெறும் வசதி இல்லை.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் e-GPA என்ற ஆன்லைன் வசதி உள்ளது. 

அங்கு பதிவாகும் பொது அதிகாரப் பத்திரத்தின் தகவல்களை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி உள்ளது. அந்தப் பொது அதிகாரப் பத்திரம் யார் எழுதியது, இப்போது அந்தப் பத்திரம் செல்லுபடியாக உள்ளதா, அந்தப் பொது அதிகாரப் பத்திரம் மூலம் எத்தனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்கள் ஆன்லைன் மூலம் கிடைக்கும்.

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம் போன்ற மாநிலங்களில் பத்திரப் பதிவு செய்யும் நபர்கள் பதிவுசெய்யும் சொத்தின் அனைத்துத் தகவல்களையும் கணினியில் பதிவு செய்த பின்னர் மட்டுமே பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.

குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் சொத்து விற்ற விற்பனைப் பத்திரங்களில் சம்பந்தப்பட்ட சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
இதைப் போன்ற நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: 
வழக்கறிஞர் ஷியாம் சுந்தர்
கேரள அரசின் சட்ட ஆலோசகர்

நன்றி : தி இந்து (தமிழ்) நாளிதழ் - 08.10.2016

No comments:

Post a Comment