டெபிட் கார்டு பாதுகாப்பு - என்ன செய்ய வேண்டும்?
வங்கிகளின், ‘டெபிட் கார்டு’ தகவல்கள் திருடப்பட்டது தொடர்பான செய்திகள்,கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்டு பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்திருப்பது அவசியம்.
டெபிட் கார்டு, ‘பின்’ எண்ணை மாற்றுமாறு கோரும் செய்தி, வங்கியிடம் இருந்து உங்களுக்கு வந்திருக்கலாம். எனில், உங்கள் டெபிட் கார்டு, ஏ.டி.எம்., பின் எண்ணை உடனடியாக மாற்றுவது நல்லது.
இத்தகைய செய்தியை, நீங்கள் பெறவில்லை என்றாலும் கூட, ஏ.டி.எம்., பின் எண்ணை மாற்றுவது நல்லது.
ஏனெனில், டெபிட் கார்டு பயன்பாட்டிற் கான ரகசிய பின் எண்ணை, குறைந்தது, ஆண்டில் ஒரு முறையேனும் மாற்றுவது நல்லது என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். ஹேக்கர்களால் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டு, தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பை தவிர்க்க, இத்தகைய முன்னெச்சரிக்கை அவசியம் என்கின்றனர்.
பாதிப்பு என்ன?
அண்மையில், நாட்டின் முன்னணி வங்கிகளில் டெபிட் கார்ட் தொடர்பான பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் பின்னணியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மர்ம மனிதர்கள் வங்கிகளின் டெபிட் கார்டு தகவல்களை திருடி
பயன்படுத்தி உள்ளனர் என்பதும், சீனாவில், பணப் பரிவர்த்தனைக்காக இவை பயன்படுத்தப்பட்டது பற்றிய தகவல்களும் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குறிப்பிட்ட வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் மால்வேர் தாக்குதலுக்கு இலக்கானதே, இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மால்வேர் தாக்குதலால் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ள நிலையில், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் சொந்த வங்கி, ஏ.டி.எம்., களை மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு உள்ளன.
பொதுவாக, வங்கிகள் அளவில் பாதுகாப்பு மீறல் நடைபெற்று, அதனால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வங்கிகளே பொறுப்பு என, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அண்மையில் வலியுறுத்தி உள்ளது.
எனவே, ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருந்தால், உடனே வங்கிக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
கார்டுதாரர் தவறால் இழப்பு ஏற்பட்டிருந்தால், அவரே அதற்கு பொறுப்பு.
பொதுவாக, ஏ.டி.எம்., கார்டு பயன்பாடு பாதுகாப்பானது என்றே வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் உள்ள, 70 சதவீத ஏ.டி.எம்.,கள் காலாவதியான இயங்குதளத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இது, ஹேக்கர்களின் தாக்குதல் அபாயத்தை அதிகமாக்குகிறது.
மேலும், பல்வேறு வங்கிகள் வெவ்வேறு வெண்டர்களின், ஏ.டி.எம்., இயந்திரங்களை பயன்படுத்துவதால், இதில் ஒருங்கிணைந்த தர நிர்ணயம் மற்றும் தொழில்நுட்ப வேறுபாடுகளும் இருப்பது, மேலும் சிக்கலை உண்டாக்குகிறது.
இதனாலும் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக, ‘சைபர்’ பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர். தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட மால்வேர் கண்டறியப்பட்டு, அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ரகசிய எண் மாற்றம்
பணப் பரிவர்த்தனை பாதுகாப்பை உறுதி செய்வது, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பு என்றாலும், வாடிக்கையாளர்களும் தங்கள் தரப்பில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, எல்லாரும் பின்பற்ற வேண்டும் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
டெபிட் கார்டு பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியவை:
* வங்கிகளிடம், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் பெற வேண்டும்
* டெபிட் கார்டு பரிவர்த்தனையை, தொடர்ந்து கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனையை கண்டறிவதில் கவனமாக இருக்க வேண்டும்
* ரகசியமான பின் எண்ணை, அடிக்கடி மாற்ற வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் அல்லது குறைந்தபட்சம், ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்
* வேறு வேறு கார்டுகளுக்கு, வேறு பின் எண்களை பயன்படுத்த வேண்டும்
* பின் எண் அல்லது மற்ற தகவல்களை, யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்
* வங்கிகள் ஒருபோதும் பின் எண் போன்றவற்றை கோருவதில்லை. இத்தகைய செய்திகள், மோசடி வலையாக இருக்கலாம் என அறியவும்
* விற்பனை மையங்கள் கார்டு பயன்படுத்தும் போது, கார்டை ஊழியர்களிடம் ஒப்படைப்பது அல்லது பின் எண்ணை தெரிவிப்பது போன்றவற்றை தவிர்க்கவும்
* பின் எண்ணை டைப் செய்யும் போது, யாரது கண்ணிலும் படாமல் அல்லது கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், கைகளால் மறைத்துக் கொள்ளவும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.10.2016
No comments:
Post a Comment