சிறுநீரகம் காக்கும் டயாலிசிஸ் - என்ன செய்ய வேண்டும்?
டயாலிசிஸ்’ என்ற வார்த்தையை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரோ ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம்.
“சர்க்கரை நோய் முற்றினால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”, “சிறுநீரகங்கள் பழுதுபட்டால்
டயாலிசிஸ் செய்ய வேண்டும்”,
“டயாலிசிஸ் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றினால் ஆள் அவ்வளவுதான். காப்பாற்றுவது
கஷ்டம்” என்று ஆளாளுக்கு ஒரு புரிதல்.
இவற்றில் எவை எல்லாம் உண்மை? டயாலிசிஸ் என்றால் என்ன?
கடந்த தலைமுறையைவிட
இப்போது மூன்று மடங்குக்கும் அதிகமானவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஆயுள் குறைவா? இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும்
24 மணி நேரமும் ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும்
சிறுநீர், சொட்டுச் சொட்டாகச் சிறுநீர்க் குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
தினமும், இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் ரத்தம் செல்கிறது. சிறுநீரகங்களில்
உள்ள 140 மைல் நீளம்கொண்ட சல்லடை போன்ற நுண்ணியக் குழாய்கள் வழியாக ரத்தம் பயணித்து, அதில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
இந்தச் செயல்பாடு 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறையும் வரை எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். சிறுநீரகம் செயல்திறன் 15 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போது, அளவுக்கு அதிகமான நீர் வெளியேறாமல் கால், நுரையீரலில் தங்கும். நச்சுக்கள் வெளியேறாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே சிறுநீரக செயல் இழப்பு என்கிறோம். இதை, திடீர், நாட்பட்டது, முற்றியநிலை என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute kidney failure)
நன்கு வேலை செய்துகொண்டிருந்த சிறுநீரகங்கள்,
திடீரென செயலிழந்துவிடக்கூடும். விபத்தில் ரத்த இழப்பு, அதீத ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில்
கிருமித் தொற்று, சில வகை மருந்துகளுக்கு
எதிர் விளைவு, சிறுநீரக குழாய் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவற்றால் இது ஏற்படலாம். இவர்களுக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சைத் தேவைப்படலாம். பெரும்பாலான சமயங்களில் இரண்டு முதல் நான்கு வாரங்களில் சிறுநீரகங்கள்
சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தகுந்த சிகிச்சை எடுப்பதன்மூலம்
முற்றிலும் பழைய நிலைக்கு சிறுநீரகங்கள் திரும்பிவிடும்.
நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic kidney failure)
மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக இருக்கின்றன.
முற்றிய, நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு (End stage kidney failure)
சிறுநீரகங்கள் மீண்டும் வேலை செய்ய வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னை ஏற்பட, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, மரபணுக் கோளாறுகள், சிறுநீரகங்களில் கட்டி, சிறுநீரக நாள அழற்சி ஆகியவை முக்கியக் காரணங்கள். சிறுநீரகம் முற்றிலும் செயல்இழந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற செயற்கை முறையில் சுத்தப்படுத்தும் சிகிச்சை தேவைப்படும்.
இதில், ஹீமோடயாலிசிஸ்,
பெரிட்டோனியல் டயாலிசிஸ் என இரண்டு வகை உள்ளன. இவை இரண்டும் தற்காலிக தீர்வு மட்டுமே. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை
மட்டுமே இவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis – எந்திர ரத்தச் சுத்திகரிப்பு)
அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ்.
டயாலிசிஸ் சிகிச்சையின்போது,
ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும்.
இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும்.
அங்க அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் திரும்ப அளிக்கப்படும்.
ஹீமோடயாலிசிஸ் செய்யப்படும்
முறை
முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டு குழாய்கள் பொருத்தப்படும்.
அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (Arteriovenous fistula) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும்
முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம் பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில்
டயாலிசிஸ் இயந்திரத்துக்குள்
செலுத்த உதவும்.
இந்த அறுவைசிகிச்சை
செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாக டயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும்.
இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம் செல்லும் சிறிய ரத்தநாளத்திலும்
(Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும்.
உடலில் இருந்து வரும் கெட்ட ரத்தம், டயலைஸர் (Dialyzer) இயந்திரத்துக்குள் செல்லும்.
இந்த இயந்திரத்தின்
உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில்
உள்ள ஃபைபர்கள், வேண்டாத சிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும்.
நோயாளிகளின் பாதிப்புக்குத்
தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான்
நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறை ஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை
செய்துகொள்வதே சிறந்தது.
பெரிடோனியல் டயாலிசிஸ் (Peritoneal Dialysis – வயிற்று ஜவ்வு வழி திரவச் சுத்திகரிப்பு)
சிறு அறுவைசிகிச்சை
மூலம் வயிற்றில் ட்யூப் ஒன்றை நிரந்தரமாகப்
பொருத்தி, அதனுள் டயாலிஸேட் எனும் சுத்திகரிப்பு
நீரைச்செலுத்தி, நோயாளிகளே டயாலிசிஸ் செய்துகொள்வது பெரிட்டோனியல்
டயாலிசிஸ். பொதுவாக, நமது நாட்டில் இந்த சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படுவது
இல்லை. எனவே, ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்றால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (Kidney transplantation)
தொடர்ந்து டயாலிசிஸ் செய்வதால் ஏற்படும் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்கவும்
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகப் பெற்றோ, விபத்து போன்ற காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம்
தானமாகப் பெற்றோ பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகத்தைப்
பொருத்தலாம்.
பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்,
தங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரகத்தை தாக்காமல் இருப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள
வேண்டியது அவசியம். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும்
இருக்க வேண்டும்.
சிறுநீரகம் செயலிழப்பு நோயாளிகளுக்கான டயட்
தண்ணீர் அளவாகக் குடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால், கால், நுரையீரலில் நீர் கோத்து பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் நச்சுக்கள் அளவும் அதிகமாகிக்கொண்டே
செல்லும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அன்றாட உணவில் உப்பைத் தவிர்க்க வேண்டும். உப்பு சேர்க்கப்பட்ட கொழுப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். உப்பு தாக்கத்தை அதிகரிக்கும்.
ஜூஸ், குளிர்பானங்கள்,
காபி, டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிகம் நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புரதச்சத்துள்ள உணவை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்க…
சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்தே தேவை இல்லை. நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவே அதனைச் சரி செய்துகொள்ள முடியும்.
ரத்தத்தில் கலந்திருக்கும்
யூரியா, கிரியாட்டினின்
உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் நீர் சமநிலையைக் காக்கும் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. எனவே, அதன் பணியைக் குறைக்கும் பொருட்டு எளிமையாகச் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி, வெள்ளரிக்காய், தர்பூசணி என நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள
வேண்டும்.
மசாலாக்கள் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உப்புகள் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுப்பொருட்கள்
மற்றும் பதப்படுத்தப்பட்ட
உணவுகளில் இருக்கும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்யும்போது
ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரக ரத்த நாளங்கள் வலுவாகின்றன.
சிறுநீரகச் செயலிழப்பின்
அறிகுறிகள்
சிறுநீரகங்கள் படிப்படியாகச்
செயலிழக்கும்போது, ஒருகட்டத்தில்
அவற்றின் செயல்திறன் 70 சதவிகிதத்துகுக் கீழ் குறையும்.அது வரை பெரும்பாலானவர்களுக்கு பெரிய தொந்தரவு என்று எதுவும் வராமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. கீழ்கண்ட அறிகுறிகள் சிறுநீரகச் செயலிழப்பினால் ஏற்படலாம்.
சிறுநீர் வழக்கத்தைவிடக்
குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்
கை, கால், முகத்தில் திடீர் வீக்கம்
உயர் ரத்த அழுத்தம்
பசியின்மை, குமட்டல், வாந்தி
வாயில் கசப்புத்தன்மை
உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்
எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் போன்ற உளவியல் பிரச்னைகள்
தலைவலி, உடல்வலி, எலும்புகளில் வலி.
நடராஜன் செழியன்,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
நன்றி : டாக்டர் விகடன் - 16.10.2016
No comments:
Post a Comment