disalbe Right click

Sunday, October 9, 2016

குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம்


குடும்ப வன்முறைச் சட்டத் திருத்தம் - என்ன செய்ய வேண்டும்?

குடும்ப வன்முறைச் சட்டப்படி பெண்கள், சிறார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் மீதும், சிறார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜோசப் குரியன், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:

2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, திருமணமான ஒரு பெண்ணை, அவரது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் சித்திரவதை செய்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள வயது வந்த ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

அந்தச் சட்டத்தின், 2-(கியூ) பிரிவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக கொடுமை செய்யும் "வயது வந்த ஆண்களுக்கு எதிராக' நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு, பாலின சமத்துவத்தை வலியுறுத்தும், அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளது. எனவே, குடும்ப வன்முறைச் சட்டத்தின் 2-(கியூ) பிரிவில் உள்ள "வயதுவந்த ஆண்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அந்த இடத்தில் "நபர்' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே விடப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

முன்னதாக, குடும்ப வன்முறை தொடர்பான ஒரு வழக்கில், ஒரு சிறுவன், 2 சிறுமிகள், ஒரு பெண் என 4 பேரை விடுவித்து, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

குடும்ப வன்முறைச் சட்டத்தில், பெண்களுக்கு தீங்கிழைக்கும் "வயதுவந்த ஆண்'களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வயது வந்த ஆண்கள் இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. 

நன்றி : தினமணி நாளிதழ் - 10.10.2016


No comments:

Post a Comment