disalbe Right click

Monday, October 31, 2016

நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா


நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்களில் விண்ணப்பித்து நிலம், கட்டிட அனுமதி விவரங்களை அறியலாம்:
ரியல் எஸ்டேட் துறையினர் தகவல்
பொதுமக்கள் தாங்கள் வாங்கிய நிலம், கட்டிடத்துக்கான அனுமதி உள்ளதா என்பதை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் அல்லது கட்டிடங்களை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்போது தாங்கள் வாங்கிய நிலத்தின் அனுமதி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள், தங்கள் நிலம் தொடர்பான ‘லே-அவுட்’-க்கு யார் அனுமதியளித்துள்ளனர் என்பதை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய பகுதி என்றால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அந்த ‘லே அவுட்’ டை அங்கீகரித்திருக்க வேண்டும். மற்ற பகுதிகள் என்றால், நகர ஊரமைப்பு திட்ட இயக்ககம் (டிடிசிபி) அங்கீகாரம் இருக்க வேண்டும்.
இவற்றை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக, தமிழ்நாடு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டி.மணிசங்கர் கூறியதாவது:
நிலம் அல்லது வீட்டை சென்னைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கினால், அதற்கான ஆவணத்துடன், இந்த நிலம் அல்லது கட்டிடம் தொடர்பான அனுமதி விவரங்களை அளிக்கக்கோரி, சிஎம்டிஏ-வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள, ஆவண எண், ஆவணத்தை சரிபார்த்து அனுமதி தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள். உடனடியாக தெரிய வேண்டும் எனில் வாய்மொழியாக விவரங்களை அளிப்பார்கள்.
எழுத்துப் பூர்வமாக வேண்டும் எனில், 30 நாட்களுக்குள் அளிப்பார்கள். அதில், அந்த ‘லே அவுட்’ அல்லது குடியிருப்பு அனுமதி பெற்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை அறியலாம்.
சென்னைக்கு வெளியில் உள்ள மற்ற பகுதிகளுக்கான அனுமதி விவரங்களை டிடிசிபி அலுவலகத்தில் இருந்து பெற முடியும். சாதாரண பொதுமக்கள் இவற்றை பார்ப்பதில்லை. காலதாமதமாகும் என அலுவலர்கள் தெரிவித்தால், நிலத்தை விற்பவர் அவசரம் காட்டுவார்கள்.
அப்போது, நிலத்தை வேறு யாராவது வாங்கிவிடுவார்கள் என அவசரப்பட்டு, பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக, அரசும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதில்லை.
மேலும், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அடுக்குமாடி கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறும் அமைப்புகள், அது தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளும் வசதியை அளிப்பதில்லை.
தற்போதைய சூழலில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அனுமதி தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளத்தில் பார்க்க முடியாது. அரசு வெளிப்படையாக இந்தத் தகவல்களை தெரிவிக்க முன்வர வேண்டும்.
மேலும், நிலத்தை மேம்படுத்துவோர், அதற்கான ‘லே அவுட்’ அனுமதி பெறும் போது, சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அந்தத் தொகையில், அரசு சாலை, குடிநீர், கழிவுநீர் அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு அதை உடனடியாக செய்வதில்லை. இதனால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, நிலத்தை மேம்படுத்துபவரே இந்த வசதிகளை செய்து அளித்தால் அனுமதிப்பதாக அறிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தற்போது, கட்டிட வரைபடம் அனுமதியை விரைவாக அளிப்பதற்கான முயற்சியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிஎம்டிஏ-வில் திட்ட அனுமதி விண்ணப்ப பரிசீலனைக்கான தானியங்கி மென்பொருள் ‘ஏபிபிஏஎஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பு கட்டிடங்கள், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதியை வெளிப்படையாக வழங்க முடியும்.
‘லே-அவுட்’ அனுமதியை பொறுத்தவரை, பொதுமக்கள் இடத்தை வாங்கும் முன், வரைபடத்தில் அளிக்கப்பட்டுள்ள அனுமதி எண், ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

கி.கணேஷ்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 01.11.2016



No comments:

Post a Comment