disalbe Right click

Tuesday, November 1, 2016

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால்


வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் - என்ன செய்ய வேண்டும்?

வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் வேட்புமனு ரத்து செய்யலாம்

புதுடில்லி: வேட்பாளர்கள் தங்களின் கல்வி தகுதி குறித்து தவறான தகவல் அளித்தால் அவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  

வெற்றி செல்லாது:
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் மொய்ரங் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மைரம்பம் பிருதிவிராஜ் என்பவரும், காங்கிரஸ் கட்சி சார்பில் புக்ரம் சரத்சந்திரசிங் என்பவரும் போட்டியிட்டனர். 

இதில், பிருதிவிராஜ் வெற்றி பெற்றார்.ஆனால், பிருதிவிராஜ் தனது வேட்புமனுவில், தான் எம்.பி.ஏ. பட்டதாரி என்று கூறி இருந்தது தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, மணிப்பூர் ஐகோர்ட்டில் சரத்சந்திரசிங் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று, பிருதிவிராஜ் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பிருதிவிராஜ் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி, சரத்சந்திரசிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

வாக்காளர்களின் உரிமை :
இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. மணிப்பூர் ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், வேட்பாளர்களின் கல்வித்தகுதியை தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாக்காளரின் அடிப்படை உரிமை. 

வேட்பாளர்கள், தங்களது கல்வித்தகுதி பற்றிய சரியான தகவலை அளிக்க வேண்டியது அவர்களது கடமை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

தவறான தகவலை அளித்தால், வேட்புமனுவை நிராகரிக்க முடியும். இந்த வழக்கை பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்ற பிருதிவிராஜ், மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கவில்லை என்பதில் சர்ச்சையே இல்லை. அது எழுத்துப்பிழையால் நிகழ்ந்த தவறு என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது. 

அந்த தவறை அவர் இந்த ஒருதடவை மட்டும் செய்யவில்லை. தான் எம்.பி.ஏ. படித்துள்ளதாக, 2008-ம் ஆண்டில் இருந்தே அவர் கூறி வருகிறார். 

வேட்புமனுவில் அவர் கூறியுள்ள தகவல், பொய் பிரகடனம் என்றே கருதப்படும். அது பெரிய தவறல்ல என்று கூறுவதையும் ஏற்க முடியாது.

 இருப்பினும், வெற்றி பெற்ற பிருதிவிராஜின் வேட்புமனு, தவறாக ஏற்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.11.2016
  

No comments:

Post a Comment