disalbe Right click

Thursday, November 17, 2016

ஃபேஸ்புக் - மோசடி விளம்பரம்


ஃபேஸ்புக் மூலம் மோசடி வலை - என்ன செய்ய வேண்டும்? 

கரன்சி டிரேடிங் உஷார்!
***********************************
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஒரு விளம்பரம் தவறாமல் கண்ணில்படுகிறது. ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஒரே நாளில் 10,000 ரூபாய் சம்பாதித்தேன், 20 ஆயிரம் சம்பாதித்தேன்’ என்று பற்பல பெயர்களுடன் ஹாயாக சிரித்தபடி சொல்லும் ஸ்டேட்மென்ட்டுகளை பார்த்தால், அட, ஒரே நாளில் இவ்வளவு லாபமா என்று யாருக்குத் தான் வாய் பிளக்கத் தோணாது!

பங்குச் சந்தை டே டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் ருசி கண்ட நம்மவர்கள், இப்போது ஃபாரெக்ஸ் (கரன்சி) டிரேடிங் கில் இறங்கி இருக்கிறார்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஃபேஸ்புக் பரவி இருப்பதால், இந்த விளம்பரத்தை பார்த்து ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலேயே அதில் சிக்கி, சீரழிகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 

அது என்ன ஃபாரெக்ஸ் டிரேடிங், இதில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் டிரேட் என்பதைத்தான் சுருக்கி ஃபாரெக்ஸ் டிரேட் என்று அழைக்கிறோம். அமெரிக்க டாலர், ஐரோப்பாவின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களை (கரன்சி) வாங்கி விற்பது ஃபாரெக்ஸ் டிரேடிங். இதில் கரன்சியை வாங்கியும் விற்கலாம் (லாங்); விற்றும் வாங்கலாம் (ஷார்ட்).

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இரண்டு வகை உண்டு. 

முதல் வகை நம் அரசாங்கத்தின் அனுமதியுடன் நடப்பது. இது எப்படி நடக்கிறது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஈக்விட்டி டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள், ஃபாரெக்ஸ் டிரேடிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துதான் அதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பங்கின் விலை ஏறினால் லாபத்தில் விற்கலாம். விலை குறைந்தால் நஷ்டத்தில் விற்கலாம். ஆனால், அமெரிக்க டாலரின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை தனியாக அளவிட முடியாது. அதை இன்னொரு நாணயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு நிகராக ஏறுகிறதா, இந்திய ரூபாய் யூரோவுக்கு நிகராக குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒரு அமெரிக்க டாலர் = ரூ.65 என்று வைத்துக்கொள்ளலாம். 1000 டாலர் வாங்குகிறோம். 65 ரூபாய் 66 ரூபாயாக உயர்கிறது எனில், நமக்கு 1000 ரூபாய் லாபம். 10,000 டாலரை ரூபாய் 65 என்கிற மதிப்பில் வாங்கி அது 66 ரூபாயாக உயர்ந்தால், நமக்கு 10,000 லாபம். அட! என்று சொல்லத் தோன்றுகிறதில்லையா?

ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65 ரூபாய் எனில், 1000 டாலர் வாங்க 65,000 ரூபாய் தரவேண்டுமே! அவ்வளவு பணம் நம்மிடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். 

முழுப் பணத்தையும் நீங்கள் தரவேண்டிய தில்லை. ஆயிரம் டாலரின் (ஒரு லாட்) மதிப்பு ரூ.65,000 எனில், அதன் மதிப்பில் வெறும் 3 சதவிகித பணத்தை மட்டும் கட்டி மொத்த மதிப்புக்கும் சொந்தம் கொண்டாடலாம். இதைத்தான் லீவரேஜ் என்கிறார்கள்.

ஆனால், மிகக் குறைந்த அளவு பணத்தையே முன்பணமாக கட்டுவதால், டாலர் மதிப்பு உயர்வதற்கு பதிலாக குறையும்பட்சத்தில் நாம் முன்பணமாக கட்டிய பணம் காணாமலே போக வாய்ப்புண்டு. லீவரேஜ்-ல் இருக்கும் மிகப் பெரிய அபாயம் இது.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கை டாலர் – ரூபாய் மட்டுமல்ல, இன்னும் மூன்று விதமான கரன்ஸியிலும் செய்யலாம். அவை EUR – INR, GBP – INR, YEN - INR. இதில் முதலில் வருவது பேஸ் கரன்சி (Base Currency). யூரோ என்பது ஐரோப்பிய பணம். ஜிபிபி என்பது கிரேட் பிரிட்டன் பவுண்ட். யென் என்பது ஜப்பான் நாட்டு நாணயம். இந்த நான்கு கரன்சிகளையும் ரூபாய்க்கு நிகராக உயரும் என்று நினைத்தால் வாங்கி விற்கலாம். குறையும் என்று நினைத்தால், விற்று வாங்கலாம்.

ஒரு லாட் என்பது 1000 அமெரிக்க டாலர் அல்லது யூரோ அல்லது பவுண்ட் ஆகும். ஜப்பான் யென் மட்டும் ஒரு லாட் என்பது ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருக்கும். இதன் மதிப்பில் வெறும் 3%, அதாவது ரூ.1,950 மட்டும் கட்டி வாங்கிவிடலாம். இவ்வளவு குறைவாக முன்பணம் வாங்கக் காரணம், ஒரு நாளைக்கு இந்த நாணயங்களின் மதிப்பு 3 சதவிகிதத்துக்கு மேல் மாறியதில்லை என்பதால்தான்.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் இந்திய பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ., பி.எஸ்.இ., எம்சிஎக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளில் நடக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்சுகள் செபியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த வர்த்தகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் ஃபாரெக்ஸ் டிரேடிங் இதுவரை நாம் பார்த்த மாதிரியானதல்ல. இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்பவர்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படாத கரன்சியில் வர்த்தகத்தை எல்லாம் செய்வார்கள். இங்கே ரூபாய் என்பதே இருக்காது. EUR – USD, USD – JPY, EUR – JPY, GBP - USD, GBP – JPY என்று உலக அளவிலான நாணயங்களின் மதிப்புகள் வர்த்தகமாகும். ஃபேஸ்புக்கில் அடிக்கடி வரும் இந்த விளம்பரங்களை பார்த்து, இதில் பணத்தை போடலாமா?

நிச்சயம் போடக்கூடாது. 
காரணம், இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இதற்கு இல்லை. 1973-ல் கொண்டு வரப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரெகுலேஷன் ஆக்ட் (FERA), 1998-ல் கொண்டு வரப்பட்ட FERA ஆகிய சட்டங்களின் அடிப்படையில் ஓடிசி மார்க்கெட்டும், செபியின் கண்காணிப்பில் கரன்சி வர்த்தகமும் இயங்குவது போல, எந்த சட்டவிதிமுறையும் இதற்கு இல்லை. 

இந்த வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட நினைத்தால், இன்டர்நேஷனல் புரோக்கர்கள் உங்களை டாலரில் பணம் கட்டச் சொல்வார்கள் (கிரெடிட் கார்டிலோ அல்லது டெபிட் கார்டிலோ). இதுவே சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபடும் ஒரு செயலாகக்கூட இருக்கலாம். 

இந்த வியாபாரத்தில் சிறு வியாபாரிகளை குறிவைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதாவது, $100 போடுங்கள், $200 போடுங்கள் என்று குறைந்த தொகையில் ஆரம்பிக்க சொல்வார்கள். அதிக லீவரெஜ் தருவதாக ஆசை காட்டுவார்கள். லாபம் சம்பாதித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவோம் என்பார்கள். 

ஆனால், பலரையும் விசாரித்ததில், பணம் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்றே சொல்கிறார்கள். இன்னும் சிலர், லாபம் வந்தால்தானே பணம் வர்றதுக்கு! பெரும்பாலும் நஷ்டத்தில்தானே வியாபாரம் முடிகிறது. பிறகு எங்கே பணம் வரும் என்று கேட்கிறார்கள்.

சரி, ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஏதாவது முறைகேடு நடந்தால், சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் நீங்கள் முறையிடலாம். ஆனால், இந்த இன்டர்நேஷனல் புரோக்கர்களிடம் ஃபாரெக்ஸ் டிரேட் செய்து, பிரச்னையில் மாட்டினால் யாரிடம் முறையிடுவது?

இந்த ஃபாரெக்ஸ் டிரேட் செய்த புரோக்கர் இங்கிலாந்தில் இருந்தால், அங்கே இருக்கிற மத்திய வங்கியிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும். அமெரிக்கா எனில், ஃபெட் ரிசர்வ் வைத்துள்ள அமைப்பிடம் முறையிடலாம். 

அதுபோல, நீங்கள் வியாபாரம் செய்யும் புரோக்கர் நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை எந்த நாட்டில் வைத்திருக்கிறாரோ, அங்கேதான் போய் முறையிட வேண்டும். 

லோக்கலில் நம்மை ஏமாற்றியவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியாமல் நாம் திணறும்போது, அமெரிக்கா, இங்கிலாந்து என எல்லா வெளிநாடுகளுக்கும் போய் நடவடிக்கை எடுக்க வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. 

50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால், அதை திரும்பப் பெற அமெரிக்கா போய்வர அதற்கு மேல் செலவாகும்தானே? எனவே, அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பல லட்சம் ரூபாயை இழந்தவர்கள், வெளியே சொல்ல முடியாமல், அப்படியே மென்று முழுங்கிவிடுகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்று ஒரு பழமொழி உண்டு. 

முதலில் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட டிரேடிங்கில் நம் திறமையைக் காட்டுவோம். அங்கீகாரம் இல்லாத வேறு எந்த டிரேடிங்கிலும் தலைகாட்டா மல் இருப்பதே நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015

No comments:

Post a Comment