”ஃபேஸ்புக்” மார்க் சக்கர்பெர்க் வரலாறு - என்ன செய்ய வேண்டும்?
மார்க் சக்கர்பெர்க்... காலத்தை வென்ற இளைஞன்!
“உன்கிட்ட ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லையா....” என்று சொல்லி கலாய்க்கும் அளவுக்கு ஃபேஸ்புக் நம்முடைய அத்தியாவசிய சொத்துக்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.
கணினியும் இணையமும் எப்படி 20-ம் நூற்றாண்டு மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைத்ததோ அதே போல், 21-ம் நூற்றாண்டு மக்களை ஃபேஸ்புக் ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே மக்களின் மனம் கவர்ந்த தலைவனாக நிமிர்ந்து நிற்கிறார் மார்க் சக்கர்பெர்க். இத்தனைக்கும் இவருக்கு வயது 32. இவருடைய சொத்து மதிப்போ ரூ.2.38 லட்சம் கோடி.
மார்க் சக்கர்பெர்க்கின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் தலைவர்களோடு ஒப்பிட்டு அவர்களைவிட நல்ல தகுதிகள் மார்க்குக்கு இருப்பதாகவும் சொல்கிறார்களே, அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன் மார்க்கின் ஆரம்ப காலத்தைப் பார்ப்போம்.
மார்க் ஒரு மேதை!
1984-ம் ஆண்டு மே 14 அன்று பிறந்தார் மார்க் சக்கர்பெர்க். அவரது தந்தை எட்வர்ட் சக்கர்பெர்க், ஒரு பல் மருத்துவர். அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப் படி, சிகிச்சைக்கு அழைக்க ஒரு அப்ளிகேஷனை உருவாக்கிய போது அவருக்கு வயது வெறும் 12. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார். மார்க்கின் புரோகிராமிங் திறமையை வளர்க்கப் பெற்றோரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர், இவரது திறமையைப் பார்த்து ’மார்க் ஒரு மேதை’ என்று குறிப்பிட்டார்.
2004-ம் ஆண்டு, தான் படித்துகொண்டிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தூங்கும் அறையிலிருந்து விளையாட்டாக ஆரம்பித்ததுதான் ஃபேஸ்மேஷ். கல்லூரி மாணவர்கள் தங்களுக்கிடையே உரையாடிக் கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே தொடங்கப்பட்டது.
அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை இதன் வீரியம் உலகை ஆளப் போகிறது என்று. இதற்காகக் கல்லூரி டேட்டா பேஸைத் திருடி தண்டனையும் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து அதன் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.
உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியதும் அவருக்கு புரோகிராமிங் ஆராய்ச்சியே முழுநேர வேலை யாகிப் போனது. ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. சிவப்பு, பச்சை நிறத்தைப் பிரித்தறிய முடியாத நிறக்குருடு நோய் காரணமாக நீல நிறத்தில் உருவாக்கினார்.
ஜாம்பவான்களை மிஞ்சிய மார்க்!
இன்று ஃபேஸ்புக்கை 160 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். ஒருசில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும் மறை முகமாக அந்நாட்டு மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்து கிறார்கள். ஃபேஸ்புக் வலை தளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன.
2006-ல் ஃபேஸ்புக்கை ஹேக் செய்த கிரிஸ் புட்னாமை தனது நிறுவனத்திலேயே வேலைக்கு எடுத்துக்கொண்டார் மார்க். ஆனால் அதற்குப் பின் யாராலும் ஃபேஸ்புக்கை ஹேக் செய்ய முடியவில்லை. சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் மாதம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது. வீடியோக்கள் தற்போது ஃபேஸ்புக்கில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் மெருகேறி வளர்ந்து கொண்டிருக்கிறது.
கணினி மற்றும் இணைய உலகில் ஜாம்பவான்களாக இருக்கும் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரின் சாதனைகளை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் மார்க். பில் கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட்டை தொடங்கும்போது வயது 20. மார்க் ஃபேஸ்புக்கை தொடங் கும்போது வயது 19. மார்க் 23 வயதிலெல்லாம் பில்லினியர் என்ற தகுதியைப் பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் 30 வயதாகிய நிலையிலும் பில்லினியர்் என்ற நிலையை அடையவில்லை. பில்கேட்ஸ் 30 வயதில்தான் ஐபிஓ வெளியிட்டார். ஆனால் மார்க் 28 வயதிலேயே ஐபிஓ வெளியிட்டு விட்டார். மார்க் 2010-ல் தனது 26 வயதில் டைம் இதழின் ‘பர்சன் ஆஃப் தி இயர்’ என்றப் பட்டத்தை பெற்றார். ஆனால், பில்கேட்ஸ் தனது 50 வயதில்தான் அந்த இடத்தைப் பிடித்தார்.
இனி ஃபேஸ்புக்தான் கூகுளுக்கே கேட்வே!
இணையத்தின் வளர்ச்சி அதிகரித்தபோது எவ்வளவோ தேடுதல் பொறிகள் வந்த போதும் கூகுளை மிஞ்ச யாராலும் முடியவில்லை. ஆனால், கூகுளில் நாம் தேடும் தகவலை அவ்வளவு விரைவாகப் பார்க்க முடியாமல் போனது. அதற்கு கூகுள் விளம்பரங்களும் அதன் விளம்பர தாரர்களின் செய்திகள் முன்னிலையில் வருவதும் காரணமாக இருந்தது.
ஆனால், ஃபேஸ்புக் அதை மாற்றியது. ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு தேவையானதை விரல்நுனியில் கொண்டு வந்தது. அல்காரிதம் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் அனைவரையும் அதில் பங்கு பெறும்படி மாற்றியதால் அது எல்லோராலும் தவிர்க்க முடியாதபடி மாறியது.
இளைஞன், கணவன், தலைவன்!
சுருட்டை முடியும், குழந்தை முகமும், சாம்பல் நிற டிசர்ட்டும் போட்டுத் திரிந்த இளைஞனும், சிலிகன் வேலியின் செல்லப் பிள்ளையுமான மார்க் ஒரு அன்பான கணவனாகவும், அழகான தந்தையாகவும் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் பிறந்த தனது மகள் மேக்ஸிலா சான் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தன்னை தனது ஃபேஸ்புக்கின் முதல் பயனாளியாகவும், ரசிகனாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். இது எல்லோரின் வரவேற்பையும் பெற்றது.
2010-ல் ஏற்கெனவே தனது சொத்தில் பாதியை அறக்கட்டளைக்காக அளித்த மார்க், தனது மகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், உலகக் குழந்தை களின் நலனுக்காகவும் ஃபேஸ்புக்கின் 99 சதவிகிதப் பங்குகளை நன்கொடை செய்துள்ளார். இவரது மனைவி பிரிசில்லா சான், ஏழை குழந்தை களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஒரு அமைப்பும் தொடங்கி உள்ளார்.
இதையெல்லாம்விட, இளைஞன் மார்க் அமெரிக்க அதிபராவதற்கு அத்தனை தகுதி களையும் கொண்டிருப்பதாக மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். காரணம், அனைவரையும் அரவணைக்கும் அவரது பண்பு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் வரவிட மாட்டேன் என்று சொன்னதை மார்க் தவறு என்று சொன்னார்.
அதோடு ஃபேஸ்புக் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தெரிந்து அதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு பல பாதுகாப்பு ஏற்பாடுகள் வைக்கப் பட்டு உள்ளதாகவும் கூறினார்.
“அதற்காக அவர்களுக்கு இணையத்தையும் ஃபேஸ்புக்கையும் தடை செய்வது நியாயமாகாது. நான் இணையத்தை மட்டும் மாற்ற நினைக்கவில்லை, உலகையே மாற்ற நினைக்கிறேன். ஏற்கெனவே மக்கள் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை மேலும் மேலும் பிரிக்காமல் ஒருங்கிணைக்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்களிலேயே ஒபாமாவை சிறந்தவராகக் குறிப்பிடக் காரணம், அவர் அனைவரையும் அன்பு என்ற விஷயத்தினால் அரவணைத்ததுதான் என்கிறார்.
மக்களோடு மக்களாகப் பயணிக்கும் பண்பு, உலக மக்களின் நலனுக்காக தன் சொத்துக்களைப் பகிர்ந்தளிக்கும் தாராள குணம், தகவல் மற்றும் இணைய தொழில்நுட்பத்தில் யாரும் அடையாத முடியாத உச்சம் என தனது 30 வயதிலேயே பணமும் பாசமும் காதலும் புகழும் வாய்க்கப் பெற்று காலத்தை வென்ற இளைஞனாக ஜொலிக்கும் மார்க்குக்கு லைக்கோ லைக்ஸ்தான்.
ஜெ.சரவணன்
நன்றி : நாணயம்விகடன் - 29.05.2016
No comments:
Post a Comment