இறந்து போனவரின் ஏ.டி.எம். கார்டு - என்ன செய்ய வேண்டும்?
இறந்து போன ஒருவரின் ஏடிஎம் கார்டை பிறர் பயன்படுத்தலாமா?
“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது. ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் (அவர் யாராக இருந்தாலும்) பணத்தை எடுப்பது சட்டப்படி தவறாகும். எனவே, அவர் மீது சம்பந்தப்பட்டவங்கியில் இருந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இறந்து போனவரின் பிள்ளைகளோ, அல்லது மனைவியோ இறந்து போனவரது கணக்கில் இருந்து பணம் எடுத்திருந்து , அதைப்பற்றி அந்தக் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் வங்கியில் புகார் அளித்தால் வங்கியானது சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்கும்.
அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டால் எந்த வங்கியிலிருந்தும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.
வாரிசுதாரர்கள் அல்லது நாமினி என்ன செய்ய வேண்டும்?
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினியோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ அதை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவிப்பது அவசியமானது ஆகும்.
கணக்கு வைத்திருந்தவர் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழ் நகல் , ஏடிஎம் கார்டு அசல், பாஸ்புக் அசல், காசோலை புத்தகம் அசல் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி வங்கி மேலாளரிடம் நேரில் தரவேண்டும். அவர்கள் அதனை வாங்கிக்கோண்டு, பரிசீலனை செய்து வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு கணக்கை மாற்றித்தருவார்கள்.
ஒருவேளை நாமினி பெயர் குறிப்பிடப்படாமல் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அந்த நபரிடம் கணக்கில் உளள பணத்தை வங்கி ஒப்படைக்கும்.
இருக்கின்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் இதற்கு உடன்பட மறுத்தாலும், இறந்தவரது பெயரில் கணக்கில் உள்ள பணத்தை யாருமே பெற முடியாது.
வாரிசுதாரர்களில் யாராவது வங்கி நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுத்தால், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
இது மோசடியாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் அல்லது நாமினி புகார் கொடுத்தால் மட்டுமே வங்கியால் இதில் தலையிட முடியும். ஏனெனில், ஏடிஎம் கார்டு ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும்.
ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால்....
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் – மனைவி அல்லது அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும்.
ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அந்தப்பணம் இருவருக்குமே உரிமையானது. இருந்தபோதிலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியமானதாகும்’’ .
ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளில் சட்டப்படியான செயல்களை மேற்கொள்வதே நல்லதாகும்.
--------------------------------------------------------------------------------------செல்வம்பழனிச்சாமி-
No comments:
Post a Comment