திடீர்ன்னு திருப்பதிக்கு கெளம்புறீங்களா - என்ன செய்ய வேண்டும்?
திருவேங்கடமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பயணத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:
• திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.
• சுவாமியை தரிசனம் செய்வதற்கு, 'சர்வதரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம் என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.
• சர்வ தரிசனத்தில், தரிசனம் செய்வதற்கு சாதாரண நாட்களில் 4 மணி முதல் 8 மணிநேரம் ஆகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். திவ்ய தரிசனத்தில் சர்வ தரிசனத்தை விட 2 மணி நேரம் குறைவான நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
• 'சிறப்பு தரிசனம்' என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், ஆன்லைன் மூலமாக புக் செய்துவிட்டு 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்யும் முறையாகும். ஒரு நபருக்கு மட்டும் அனுமதி. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முந்தைய தினமே முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவது நல்லது. வார நாட்கள் என்றால் மலைக்குச்சென்று அங்குள்ள விற்பனைப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
• உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடர்வது நல்லது. திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
• தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
• தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.
• திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் , மலைப்பாதையில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
• திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
• நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
• திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
• திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
• தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும்.
தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
• திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும், நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
• கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
• கோயிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்.கோயில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யவோ கூடாது.
• கோயிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. கோயில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோயில் வளாகங்களில் காலணிகளை அணியக்கூடாது.
• தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்கால்களுடன்தான் பிரகாரங்களை வலம் வர வேண்டும். மறந்து அணிந்து வந்து விட்டால், அருகாமையிலிருக்கும் காலணிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம்.
• சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை சைலண்ட் மோடில் போட்டு அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு, லட்டு கௌண்டருக்குச் சென்று லட்டு வாங்கி முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் நிறையவே அலைய வேண்டியிருக்கும்.
• திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.
• கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------எஸ்.கதிரேசன்
நன்றி : விகடன் செய்திகள் -15/10/2016
No comments:
Post a Comment