disalbe Right click

Saturday, November 12, 2016

மழைக் காலத்தில்


மழைக் காலத்தில் ..... என்ன செய்ய வேண்டும்?

கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் பருவ மழை காலம் கடந்து பெய்யத் தொடங்கியிருக்கிறது. உச்சபட்ச வெயிலை இந்த வருடக் கோடைக் காலம் நம் மீது உமிழ்ந்து விடைபெற்றுள்ளது. இப்போது அதற்கு இயற்கையே பரிகாரம் செய்வதுபோல் இதமான பொழுதை நமக்கு வழங்குகிறது. மழை இல்லை என்றாலும் இள வெயில் மனதையும் உடலையும் புத்துணர்வு கொள்ளச் செய்கிறது.
சாலைகளில் புது வெள்ளம் ஓடுவதைப் பார்க்கும்போது மனதுக்குள் சந்தோஷம். இது ஒரு பக்கம் இருந்தாலும் சாலைகளின் தரத்தை, நம் வீட்டுக் கட்டுமானத்தின் உறுதியைச் சோதனை செய்ய வரும் அதிகாரி போன்றது மழை. மழைக் காலத்தில் தரமில்லாத சாலைகள் பெயர்ந்து போய்விடும். அதுபோல நம் வீட்டுக் கட்டுமானத்தில் வெளித் தெரியாத அளவில் இருந்த விரிசல் மழைக் காலத்தில்தான் தெரியவரும். மழைக் காலங்களில் முக்கியமாக நம் வீட்டுக் கட்டுமானத்தில் உள்ள குறைகளைக் கவனிக்க வேண்டும். முற்றத்தில் மழை நீர் செல்வதற்கான வழிமுறை உள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முற்றத்தில் நீர் தேங்கினால் பலவிதமான கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரப்பக்கூடும்.
அதனால் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கியிருந்தால் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக் கட்டுமானத்தில் விரிசல் இருந்தால் அதை உடனடியாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும். மொட்டை மாடியில் மழை நீர் வெளியேறும் துளைகளில் அடைப்பு இருந்தால் நீக்க வேண்டும்.
பொதுவாக மழைக் காலங்களில் நம் வீட்டில் உள்ள மரப் பொருள்களில் பூச்சிகள் மற்றும் செல்லரிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். அதனால் மரப் பொருள்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.
இம்மாதிரியான பாதிப்புகளைக் கிராம்பு அல்லது கற்பூர வில்லைகள் கொண்டு நீக்கலாம். பயன்படுத்தாத மரப் பொருள்களை பிளாஸ்டிக் உறைகொண்டு மூடினால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும். மழைக் காலங்களில் மரச் சாமன்களைச் சுத்தம் செய்வது அவசியம். மேஜை, நாற்காலிகள் போன்ற மரப் பொருள்களுக்கு உறை இடுவது அவசியம். மழைக் காலத்தில் துணிவைக்கும் அலமாரிகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஈரப்பதத்துடன் இருந்தால் துணிகளில் பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. மழைக் காலத்தில் துணிகளை உலர்த்துவது சிரமமான காரியம்.
சரியாக உலராத துணிகளை அலமாரிகள் உள்ளே மடித்துவைப்பதால் துர்நாற்றம் வரும். இதைத் தவிர்க்க ரசக் கற்பூரங்களைப் போட்டு வைக்கலாம்.
துணிகளை வெளியில் காய வைக்க முடியவில்லை என்றால் முடிந்தளவு மின்விசிறியிலாவது உலர வையுங்கள். மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சுவிட்ச் போர்டுகளைத் தொடும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு மின் சாதனங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். தண்ணீர் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

- மித்ரன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.11.2016

No comments:

Post a Comment