நாமினிகள் வாரிசாக முடியாது - என்ன செய்ய வேண்டும்?
சட்ட வல்லுநர் கருத்து
ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தில் 1991-ல் ஜெயலலிதா ரூ.7 லட்சம் டெபாசிட் செய்தார். அதற்கான வாரிசுதாரராக சசிகலாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார். சசி கலாவே தம்முடைய வாரிசு என அன்றே ஜெயலலிதா அறிவித்து விட்டதற்கான ஆவணம்தான் இது என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்.
ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங் களில் நிதி சேமிப்பு வாரிசாக குறிப்பிட்டதால் மட்டுமே ஒருவர் சட்டப்படியான வாரிசாக உரிமை கோர முடியாது என சட்டவல்லு நர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:
வங்கிகள், நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு யாரை வேண்டுமானாலும் வாரிசு தாரர்களாகக் குறிப்பிட முடியும். இப்படி வாரிசுதாரர்களாக குறிப் பிடப்படும் நபர்களுக்கு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்ப எடுப்பதற்கு மட்டுமே உரிமை உள் ளது.
ஆனால், அந்தத் தொகையை (சட்டப்படியான வாரிசுதாரராக இல்லாத பட்சத்தில்) அவர் அனுபவிக்க முடியாது. அதற்கான உரிமை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் களுக்கு மட்டுமே உண்டு.
டெல்லியைச் சேர்ந்த கண்டா ராம் தல்வார் என்பவர் தனது மகன் ராம்சந்தர் தல்வாரை வாரிசுதாரராக குறிப்பிட்டு வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்தார். கண்டா ராம் இறந்த பிறகு அந்தத் தொகை முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கோரினார் ராம்சந்தர்.
இதை எதிர்த்து கண்டாராமின் இன்னொரு மகனான தேவேந்திரகுமார் தல்வார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் ’45 இசட், ஏ’ என்பது வங்கிகளை திறம்பட செயல்பட வைப்பதற்கான சட்டம் மட்டுமே. இதன் பிரகாரம், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வாரிசுதாரராக குறிப் பிடப்படும் நபரானவர் அந்தத் தொகையை சட்டப்பூர்வமாக பெற்றுக் கொள்வதற்கு முழு உரிமை பெற்றவர். என்றாலும் பணத்தை டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டால் அவரால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது அவரது குடும்ப சொத்தாகிவிடுகிறது.
அதை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் மட்டுமே பங்கிட்டுக்கொள்ளவோ அனுபவிக்கவோ உரிமை உள்ளது. எனவே அந்தத் தொகையை வாரிசு உரிமை சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படித்தான் பயன்படுத்த முடியும் என்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் சாரம் பொருந்தும்
மேல்முறையீட்டில் உச்ச நீதி மன்றமும் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 6.10.2010-ல் உறுதி செய்தது. ஜெயலலிதா ஸ்ரீராம் சிட்பண்டில் முதலீடு செய் திருக்கும் தொகைக்கும் இந்தத் தீர்ப்பின் சாரம் பொருந்தும். அவ ரால் வாரிசுதாரராகக் குறிப்பிடப் பட்டுள்ள சசிகலா அந்தத் தொகையை சிட்பண்டில் இருந்து எடுக்க சட்டப்படியான உரிமை கொண்டவர்தான்.
ஆனால், அதை அவர் அனுபவிக்க முடியாது. அந்தத் தொகையை அவரிடம் கொடுக்க வேண்டாம் என ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
நிதி நிறுவனத்துக்கு இதில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தல்வார் குடும்பத்தைப் போல நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
எனவே, வங்கி டெபாசிட்டில் வாரிசுதாரராக காட்டப்பட்டிருக்கிறார் என்பதால் மட்டுமே யாரும் ஒருவரின் சட்டப்படியான வாரிசுதாரராக முடியாது. இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.12.2016
No comments:
Post a Comment