புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!
இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது!
பெண்களுக்கு முதல் இடம்
‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது.
தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
வங்கி இல்லாமலா!
அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.
நம்பிக்கை இழக்க வேண்டாம்
மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம்.
இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?
மின்னஞ்சல் எழுதுதல்
ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.
எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல்
கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.
பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே!
ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.
இணையத்தைத் துழாவுதல்
இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.
பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல்
எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.
ம. சுசித்ரா
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.12.2016
No comments:
Post a Comment