தந்தையின் கைரேகை - மோசடியாக பயன்படுத்திய மகன்
தந்தையின் கைரேகையை மோசடியாக பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்பு நிலம் சுருட்டிய மகன் கைது
சென்னை: சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுமிதா (40). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் ‘எனது தந்தை பிச்சைமணி சென்னை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015 அக்டோபர் 9ம் தேதி புற்று நோயால் பாதிக்கப்பட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். எனது தாய் மாரியம்மாள். எனக்கு ஆதிலட்சுமி, விஜயலட்சுமி என்ற 2 சகோதரிகளும், சக்திகுமார் என்ற சகோதரனும் உள்ளனர்.
இந்நிலையில், எனது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நேரத்தில் அவரது கைரேகையை பதிவு செய்து போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள எனது தந்தையின் சொத்துக்களை எனது தாயும், சகோதரனும் அபகரித்துள்ளனர்.
இதற்கு நீலாங்கரை சார்பதிவாளர் தாமு என்பவரும் ஆறுமுகம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, சட்ட விரோதமாக எனது தந்தையின் சொத்துக்களை அபகரித்த தாய் மாரியம்மாள், சகோதரன் சக்திகுமார், ஆறுமுகம், நீலாங்கரை சார் பதிவாளர் எம்.ஜி.தாமு ஆகியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவுடன், கடந்த 2015ம் அக்டோபர் 9ம் தேதி தான் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களின் நகலையும் சுமிதா போலீசாரிடம் வழங்கினார். மேலும், அந்த ஆவணங்கள் பதிவு செய்த நாளில் பிச்சைமணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தையும் வைத்துள்ளார்.
ஆனால், முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, சுமிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சக்திகுமார், மாரியம்மாள், ஆறுமுகம், நீலாங்கரை சார்பதிவாளர் தாமு ஆகியோர் மீது மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்றுமுன்தினம் சக்திகுமார், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நன்றி :தினகரன் – 25.12.2016
No comments:
Post a Comment