மைக்ரோ ஏ.டி.எம். - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் மைக்ரோ ஏடிஎம்!
நம் பணம் சார்ந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது ஏடிஎம். எனினும், இன்று அனைவரிடமும் நிலவும் பணப் பற்றாக்குறை பிரச்னையில் மைக்ரோ ஏடிஎம்கள் அதைவிட அதிகப் பலனை அளித்து வருகிறது.
மைக்ரோ ஏடிஎம்!
ஏடிஎம்-ன் மினி பதிப்பே மைக்ரோ ஏடிஎம். மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய பிஓஎஸ் வகை மெஷின். மைக்ரோ ஏடிஎம்களில் வாடிக்கை யாளர்கள் டெபாசிட் செய்வது, பணம் பெறுவது மற்றும் பணம் அனுப்புவது போன்றவற்றைச் செய்ய முடியும்.
மைக்ரோ ஏடிஎம், ஜிபிஆர்ஸ் வழியாக வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
இந்த மைக்ரோ ஏடிஎம்-ல் கைரேகை ஸ்கேனர், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த மெஷின்களை வங்கிப் பிரதிநிதிகளால் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல இயலும்.
இந்த மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் உள்ளே பணம் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். மைக்ரோ ஏடிஎம்-ல் டெபிட் கார்டு தேய்க்கப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.
இதற்குரிய பணத்தை வங்கிப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் வழியாக வாடிக்கை யாளர்களின் பணம் அல்லது சேவையைப் பெற்று, அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் பதிவுசெய்வது வங்கிப் பிரதிநிதிகளின் பொறுப்பு.
மைக்ரோ ஏடிஎம்-ல் என்னென்ன செய்ய முடியும்?
* பணம் டெபாசிட் செய்தல்
*பணம் எடுத்தல்
* பணம் அனுப்புதல்
* பணம் கையிருப்பு விசாரணை
* சேவை கோரிக்கை ஏற்பு (Service Request Acceptance)
* வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது
* இ-கேஒய்சி சார்ந்த சேமிப்புக் கணக்கு துவக்கம்
மைக்ரோ ஏடிஎம் எப்படி இயங்குகிறது?
* சாதாரண ஏடிஎம் மெஷின்களைப் போலவே மைக்ரோ ஏடிஎம் மெஷின்களும் இயங்குகின்றன.
* முதலில், நீங்கள் சரிபார்ப்புப் பணியை (Verification process) மேற்கொள்ள வேண்டும். சரிபார்ப்பு செயல்பாட்டில், ஆதார் அட்டையுடன் கைரேகை ஸ்கேனிங் அல்லது உங்களுடைய டெபிட் / கிரெடிட் கார்டு வாயிலாகச் சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
* சரிபார்ப்பு முடிந்தவுடன் மைக்ரோ ஏடிஎம் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான விருப்பத்தைக் காண்பிக்கும்.
* உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்கான பரிவர்த்தனை நடக்கும்.
* பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தபின், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்குண்டான தகவல் திரையில் காட்டப்படும். அதன்பின் பற்றுச் சீட்டு (Print Receipt) வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும்.
* இறுதியில் உங்களுடைய பரிவர்த்தனை பற்றி உங்கள் வங்கியில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல், பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் போனுக்குக் கிடைக்கப்பெறும்.
* மைக்ரோ ஏடிஎம் மூலம் அனைத்து வங்கி களுக்கும் பரிவர்த்தனை வசதி அளிக்கப்படுகிறது. எனினும், உங்கள் வங்கிக் கணக்கில், உங்கள் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
நன்மைகள் என்ன?
* மைக்ரோ ஏடிஎம் மூலம் எந்த இடத்திலும் வங்கிச் சேவைகளைப் பெறலாம்.
* தற்போதைய ஏடிஎம் மெஷின்களைவிட இதற்கான செலவு மிகவும் குறைவு.
* மைக்ரோ ஏடிஎம் ஒரு சிறிய சாதனம் என்பதால், எளிதில் கையாளலாம். எங்கு வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம்.
* பயோமெட்ரிக் வசதி இதில் உள்ளதால், படிக்காதவர்கள்கூட இதன் மூலம் பாதுகாப்பான முறையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
* மைக்ரோ ஏடிஎம் மெஷினில் எல்லா வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.
* பணத் தட்டுப்பாடு நிலவிய சமயங்களில் இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
2 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள்!
மத்திய அரசு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மைக்ரோ ஏடிஎம்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் 90,000 ஏடிஎம்கள் நகர்ப்புறங்களிலும் 1.1 லட்சம் ஏடிஎம்கள் கிராமப் பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.
இனி நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் மைக்ரோ ஏடிஎம் மூலம் யார் வேண்டுமானாலும் எளிதில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்!
நன்றி : நாணயம்விகடன் – 11.12.2016
No comments:
Post a Comment