பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்:
பாஸ்போர்ட் பெறுவதற்கான விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக தற்போது புதுச்சேரியில் மினி பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது நாள் ஒன்றுக்கு 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை 3 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதில் 2 கட்ட பரிசீலனை புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசீலனை சென்னையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே 3-ம் கட்ட பரிசீலனையையும் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 2-ம் முதல் இந்த மையம் முழு அளவில் செயல்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெற சென்னைக்கு வர வேண்டிய அவசி யமில்லை.
பாஸ்போர்ட் பெற சில விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை தற்போது எளிமையாக்கி உள்ளது.
இதன்படி, 1989-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. ஆனால், இனி அது தேவையில்லை. அதற்குப் பதிலாக தங்களது பிறந்த தேதி இடம் பெற்றுள்ள பள்ளிச் சான்றிதழ்கள், பான்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாண்டுகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
அதேபோல், ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் மற்றும் தத்து குழந்தைகள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது தந்தை, தாய் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பெயர்களை குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பெற்றோர் பெயர் மட்டும் குறிப் பிட்டால் போதுமானது.
இதற்காக விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய பின்னிணைப்புகளில் (அனெக்சர்ஸ்) முன்பு நோட்டரி பப்ளிக், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சான்று அவசியமாக இருந்தது. இனி, விண் ணப்பதாரரே ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சுய கையொப்பம் (செல்ப் அட்டெஸ்டட்) இட்டு சமர்ப்பித்தால் போதுமானது.
மேலும், திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. விவாக ரத்து பெற்றவர்கள் தங்களது விவாகரத்து சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
அதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே சுய கையொப்பம் இட்ட சான்றிதழை அளித்தால் போதும். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் பெறுவது அவசியமாக இருந்தது. இனி அவர்கள் தங்களது துறைக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது.
பெற்றோரை இழந்து காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற அந்தக் காப்பகத்தின் நிறுவனர் சான்றிதழ் அளித்தால் போதும். அதேபோல், சாதுக்கள், சன்னியாசிகள் பாஸ்போர்ட் பெற தங்களது ஆன்மிக குரு தரும் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 475 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 319 பேருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அசோக் பாபு கூறினார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 31.12.2016
No comments:
Post a Comment