disalbe Right click

Thursday, December 8, 2016

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை - என்ன செய்ய வேண்டும்?
பணப் பரிமாற்றத்தில் யூபிஐ… தேவை நிறைய மாற்றம்!
வங்கிகளில் பணம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்துங்கள். வங்கிகள் தரும் யூபிஐ (UPI – Unified Payment Inteface) வசதியைப் பயன்படுத்தி எளிதில் பணத்தை அனுப்புங்கள்’’ என்று சொல்கிறது மத்திய அரசாங்கம்.

பிரதமர் தொடங்கி ஒவ்வொரு மத்திய அமைச்சரும் இந்த யூபிஐ-க்காக பிரசாரமே செய்து வருகின்றனர்.
வங்கிகள் தரும் யூபிஐ வசதியை சாதாரண மக்களும் பயன்படுத்தும் நிலையில் அது எளிதாக இருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். களத்தில் இருக்கிற நிலைமை நம்மை அதிர்ச்சி அடையவே செய்தது.

யூபிஐ-யின் தொடக்கம்!

முதலில் இந்த யூபிஐ-யைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மொபைல் வழியிலான பணப் பரிவர்த்தனைகளை எளிதாகச் செலுத்தும் வசதியை யூபிஐ என்ற பெயரில் என்பிசிஐ அறிமுகப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் இந்த யூபிஐ-யை முறைப்படி அறிமுகப்படுத்த, ஜூலை 31-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 15 வங்கிகள் இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராகிவிட்டன. கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட பல வங்கிகள் பொது மக்களுக்கு இந்த யூபிஐ வசதியைத் தரத் தயாராக இருந்தன.

என்ன நன்மை?

உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அதிகபட்¬ச¬மாக ஒரு லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக பணத்தை அனுப்பலாம். ரயில்வே டிக்கெட், சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் பணம் செலுத்தலாம்; இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நன்கொடை, பள்ளிக் கட்டணங்கள் என கவுன்டர் பேமென்ட் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்; ஆன்லைன் மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கும் கட்டணத்தைச் செலுத்தலாம்;

24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது; உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்; யூபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம் என யூபிஐ மூலம் கிடைக்கும் பல செளகரியங்களைச் சொன்னார்கள்.

விர்ச்சுவல் ஐடி

யூபிஐ-ல் விர்ச்சுவல் ஐடி மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர் எனில், அந்த வங்கியின் மொபைல் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பெயர், உங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து புதிதாக விர்ச்சுவல் இமெயில் முகவரி ஒன்றை உருவாக்கி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள், அந்த வங்கியின் மொபைல் ஆப்ஸ் மட்டுமில்லை, வேறு ஒரு வங்கியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இது போல் பல தரப்பட்ட வசதிகள் இந்த யூபிஐ-ல் இருக்கின்றன.

பணம் அனுப்புவதைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம். இது வங்கிகளுக்கு வங்கிகள் வித்தியாசப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு வங்கியில் இருந்தும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 10,000 ரூபாய் அனுப்புகிறார் எனில், ரூ.5 என்கிற அளவில் கட்டணம் வசூலிக்கப்படு கின்றன.

இத்தனை வசதிகள் இருக்கும் என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யூபிஐ வசதியை பல வங்கிகள், கடந்த மூன்று மாத காலத்தில் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் பிரபலப்படுத்தவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை 2.5 லட்சம் பேர் மட்டுமே இந்த யூபிஐ ஆப்ஸை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஆன்லைன் மூலம் கணக்குப் பரிவர்த்தனை செய்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இருக்கும்போது, வெறும் 2.5 லட்சம் பேர் மட்டுமே யூபிஐ ஆப்ஸை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மிகக் குறைவானவர்களே இந்த யூபிஐ வசதியைப் பயன்படுத்தி வருகிறபோதிலும், அவர்களும் இந்த வசதியானது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்றே சொல்கின்றனர். உதாரணமாக, தென் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு பொதுத் துறை வங்கியின் யூபிஐ வசதியைப் பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, அதன் கஸ்டமர் ரெவியூகளைப் பார்வையிட்டோம். மிகச் சிலர் மட்டுமே இந்த வசதியைப் பற்றி நன்றாகச் சொல்லி இருந்தாலும் பலரும் தங்களது மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருக்கின்றனர்.
புகார் பட்டியல்!

‘‘இந்த ஆப்ஸ் சுத்த மோசம்; ஒருமுறை பணம் அனுப்பினால், மூன்று முறை பணத்தை எடுத்துவிடுகிறது; பணத்தை அனுப்பியவுடன், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், யாருக்கு பணம் அனுப்பினோமோ, அவருக்குப் பணம் போய்ச் சேரவில்லை; ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் எல்லாத் தகவல்களையும் கேட்கிறது. இதனால் பணம் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது’’ என்கிற மாதிரி எல்லாம் பலரும் புகார் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் புகார்களைப் படித்துப் பார்த்த அந்த வங்கி நிர்வாகம், அந்தக் குறைகளை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக புகாருக்குக் கீழேயே பதில் சொல்லி இருக்கிறது. இதேபோல டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இன்னொரு வங்கியின் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தியவர்களும் தங்கள் அதிருப்தியை கொட்டவே செய்திருக்கிறார்கள்.

‘‘இந்த ஆப்ஸ் நம்பிக்கைக்குரியதாக இல்லை; இந்த ஆப்ஸை நான் வெறுக்கிறேன். இது ஒரு மோசமான அப்ளிகேஷன்; இந்த ஆப்ஸ் வீண்; இந்த ஆப்ஸில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்; இது ஒரு நான்சென்ஸ் ஆப்ஸ்’’ என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுகிறோம்’ என பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறது வங்கி நிர்வாகம்.

யூபிஐ வசதியை எப்படிப் பயன் படுத்துவது? இப்படியொரு வசதி மக்களுக்குத் தெரியாமலே இருக்கிறதே..? சில வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டோம். சென்னை, அடையாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி அதிகாரி ஜானிடம் கேட்டோம்.

எப்படிப் பயன்படுத்துவது?

‘‘யூபிஐ ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால், எங்கள் வங்கியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் இப்போதை யூபிஐ ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் இதன் பயன் குறித்துத் தெரிவித்து வருகிறோம். எங்களுடைய வங்கி இணையதளத்திலும், மொபைல் ஆப்-லும் யூபிஐ குறித்து விளம்பரப்படுத்தி வருகிறோம். விர்ச்சுவல் ஐடியை எப்படி உருவாக்குவது, பணத்தை எப்படி அனுப்புவது, பெறுவது என அனைத்து விஷயங்களும் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கூட இந்த ஆப்-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளேன். இதில் வங்கிக் கணக்கு விவரம், ஐஎஃப்எஸ்சி கோட் என பல தரப்பட்ட தகவல்கள் எதுவும் தரவேண்டியதில்லை. என் நண்பருக்கு பணம் அனுப்ப வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே ஆனது. வங்கிச் சேவையில் எப்போதும் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், இந்த ஆப் மூலம் பணத்தை மற்றவர்களிடம் எளிதாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர் எம்.எஸ்.சந்திரமொளலியிடம் கேட்டோம்.

“யூபிஐ வசதி இப்போதுதான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ், நெப்ட்-க்கு எல்லாம் ஐஎஃப்எஸ்சி கோட் தேவை. ஆனால், இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. உடனடியாக பணத்தை அனுப்பலாம். மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது. யூபிஐ குறித்த விழிப்பு உணர்வு நன்றாகத்தான் உள்ளது.

இந்த ஆப்-ஐ இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆப்ஸை பற்றி சொன்னாலே பயப்படுகின்றனர். இதற்குக் காரணம், நம்முடைய பணம் பறி போய்விடுமோ என்ற பயம்தான்’’ என்றார்.

காலப்போக்கில் குறைகள் குறையும்!

சென்னையில் இருக்கும் ஒரு பொதுத்துறை வங்கியில் சீனியர் மேனேஜர் ஒருவருடன் பேசினோம்.
‘‘இப்போதுதான் யூபிஐ சேவையினை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். யூபிஐ பயன்படுத்துபவர்களிடம் எப்படி பயன்படுத்துவது என்ற பயம் இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், போதுமான அளவு விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

விழிப்பு உணர்வை உடனே ஏற்படுத்திவிடவும் முடியாது. மக்களிடையே யூபிஐ-யை கொண்டு சேர்க்க கொஞ்சம் காலம் ஆகும். யூபிஐ-யை பயன்படுத்துவோர் பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருப்பதாக சொல்வதற்குக் காரணம், இதற்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை இனிவரும் காலங்களில்தான் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதனை மேம்படுத்திய பின்பு சேவையில் ஏற்படும் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்” என்றார்.

இன்றைக்கு இந்தியாவில் சுமார் 34 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நல்லதொரு தரத்தில், பிழை இல்லாமலும் எளிமையான முறையிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி யூபிஐ ஆப்ஸை எல்லா வங்கிகளும் அறிமுகம் செய்திருந்தால், இந்த நேரத்தில் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு கோடி பேராவது அதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்களே! இதன் மூலம் பணத் தட்டுப்பாடு பிரச்னையை மிக எளிதாக சமாளித்திருக்க முடியுமே!

யூபிஐ ஆப்ஸில் இருக்கும் குறைகளை முழுவதுமாகக் களைந்து, அதைக் குறையில்லாத கருவியாக்கி, எல்லோரும் பயன்படுத்தும்படி பிரபலப்படுத்தினால் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்பதை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, வெறுமனே பணமில்லா பரிவர்த்தனையை செய்யுங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது! அதனால் மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்!

சோ.கார்த்திகேயன், ஞா.சக்திவேல் முருகன்,


நன்றி- நாணயம் விகடன் – 11.12.2016


No comments:

Post a Comment