தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை
சங்க வீட்டுமனைகள் ஒதுக்குவதில் முறைகேடு தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை
சென்னை: சங்க வீட்டுனைகள் ஒதுக்குவதில் முறைகேடு செய்த தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்தவர் சுந்தர் (59).
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சென்னை தட்டச்சர், சுருக்கெழுத்தர் கூட்டுறவு சங்க தலைவராகவும், வீட்டு வசதி வாரிய சங்க தலைவராகவும் இருந்தார்.
கடந்த 1997ம் ஆண்டு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், வீட்டு வசதி வாரிய சங்கத்தின் மூலம், தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என சென்னை கூட்டுறவு பதிவாளருக்கு கோரிக்கை வைத்தார்.
அதன்படி 22 ஏக்கர் நிலம் மாடம்பாக்கத்தில் வழங்கப்பட்டது. அதை 247 பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில், 38 பேருக்கு மனையை வழங்காமல் சுந்தர், தனது உறவினர்கள் பெயருக்கு முறைகேடாக மாற்றி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு சென்னை கூட்டுறவு சார்-பதிவாளர் சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தேவநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் மீது, அனைத்து தரப்பு சாட்சிகள், ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டு சிறை, 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 20.01.2017
No comments:
Post a Comment