கால் இழந்த பயணிக்கு 8 லட்சம் இழப்பீடு
சென்னை, சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஓட்டலில் பணியாற்றியவர், முகமது தாஹிர். இவர், 2014 ஏப்ரலில் சென்னை வருவதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் பயணம் செய்தார்.
ரயில் பெட்டியின் திடீர் அசைவால் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த முகமது, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையின் விளைவாக, இடது காலில் மூட்டுக்கு கீழ் பகுதியும், வலது கால் பாதமும் அகற்றப்பட்டன.
உரிய இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள ரயில்வே தீர்ப்பாயத்தில், முகமது தாஹிர் வழக்கு தொடுத்தார். தீர்ப்பாயத்தின் துணை தலைவர் முகேஷ்குமார் குப்தா, உறுப்பினர் மோகன் வழக்கை விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ், ''ரயிலில் இருந்து கீழே விழுந்ததும், பை மற்றும் ரயில் டிக்கெட் தொலைந்து போனது; உடல் உறுப்பையும் இழந்துள்ளார்; மன உளைச்சலும் அடைந்துள்ளார். தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.
தெற்கு ரயில்வே சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'படிக்கட்டில் முகமது பயணம் செய்துள்ளார்; விபத்துக்கு, ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல' என, கூறப்பட்டது.
இதையடுத்து, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'ரயிலில் இருந்து மனுதாரர் கீழே விழுந்துள்ளார்; இதை, ரயில்வே மறுக்கவில்லை.
'முகமது தாஹிருக்கு, எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆறு சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 27.01.2017
No comments:
Post a Comment