கட்ட பஞ்சாயத்து : போலீஸ் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: காசோலை மோசடி வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பும் போது அதை கொடுத்தவருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுண்டு. குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் போது, 'பிடிவாரன்ட்' பிறப்பிப்பதும் உண்டு.
அப்போது, போலீசார் தான், காசோலை கொடுத்தவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
அவ்வாறு, பிடிவாரன்ட் பிறப்பிக்கும் போது போலீசார் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக, (ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலமாக) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு: காசோலை மோசடி வழக்குகளில், கட்டப் பஞ்சாயத்து செய்து போலீஸ் மூலம் பணத்தை பெறுவதற்கு, புகார் கொடுத்தவர் உத்தரவாதம் பெறுகிறார்.
பின், வாரன்டை அமல்படுத்தாமல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்; அதன் மூலம் நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கின்றனர்.
எனவே, இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, போலீசாருக்கு, டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்க, இந்த உத்தரவின் நகலை, டி.ஜி.பி.,க்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 27.01.2017
No comments:
Post a Comment