நீட் நுழைவுத்தேர்வு
மருத்துவம் படிக்க ஆர்வமா? ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகுங்கள்!
இதோ… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். அடுத்து என்ன படிக்கலாம் என அவர்களோடு சேர்ந்து பெற்றோரும் யோசிக்கும் நேரம் இது.
பெரும்பாலானோரின் கனவு மருத்துவக் கல்விதான். ஆனால், அதிக மதிப்பெண் மட்டுமே போதாது என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது. சி.பி.எஸ்.சி நடத்துகிற `நீட்’ தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுத வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால்தான் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியும்.
`இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வ தற்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையின் அடிப்படையில், இத்தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய
அரசு கடந்த ஆண்டு இதைச் சட்டமாக்கியது. தமிழக அரசின் கோரிக் கையை ஏற்றுக் கடந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மீண்டும் தமிழக அரசு மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, `நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கேட்டுவருகிறது. ஆனால், கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் கறாராக `நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கு மாணவர் களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டது. ஆகவே, இந்த ஆண்டு `நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர முடியும் என்பதையும், `நீட்’ தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கவுன்சலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
இதற்கேற்ப, `நீட்’ தேர்வு தமிழ்மொழி யிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் `நீட்’ தேர்வுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்லி இருக்கிறார்.
நீண்ட காலமாக `நீட்’ தேர்வு குறித்து தமிழ கத்தில் குரல் கொடுத்துவரும் மருத்துவரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதுபற்றிப் பேசினோம். “தமிழ்நாட்டில் ஏற்கெனவே மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதே அடிப்படை யில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்.
ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி வந்தது. இதைத்தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் கீழ் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என ஒவ்வொன்றும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கை நடத்தின. இதன் மூலம் மாணவர் கள் பல நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவ தும், மன அழுத்தத்துக்கு உள்ளாவதுமாக இருந்தார்கள். அதோடு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அவர்களுக்கு உகந்த வகையில் கட்டணம் நிர்ணயித்து இருந்தார்கள்.
இதனை எல்லாம் கருத்தில்கொண்டே பல நுழைவுத்தேர்வுகளுக்கு மாற்றாக மத்திய அரசு நடத்தும் ஒரே நுழைவுத்தேர்வே சரி யானது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருக்கிறது. `நுழைவுத்தேர்வே நடத்தக்கூடாது’ என்று மீண்டும் கோரிக்கை வைத்தால், அது பின்னோக்கிச் செல்வதா கவே அமையும்.
தமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பிடிக்க இந்த நுழைவுத் தேர்வு சரியான வழிதான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சேர முடியும். புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம், ராணுவ மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் என 24 ஆயிரத்துக்கும் அதிக இடங்களில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த ஆண்டு ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் `நீட்’ தேர்வு எழுதி இருக் கிறார்கள். இதில் நான்கு லட்சம் பேர் கட் ஆஃப் மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள்.
தமிழ்வழி கற்கும் மாணவர்கள் தமிழில் `நீட்’ தேர்வு எழுதுவதன் மூலம் எளிதில் அதை எதிர்கொள்ள முடியும். என்றாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பழைய பாடத்திட்டத்தையே படித்து வருகிறார்கள் இதனை நிச்சயம் மாற்ற வேண்டும். `நீட்’ தேர்வில் மத்திய அரசு பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.சி) இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதால், அதற்கு இணையான பாடத்திட்டம் தமிழ்நாட்டிலும் வேண்டும்.
`நீட்’ தேர்வால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்களும் பின்னடைவும் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை அளிக்கிறார் ரவீந்திரநாத்.
நீட் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகி, மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறக்கூடும். பொதுத்தேர்வுக்குப் பின்னர், இரண்டு மாத கால அவகாசமே உள்ள சூழலில் `நீட்’ தேர்வுக்கு தயாராவது எப்படி?
மொத்தம் 180 கேள்விகள். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 45 கேள்விகள் இடம்பெறும். சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள். தவறு எனில் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். அதனால் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வது அவசியம்.
ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட நூல்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். ப்ளஸ் ஒன் பாடப்புத்தகத்தில் இருந்து 50% கேள்விகளும், ப்ளஸ் டூ பாடங்களில் இருந்து 50% கேள்விகளும் கேட்கப்படுகின்றன. என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்டுள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ புத்தகங்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கேள்வித்தாள் மற்றும் விடைகள் உள்பட இணையத்தில் `நீட்’ தேர்வுக் கான மாதிரி கேள்வித்தாள்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை டவுன்லோடு செய்து மாதிரித்தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதன் மூலம் எந்தெந்தப் பிரிவுகளில் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை அறிந்து, கூடுதல் கவனம் செலுத்த முடியும். கேள்விகளை சற்று நீளமானதாகவும், கணக்கீட்டே பதிலை தேர்ந்தெடுக்கும் வகையிலும் அமைத் திருக்கிறார்கள். பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மாதிரித்தேர்வு நடத்துகின்றன. அதில் கலந்துகொண்டு நீங்கள் எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துக்கொள்ளலாம்.
படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்புகளை தேர்வுக்குச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு திரும்பப் பார்க்கும்போது நிச்சயம் உதவும்; நேரமும் மிச்சமாகும்.
`நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் குறிப்பிடவேண்டி இருக்கும். அதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே விண்ணப்பித்துப் பெறுவது அவசியம்!
அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரம் ரூபாய் கட்டணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம். சுயநிதி கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் மட்டுமே. ஆனால், பல்வேறு கட்டணங்கள் வழியாக ரூபாய் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை கல்விக் கட்டணம் பெறப்படுகிறது.
நன்றி : அவள் விகடன் - 24.01.2017
*****************************************************************
’நீட்’ தேர்வை 3 முறை எழுதலாம்!
மருத்துவ பொது நுழைவுத் தேர்வான ’நீட்’ தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த யூ.ஜி.சி., ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.
பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் ’நீட்’ தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம்.
யூ.ஜி.சி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017
No comments:
Post a Comment