அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், தொடரும் தடை
தமிழகத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக வீட்டு மனை ‘லே – அவுட்’ ஆக மாற்றப்பட்டு, அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்ட நிலையில், விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதேசமயம், ‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை, மறு பத்திரப் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்வதற்கு கூடுதல் விவரங்களைக் கேட்டனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். கூடுதல் விவரங்களை அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தது.
இந்த நிலையில், இந்த பிரச்னையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வக்கீல் யானை ராஜேந்திரன், புதிதாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘முறையாக அங்கீகாரம் பெற்று வீட்டுமனைகளை உருவாக்கவேண்டும் என்றால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதை செய்யாமல், முறைகேடாக லே -அவுட்களுக்கு அங்கீகாரம் பெற்றுவிடுகின்றனர். எனவே, மனைகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாகக் கிடந்தால், அதை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கானது கடந்த 9-ம் தேதியன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ஒருவர், ‘‘பல அடுக்கு மாடி வீடுகளை என் கட்சிக்காரர் கட்டி உள்ளார். பத்திரப் பதிவுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், இந்த வீடுகள் எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளன’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘அந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையா?’’ என்று கேட்டனர். அதற்கு, ‘‘அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை’’ என்றார் வக்கீல்.
‘‘இப்படி விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டினால் விவசாயம் என்னவாகும்? நாளை உணவுக்கு என்ன செய்வீர்கள்?’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
அப்போது மற்றொரு வக்கீல், ‘‘உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினால், நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் இருவர் இறந்துள்ளனர்’’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘நிலத்தை வாங்கும் போது அது எந்த வகையானது என்று பார்க்க வேண்டும். அதைச் செய்யாமல், இதுபோன்ற குற்றச்சாட்டைச் சுமத்தக்கூடாது. இவர்களுக்காக சட்டத்தை வளைக்க வேண்டும் என்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘‘உயர் நீதிமன்றம் தடை விதித்ததால்தான், சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டன. மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அண்மையில் அறிவித்தது. இந்தப் பணத்தை மாற்ற கால அவகாசமும் வழங்கியது. இந்த கால அவகாசத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக உள்ள விவசாய நிலத்தை வாங்கி இருப்பார்கள். நீதிமன்றம் விதித்த தடையால் இந்த விளைநிலங்கள் தப்பித்துள்ளன’ என்றார்.
தமிழகத்தில் நிலங்களை எவ்வாறு வகைப்படுத்துவது, அங்கீகாரமற்ற மனைகளை எவ்வாறு வரையறை செய்வது என்பது குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் இருவார கால அவகாசம் கேட்கப் பட்டதால், இந்த வழக்கு விசாரணை வருகிற 30–ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அங்கீகாரம் இல்லாத வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
வரும் முறையாவது தமிழக அரசின் சார்பில் சரியான திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே லட்சக்கணக்கான வர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் எவ்வளவு?
11.00% – தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாறியுள்ள விளைநிலங்கள்.
25 லட்சம் ஏக்கர் – லே அவுட்களுக்காக தமிழகம் முழுக்க அழிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள்.
13.28 லட்சம் – தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளின் எண்ணிக்கை.
நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017
No comments:
Post a Comment