disalbe Right click

Wednesday, January 11, 2017

பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!


பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!

பணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும்.
ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது.

நேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது.

பிட்காயின் சூத்ரதாரிகள்!  

மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும்,  அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார்.
இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன.  ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம்.

ஸ்பெஷல் அம்சங்கள்! 

கணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு  டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது.
இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).

எங்கேயும் எப்போதும்! 

இவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில்  அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம்.
நாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

உருவமில்லா பணம்!

கணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை  என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001)  என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர்.  ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.
பிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும்.

யாருக்கும் தெரியாது! 

சட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்?
காரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது? போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்தின் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது.

இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை  மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

ப்ளாக் செயின்! 

பிட்காயினை உருவாக்க, அதன் பரிவர்த்தனை களைப் பதிவு செய்ய, பிட்காயினைச் சேர்த்து வைக்க ஒரு ஒருங்கினைந்த மென்பொருள் உண்டு. இந்த மென்பொருளை பிட்காயின் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து வைப்பார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் ஓப்பன் லெட்ஜர் முறையில் எல்லாருக்கும் தெரியும் வகையில் கணக்கில் வைக்கப்படும்.

அதாவது, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் ஆர்வலர்களுக்கும் தெரியும் வகையில் ஓப்பன் லெட்ஜரில் பதிவு செய்யப்படும். இந்த ஓப்பன் லெட்ஜரின்  பிரதி, எல்லா பிட்காயின் ஆர்வலர்களின் கணினியிலும் இருக்கும். எனவே, யாருக்கும் தெரியாத வகையில் பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும்  நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக்  ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில்  சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

பிட்காயின் ஆர்வலர்கள், ஒவ்வொரு ப்ளாக் உருவாக்கத்திலும் ஒரு  கணக்குக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அதிநவீன கணினியைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பொருள் மற்றும் நேரத்தை செலவு செய்யவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விடை சரிதானா என்பதை எளிதில் உறுதி செய்யலாம். ஆனால், விடையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது.

எனவே, ஒரு கணக்குக்கான செய்முறையை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த ப்ளாக் செயினில் உள்ள பதிவுகளை மாற்றி, போலியான பிட்காயினை உருவாக்க முடியும். இதை செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு செலவு செய்தாலும் அதற்கு இணையான போலி பிட்காயினை உருவாக்கக்கூடிய அளவுக்கு  அந்த ப்ளாக்கில் பிட்காயின் இருக்காது. எனவே, போலி பிட்காயினை உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

பிட்காயினின் எதிர்காலம்!

இதுவரை எந்த நாடும் பிட்காயினை ஒரு பணமாக ஏற்கவில்லை. இதனை ஒரு பொருள் என்று கூறி, இதன் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் லாபம், வருவாய்க்கு வரி வசூலிக்க சில நாடுகள் முனைந்துள்ளன. தாய்லாந்து,  பிட்காயினை சட்டவிரோதப் பணம் என்று அறிவித்துள்ளது. பிட்காயினை ஏற்காத சீனாவில் பிட்காயினின் வளர்ச்சி வேகமாக உள்ளது. பிட்காயின் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் முன்னணியில் சீனா உள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பிட்காயினை சட்டரீதியாக ஒரு பணம் என்று ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பிட்காயின் பரிவர்த்தனையில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தாமாகவே முன்வந்து தனது பிட்காயின் கணக்கின் அடையாள முகவரியைக் கொடுக்கலாம்.

தவிர, பிட்காயின் மென்பொருள் என்பது ஒரு பொதுப் பொருள். எனவே, இதில் உள்ள தகவல்களை அரசு பெறவேண்டும் என்றால், அதனைப் பயன்படுத்தும் அனைவரையும் அதற்கு அனுமதிக்க வேண்டும். பிட்காயின் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இவ்வாறான அனுமதி பெறுவது  என்றுமே சாத்தியமில்லை.

எனவே, பிட்காயின் போன்ற கணினிப் பணம் ஒரு மாற்றுப் பணமாக உருவெடுக்க முடியாது, அதே நேரத்தில், பிட்காயின் பயன்பாட்டின் வளர்ச்சி, அரசுப் பணத்தில் உள்ள குறைகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குறைகளை நீக்குவது அவசியம் என்று இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  அந்த வகையில், பிட்காயின் மூலம் நாம் பெற்ற ஓப்பன் லெட்ஜர், ப்ளாக் செயின் தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்!
000000000000000000000000000000000000000000000000000000000000000
12 விதமான கணினி பணம்!

Litecoin, Peercoin, Primecoin, Namecoin, Ripple, Sexcoin, Quark, Freicoin, Mastercoin, Nxt, Auroracoin, Dogecoin என்று 12 விதமான கணினிப் பணங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிட்காயின் உருவானபின் வந்த கணினிப் பணங்கள்.

இவை பிட்காயினிலிருந்து சற்று மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. அதில் ஐந்து வகை பணங்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. புழக்கத்தில் உள்ள கணினிப் பணங்களில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிட்காயின்தான் உள்ளது.

இராம சீனுவாசன் , 
இணைப் பேராசிரியர்,
பொருளாதார அளவியல் துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம்

நன்றி : நாணயம்விகடன் – 04.12.2016

No comments:

Post a Comment