தவறான சொத்து விபரம் தந்த கவுன்சிலர்
நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு உத்தரவு
சென்னை: 'சொத்துக்களே இல்லை என, வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்த, முன்னாள் கவுன்சிலர் மீது, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த, பொன்.தங்கவேலு தாக்கல் செய்த மனுவில், 'சென்னையில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு, தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்' என, கோரியிருந்தார்.மனுவில், 196வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துக்களுக்கு, சொத்து வரி மிக குறைவாக விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், தேர்தலின் போது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்படி, உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
'தனக்கு சொத்து ஏதும் இல்லை' என, வேட்பு மனுவில், அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். ஆனால், 12 சொத்துக்கள் இருப்பதாக, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கை, தலைமை நீதிபதியின் விசாரணைக்கு, நீதிபதி கிருபாகரன் அனுப்பி வைத்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் அதிகாரியிடம், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அண்ணாமலை தாக்கல் செய்த ஆவணங்களில், அசையா சொத்துக்கள் இல்லை என, குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏராளமான சொத்துக்களை வைத்திருந்தும், ஒன்றுமே இல்லை என, கூறியிருப்பதை நிராகரிக்கிறோம். சொத்து விபரங்களை தெரிவிக்காமல் இருந்துள்ளார். எனவே, சொத்து விபரங்களை தெரிவிக்காமல் இருந்ததற்காக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்பு மனுவில் மட்டும் சொத்து விபரங்களை தெரிவிக்க மறந்தாரா அல்லது வருமான வரி துறைக்கு தாக்கல் செய்த கணக்கிலும் மறந்தாரா என்பதை, வருமான வரித்துறை சரிபார்க்க வேண்டும். அனுமதியின்றி, அவர் மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும்; அதற்கு போலீசார் உதவ வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை, மார்ச், 2க்கு தள்ளி வைத்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017
No comments:
Post a Comment