disalbe Right click

Wednesday, January 11, 2017

உதவித்தொகையுடன் M.Sc படிக்கலாம்!


உதவித்தொகையுடன் படிக்கலாம் 
மாதம் ரூ.5000-த்துடன் எம்.எஸ்சி. படிப்பு
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேர வகை செய்கிறது ‘நெஸ்ட்’ நுழைவுத் தேர்வு (National Entrance Screening Test-NEST). இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் (Centre for Excellence in Basic Science) ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் (உயிரியல், வேதியியல், கணிதம்) சேரலாம்.

தேவையான தகுதி
இந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு புராஜெக்ட் பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்களும், 2017-ல் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.8.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

என்ன கேட்பார்கள்?
புவனேஸ்வரம் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 170 இடங்களும், மும்பை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் 45 சீட்டுகளும் உள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உண்டு. 

நுழைவுத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மே மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 16-ல் வெளியிடப்படும். 

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உள்பட அனைத்து விவரங்களையும் நெஸ்ட் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.01.2017

No comments:

Post a Comment