வழக்கிலிருந்து விடுவிக்க Rs.10 ஆயிரம் லஞ்சம்
மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய தேரடி தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி பஷீர்கனி (56). இவர், பழவேற்காடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம் ₹45 லட்சம் கடன் பெற்றிருந்தார். ஆனால், அந்த பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தர்மலிங்கம், திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி., சாம்சனிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிந்து, பொன்னேரி பஷீர்கனியை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கில் பஷீர்கனியின் மகன் ராஜ்கிரண் (35) என்பவரும் உள்ளதால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ₹10 ஆயிரம் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் கேட்டுள்ளார். மேலும், அந்த பணத்தை மணவாளநகரில் உள்ள தனது வீட்டில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்கிரண், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சிவபாதசேகரன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் ₹10 ஆயிரத்தை ராஜ்கிரணிடம் கொடுத்து, அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி கூறினர்
.
அந்த பணத்தை மணவாளநகரில் உள்ள குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கநாதனிடம் கொடுத்தபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய இன்ஸ்பெக்டரே லஞ்சம் பெற்று பிடிபட்டு கைதான சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 27.01.2017
No comments:
Post a Comment