disalbe Right click

Thursday, January 12, 2017

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்கு சேரும்?
எனது  நண்பர் ஒருவர் பெருந்தொகையை வங்கி  ஒன்றில்  'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட் தொகைக்கு தன்னுடைய  இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார். வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. 
நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு அந்த டெபாசிட் தொகை சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் நண்பருக்கும் பிறந்த வாரிசுகளுக்கும் சேர வேண்டுமா என்பதில் பயங்கர குழப்பம். 
(முதல் மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்குமே அந்த டெபாசிட் தொகை சேர வேண்டும். இரண்டாவது மனைவி வாரிசு அல்ல.)
இப்படி ஒரு பிரச்னை  என்றால் எனது இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியான பிரச்சனை. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவரது மனைவி இறந்துவிட்டார்.  தன்னுடைய குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என்று நினைத்து, தனது நெருங்கிய  உறவினர் ஒருவரை  அவரது சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் நாமினியாக நியமித்திருந்தார்.  
தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உறவினர் மூலமாக தனது சொத்துக்கள், தன்னுடைய குழந்தைகளுக்கு சிக்கல் இல்லாமல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு. நல்ல முன்னேற்பாடுதான்.
ஆனால் என்ன நடந்தது?  திடீரென மறைந்த நண்பரின்  குழந்தைகளுக்கு எதுவும் கொடுக்காமல் அந்த சொத்துக்கள் முழுவதையும்  அபகரிக்கப் பார்த்தார் அந்த நெருங்கிய உறவினர்.
இது போன்ற பிரச்னைகள் எழுவதற்கு மிக்கிய காரணம் நாம் நாமினி குறித்து  தெரிந்து  கொள்ளாததுதான். 
ரத்த சம்பந்தம் உள்ள மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தால், அல்லது எவரையும் நாமினியாக நியமிக்காவிட்டால், சொத்துக்குரியவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. 
நாமினிக்கு  என்று சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, இருக்கிறது? கடமைகள் என்ன இருக்கிறது?, வாரிசுகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது?  என்பதை தெரிந்து கொள்வோம், வாருங்கள்! 
யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
'ஒருவர்  மூன்றாம் நபரை தனது சொத்துக்களுக்கு நாமினியாக நியமித்துவிட்டு இறந்துவிட்டார் என்றால், அவரது சொத்துக்கள் முதலீடுகள், சேமிப்புகள், ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? 
எந்தவித ஆட்சேபனையும் வாரிசுகளிடமிருந்து இல்லாதபோது பலன் அல்லது முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும்.  வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் நீதிமன்றத்தை அணுகி  உத்தரவு பெற்று வருபவரிடம் அவைகள் ஒப்படைக்கப்படும்.
நாமினி நியமிக்கப்படவில்லை என்றால்?
 நாமினியை நியமிக்காமலே ஒருவர் இறந்துவிட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது அவரது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் உரிமை உடையவர்களோ அவர்களுக்குப் போய் சேர்ந்துவிடும்.
 நாமினி என்று யாரையுமே ஒருவர் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் அவரது சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். 
நாமினி என்று யாரையும் நியமிக்காத சூழ்நிலையில் இருக்கின்ற வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு  ”ஆட்சேபணை இல்லாச் சான்றிதழ்” வழங்கி அதன்மூலம் சொத்துக்களையோ முதலீட்டையோ பெற்று பின்பு அனைவரும் பிரித்துக் கொள்ளலாம்.
சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் உரியவர்கள் அதற்குரிய பலனைப் பெற முடியும்.
நாமினியாக யாரை நியமிக்கலாம்?
வாரிசு என்று ஒருவர் இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் நாமினி நியமிப்பது அவசியம்தான்.  நாமினியாக யாரை நியமிக்க வேண்டும்?, நாமினியாக யாரை  நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் சட்டத்தில்  இல்லை. இருந்தபோதிலும், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது மனைவியை (spous)  நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறையில் உள்ளது.
மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கலாமா?
நாமினியாக மூன்றாம் நபரை  ஒருவர் நியமிக்கும்போது, சட்டரீதியான பல கேள்வியும் சந்தேகங்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எழும். 
 எடுத்துக்காட்டாக,  ஒருவர் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினர் அல்லாத மூன்றாம் நபர் ஒருவரை அதற்கு நாமினியாக நியமிக்கும்போது, இது போன்ற சந்தேகம் வரும். ஒருவேளை பாலிசி எடுத்த நபருக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால் நாமினி மீது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  இப்படி ஒரு சந்தேகம் அவர்களுக்கு எழும் சமயத்தில் நாமினியிடம்  கொடுக்காமல்,  உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வாரிசுகளிடமே பணத்தைக் ஒப்படைப்பார்கள்.
நாமினி சொத்துக்களை அபகரிக்க நினைத்தால்?
ஒருவர் ஏதோ ஒரு சூழ்நிலையில் ரத்த சம்பந்தமில்லாத ஒரு நபரை நாமினியாக நியமித்து விட்டு திடீரென்று இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை அல்லது முதலீடுகளை நாமினியாக இருக்கும் நபர் அபகரிக்க நினைத்தால், வாரிசுதாரர்கள் அதனை  தடுப்பது எப்படி? இது போன்ற சூழ்நிலையில்  வாரிசுதாரர்களின் என்ன செய்ய வேண்டும்?
சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அவற்றை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, வாரிசுதாரர்கள் நீதிமன்றத்தைத்தான்  நாடவேண்டும். வேறு வழியில்லை.
இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களின் மூலம் நிரூபித்தால்,  இறந்தவரின் சொத்துக்களை அல்லது முதலீட்டை  வாரிசுகளிடம் ஒப்படைக்க  நீதிமன்றம் நாமினிக்கு உத்தரவிடும்.
நாமினியின் அதிகாரம் என்ன?
 என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், ரத்த சம்பந்தமில்லாத ஒருவருக்கு, இறந்தவரின் சொத்தில்  எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நாமினியாக நியமிக்கப்பட்டவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 
சொத்துக்களையோ அல்லது முதலீட்டையோ  வாரிசுகளிடம் ஒப்படைக்கும்  கடமை மட்டுமே அவருக்கு உண்டு! அவர் ஒரு காவல்காரர். அவ்வளவுதான்! 
அதே நேரத்தில் ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட  மகன்களோ அல்லது மகள்களோ  இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வி எழும். 
வாரிசாகவும், நாமினியாகவும், ஒருவரே இருக்கும்போது பிரச்னை ஏதும் எழ வாய்ப்பு இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவரை மட்டும் நாமினியாக நியமித்தால்,  குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசுகள் எவரும் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகளில் யாராவது ஒருவர் ஆட்சேபனை செய்தால்கூட  நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
நாமினி இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்து விட்டாலோ அல்லது பைத்தியம் பிடித்திருந்தாலோ  நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு அது சமமாகும். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாகவே வாரிசுகளிடம் சொத்துக்கள்  அல்லது முதலீடுகள் கொடுக்கப்படும். 
அசையும் சொத்துக்களில் நாமினி பெயர்
சிக்கல் எதுவும் இல்லாமல், மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஒருவர் இழப்பீடு பெறுவத்ற்கு,   நாமினி பெயரை  கட்டாயம் குறிப்பிட வேண்டும்  என்று (Insurance Regulatory and Development Authority)  ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பொதுக் காப்பீடு (ஜெனரல் இன்ஷூரன்ஸ்) நிறுவனங்களுக்கும் அந்த அமைப்பு அறிக்கையும் அனுப்பி உள்ளது. 
 தற்போது சட்டப்படியான வாரிசுகளுக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் இழப்பீட்டுத்  தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்  இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆண்டு கணக்கில் தாமதமாகிறது. அதை தவிர்க்கவேண்டும் என்பதற்காக நாமினி நியமிப்பது அவசியம் என்பதை ஐ.ஆர்.டி.ஏ. வலியுறுத்தி அதனை கட்டாயமாக்கியும் இருக்கிறது.
எந்தவிதமான  முதலீடு செய்தாலும், நாமினி என்பது ஒரு முக்கியமான விஷயம்.  பி.எப். எனப்படுகின்ற பிராவிடண்ட் பண்ட்டிற்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். 
பலர் வேலைக்குச் சேரும்போது  திருமணம் ஆகாமல் இருந்திருப்பார்கள். அதனால், அப்போது பெற்றோர்களின் பெயரை நாமினியாக பி.எப்-ல்  காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணம் ஆன பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியமானதாகும். 
அதைப்போல, நாம் நாமினியாக  காட்டியவர் திடீரென இறந்துபோய்விட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது முக்கியமாகும் . 
நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்றோ அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ ஒருவர் தனது புதிய நாமினியை நியமிக்கலாம். 
இந்த கட்டுரையை நான் எழுத காரணமாக இருந்த நண்பர் வழக்கறிஞர் திரு  Leenus Leo Edwards​ அவர்களுக்கு நன்றியுடன் இதனை சமர்ப்பிக்கிறேன்.

No comments:

Post a Comment