பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு)திருத்தச் சட்டம்-2016
ஆட்டம் போடும் பினாமிகளும் திருத்தப்பட்ட தடுப்புச் சட்டமும்!
பண மதிப்பு நீக்க நடவடிக் கையின் பாதிப்பு நீங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இப்போது பினாமிகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
ஆனால் இதற்கான சட்டம் இந்த நடவடிக்கைக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
சொத்துக்கான உரிமை ஒருவரிடம்; ஆனால், பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வசதியாக வேறு ஒருவர் பெயரில் எழுதித் தருவது. அதாவது, உண்மையான உரிமையாளர் ஒருவர்; போலியாக அல்லது பொய் யாகப் புனையப்பட்ட உரிமை யாளர் மற்றொருவர். இவர்தான் பினாமி.
இத்தகைய பினாமி நடவடிக் கைகளைத் தடுப்பதற்காக 1988-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பல மாற்றங்களைச் செய்து, ‘பினாமி நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த சட்டம் 2016' கொண்டு வரப்பட்டுள்ளது.
2016 ஆகஸ்ட் 10 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற இச்சட்டம், அரசு இதழில் (‘கெஜட்') வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டது. இச்சட்டத்தின் அவசரம் அவசியம் கருதி, மறுநாளே (ஆகஸ்ட் 11) இதனை அரசிதழில் வெளியிட்டது.
``சொத்துக்கான ‘விலை’யை ஒருவர் வழங்கி, உடனடி (அ) எதிர்கால, நேரடி (அ) மறைமுக நன்மைக்காக, இந்தச் சொத்தின் உரிமை வேறு ஒருவரிடம் தரப்பட்டால்,
யார் இந்த சொத்தை வைத்துக் கொள்கிறாரோ அல்லது இச்சொத்தின் மீது தனது ‘பெயரைப் பயன்படுத்திக் கொள்ள' யார் அனுமதிக்கிறாரோ, அவர் ‘பினாமி’ ஆகிறார்.
சில விதி விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று - ‘குடும்பச் சொத்தாக இருந்து, குடும்பத் தலைவர் ('கர்த்தா') சொத்துகளை நிர்வகிப்பவராக இருந்தால், அவர், ‘பினாமி' ஆகமாட்டார்'. இது குடும்பங்களுக்குத்தான் செல்லுபடி ஆகும்; ‘குடும்பம் மாதிரியான' அமைப்புகளுக்கு அல்ல!
இந்த சட்டம், தனி நபர்களுக்கு மட்டுமல்ல நிறுவனம், கூட்டு வியாபாரம், ‘தனிநபர்களின் சங்கம்'... என அனைத்துக்குமே பொருந்தும்.
`சொத்து’ என்பது நகரும், நகரா; கண்ணுக்குப் புலப்படும், புலப்படா எல்லாவகை சொத்துகள்; எல்லாவித ‘உரிமைகள்', சட்டபூர்வ ஆவணங்கள், சாதனங்கள் ஆகியன அனைத்தும் அடங்கும்.
மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய சொத்துகளாக இருந்தால், மாற்றப்பட்ட வடிவமும் அதன் மூலம் ஏற்படும் பயன்களும் கூட இப்பிரிவின் கீழ்,`சொத்து' ஆகும்.
`பினாமி’ நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஒரு ஆண்டு முதல் 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மேலும், பினாமி சொத்தின் ‘சந்தை' மதிப்பில், 25% அபராதம் விதிக்கப்படும்.
வேண்டுமென்றே தவறான தகவல் அல்லது தவறான ஆவணம் தருவோருக்கு 6 மாதங்களுக்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் மற்றும் சொத்தினுடைய ‘சந்தை’ மதிப்பின் 10% அபராதம் விதிக்கிறது இச்சட்டம்.
ஒரு பினாமிதாரர், அதன் பிறகு வேறு ஒரு பினாமிதாரருக்கோ, அல்லது முதல் உரிமையாளருக்கோ கூட பினாமி சொத்துகளை மாற்ற முடியாது.
பினாமி நடவடிக்கைகளின் மீது ‘செயல் புரிய’, தீர்மானிக்கிற பொறுப்பாளர்களை (adjudicating authorities) மத்திய அரசு நியமிக்கலாம்.தேவைப்பட்டால் மத்திய அரசு, மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விரைந்து தீர்வு காணலாம்.
பினாமி சொத்துகளாக தீர்மானிக்கப்படுபவை மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட நேரிடும். ‘பினாமி'களுக்கு எதிரான சட்டம் தயாராகி விட்டது. நடைமுறைக்கும் வந்து விட்டது. முகமூடிகளின் கதைகள் முடிவுக்கு வரும் என்று நியாயமாக எதிர்பார்க்கலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 22.02.2017
No comments:
Post a Comment