நன்கொடை பெற கட்சிகளுக்கு கட்டுப்பாடு
நன்கொடைகளுக்கு கட்டுப்பாட்டால் அரசியல் கட்சிகள்...
கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
புதுடில்லி: அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல், ரொக்கமாக நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வழங்கப்படும் தொகை அனைத்தும், காசோலை அல்லது டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவதை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி, சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரிச்சலுகை
அதன்படி, அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய் வரை மட்டுமே, ரொக்கமாக நன்கொடை பெற முடியும். அதற்கு மேலான தொகையை, காசோலை அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே பெற முடியும்.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையை பத்திரங்களாக வழங்க, வங்கிகளில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். அதாவது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்பும் நபர், வங்கிகளில், அதற்கான தொகையை செலுத்தி, அந்த தொகைக்குநிகரான பத்திரங்களை பெறலாம்.
பத்திரங்களைப் பெற, காசோலை அல்லது டிஜிட்டல் முறையில் மட்டுமே, வங்கிகளில் பணம் செலுத்த வேண்டும். அந்த பத்திரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின், வங்கிகள் மூலம், அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
கறுப்பு பணப் பதுக்கல்ஒழிக்கப்படும்
நன்கொடை வழங்குபவர் மற்றும் நன்கொடை பெறும் அரசியல் கட்சி ஆகிய இரு தரப்பினரும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால், இரு தரப்பினருக்கும் வரிச்சலுகை வழங்கப்படும். பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கப்படுவதால், அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். முறைப்படுத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யப்படுவதால், கறுப்பு பணப் பதுக்கல் ஒழிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான நன்கொடை, முகம் தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்படுவதால், அவற்றுக்கு கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நன்கொடை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து, பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
நன்கொடையில் கலக்கும் காங்கிரஸ்
கடந்த, 2004- - 05 நிதி ஆண்டு முதல், 2014 - 15ம் நிதி ஆண்டு வரை, தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது
. இதில் நன்கொடை, சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்.
இதன்படி, 10 ஆண்டுகளில், தேசிய, மாநில அரசியல் கட்சி களின் மொத்த வருவாய், 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய்.
இதில், 3 ஆயிரத்து 982 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, காங்., கட்சி முதலிடம் பிடித்தது.
2வது இடம், பா.ஜ.,க்கு கிடைத்தது. அதன் வருவாய் 3 ஆயிரத்து 272 கோடி ரூபாய்.
2வது இடத்தில் தி.மு.க.:
மாநில கட்சிகளில், சமாஜ்வாதி, தி.மு.க., முறையே முதல் இரு இடங்களை பிடித்தன.
அவற்றின் வருமானங்கள் முறையே, 819 கோடி மற்றும் 203 கோடி ரூபாய். அ.தி.மு.க., 165 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, 3வது இடம் பிடித்துள்ளது.
அறியாத நபர்கள்:
கட்சிகளின், 69 சதவீத வருவாய், அறியாத நபர்களிடமிருந்து பெற்ற நன்கொடை மூலம் கிடைத்து உள்ளது.
அதாவது, 20 ஆயிரத்திற்கும் அதிகமான நன்கொடை வழங்கினால் மட்டுமே விபரங்களை அளிக்க வேண்டும்.
20 ஆயிரத்துக்கு கீழ் நன்கொடை அளித்தவர்களிடமிருந்து, கட்சிகள், 7 ஆயிரத்து 833 கோடி ரூபாய் பெற்றுள்ளன.
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017
No comments:
Post a Comment