அரசு அலுவலர்கள் மீது வழக்கு
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இவர்களில் யார் மீதாவது விசாரணை நடத்த உயரதிகாரிகளிடத்தில் குடிமகன் அனுமதி கோரினாலோ அல்லது வழக்கு தொடர கோரினாலோ 3 மாதத்திற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி அனுமதி கோரினார்.
இதற்கு சுப்பிரமணியசாமிக்கு காலதாமதமாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரி சுப்பிரமணியசாமி கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார்.
அதற்கு கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது. இதையடுத்து காலதாமதமாக பதில் அளித்த பிரதமர் அலுவலகத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள மனுவில் ராசாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு பிரதமர் அலுவலகம் 16 மாதங்கள் கழித்துத்தான் அனுமதி அளித்தது.
இது கால விரையமாகும். அதனால் அனுமதி அளிக்க ஒரு குறிப்பிட்ட காலவரம்பை சுப்ரீம்கோர்ட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதோடு அதன் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் 16 மாதகாலமாக ஆ.ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
இரு தரப்பினர்களிடையே சூடான விவாதம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட பின்னர் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
யாராவது அரசு ஊழியர், அதிகாரி, அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை கோரியோ,வழக்கு தொடர அனுமதி கோரியோ, எந்த குடிமகனாவது அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால் அவர்கள் 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் 4-வது மாதத்தில் அனுமதி அளித்ததாக கருதி அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினபூமி நாளிதழ் - 01.02.2012
No comments:
Post a Comment