disalbe Right click

Friday, February 10, 2017

ராஜினாமாவை திரும்பப் பெற முடியுமா?


ராஜினாமாவை திரும்பப் பெற முடியுமா?

சட்டம் என்ன சொல்கிறது?

தமிழகத்தின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், சில நாள்களுக்கு முன் திடீரென்று தனது முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

அதுதொடர்பான தனது ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுக்க, அதை அவர் ஏற்றுக்கொண்டும்விட்டார். ஆனால், அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும்படி பன்னீர்செல்வத்தை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி தன்னிடம் இருந்து ராஜிநாமா கடிதம் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார். இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு கூடியது. அன்று முதல் இன்றுவரை ஒரே பரபரப்புதான்.

இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பன்னீர்செல்வம், அந்த ராஜிநாமாவை வாபஸ் பெற முடியுமா என்ற கேள்வி பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதோ சட்டத்தில் இருக்கும் அதற்கான பதில்…

பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் என்பவர் ஒரு அரசு ஊழியர்தானே. அப்படியென்றால், கீழ்க்கண்ட வழக்கின் தீர்ப்பு பன்னீர்செல்வத்துக்குப் பொருந்தும்தானே?

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) – ஒரு அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர்கள் விதிகள் விதி 41A-ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்புக் காலம் உள்ள நிலையில், ஒரு அரசுப் பணியாளர் கொடுக்கும் விலகல் கடிதத்தை உடனே உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள கூடாது. 

ஆனால், உயர் அதிகாரிகள் விதி 41(b)-ன்படி, ஒரு அரசு ஊழியர் விலகல் கடிதத்தை கொடுத்து அது ஏற்றுக்கொண்ட பிறகு அந்த கடிதத்தை அரசு ஊழியர் திரும்ப பெறவே முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விதி 41A மூன்று காரணிகளை உள்ளடக்கியது.

(1) மூன்று மாதங்களுக்குக் குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை கொடுக்க வேண்டும். 

(2) அதனை வேலை அளித்த அதிகாரம் உடைய நபர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

(3) அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் அறிவிப்பு குறித்து விதி 41A(a)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வது குறித்து தகுதிபெற்ற அதிகாரி குறிப்பிட்ட காலஅவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டது குறித்து அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களைக் குறிப்பிட்டு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

அதிகாரம் பெற்ற நபர், பணி விலகல் குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்புக் காலத்துக்குள் பிறப்பிக்கவில்லை என்றால், விதி 41A(c)-ன்படி அந்தப் பணி விலகல் கடிதம் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.

பணி விலகல் குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்குப் பின்னர், அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவைப் பிறப்பிப்பதற்குக் காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது. 

எனவே, ஒரு அரசு ஊழியர் பணியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர், 90 நாட்களுக்குள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற மனு கொடுத்தால், அந்த அரசு ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (W.P. NO - 19361/2014 DT - 16.06.2016, G. Parameshwari Vs Register, Chennai high Court and Others (2016-5-CTC-161).

ஆக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஏற்பாடு செய்யலாம்.

-    வழக்கறிஞர் சி.பி. சரவணன் - 9840052475

நன்றி : தினமணி நாளிதழ் - 10.02.2017

No comments:

Post a Comment