பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி?
புது அம்மாக்கள் கவனம்!
இன்றையச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. தனிக்குடும்ப அம்மா, அப்பாக்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிரமமானதாக ஆகிவிட்டது. குறிப்பாக, குழந்தை பிறந்த ஆரம்ப வாரங்களில், அதன் அழுகை முதல் பசி வரை அனைத்துமே, இளம் பெற்றோர் காரணம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் குழப்பம், பதற்றம் தருவதாகவே இருக்கும்.
பிரசவத்துக்குப் பின், மருத்துவமனையில் இருந்து தாயும்சேயும் வீடு திரும்பும் அந்த ஆரம்ப நாட்களில், பச்சிளம் குழந்தையைக் கையாள்வதில் அதிக கவனம் தேவை. குழந்தை உலகுக்கு வந்தபின் அது, தன் தாயையே தனக்கான உயிராக முதலில் பற்றும். ஆனாலும், அப்பா, வீட்டுப் பெரியவர்கள் என அனைவரும் குழந்தை வளர்ப்பில் தங்களின் பங்கை அளித்து, இரவு, பகல் எனத் தாய் மட்டுமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு, குழந்தையின் தேவைகளை, அதன் அழுகை, செய்கையில் இருந்து அறிந்துகொள்ளப் பழக வேண்டும். குழந்தையின் தாய், தந்தைவழிப் பாட்டிகள், குழந்தையின் பெற்றோரை வழிநடத்த வேண்டும்.
தேவையான அளவு பால் சுரப்பு
பிறந்த குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பு இயல்பாகவே எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் பால் சுரப்பு குறைவாகவும், ஆனால் குழந்தைக்குப் போதுமான அளவாகவும் இருக்கும். பின்னர், குழந்தையின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கும். எனவே, குழந்தை அழுதாலே, பால் போதவில்லை என்பதால்தான் அழுகிறது என்று நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.
குழந்தை வயிறு நிறையும் அளவுக்கு அதற்குப் பால் கிடைக்கிறதா என்பதை, அதன் தூக்கத்தை வைத்து அறியலாம். பால் அருந்திய பின் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை நன்கு தூங்கினால், போதுமான அளவு பால் கிடைக்கப்பெறுகிறது என்று அர்த்தம். முதல் ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் தவிர, தண்ணீர் உட்பட எதுவும் குழந்தைக்குத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீர், மலம் கழிக்கும் இடைவேளைகள்
பிறந்த குழந்தை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறைகூட சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம், ஒரு நாளில் ஐந்து முறையாவது மலம் கழிக்கும். இது இயல்பானதே. பிறந்த முதல் வாரங்களில், பால் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது என ஒன்றன் பின் ஒன்றாக இவை மட்டுமே குழந்தையின் செயல்களாக இருக்கும்.
இரவில் விழிக்கும் குழந்தைகள்
தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது, அம்மா பகல் நேரம் முழுக்க, யாருடனாவது பேசிக்கொண்டும், அங்கும் இங்கும் நடந்தபடி வேலை செய்துகொண்டும் இருப்பது, குழந்தைக்குத் தாலாட்டுவதுபோல் இருக்கும். அந்தச் சுகத்தில் அப்போது அது வயிற்றுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு, அம்மா அமைதியாக உறங்கும்போது, தாலாட்டு நின்றுவிட்டதாக நினைத்து, வயிற்றுக்குள் குழந்தை விழித்துக் கொள்ளும். உலகுக்கு வந்த பிறகும் சில நாட்கள், சில குழந்தைகளுக்கு முதல் சில மாதங்கள்வரைகூட இந்தப் பழக்கம் நீடிக்கும். அதனால் அவர்கள் பகலில் உறங்குவது, இரவில் விழிப்பது என இருப்பார்கள். நாளடைவில் பகலில் விழிப்பதும், இரவில் உறங்குவதும் அவர்களுக்குப் பழக்கமாகி விடும்.
ஒரு நாளில் 18 மணி நேரம்வரைகூட தூக்கம்!
குழந்தை பிறந்த முதல் மாதத்தில், ஒரு நாளில் 12 முதல் 18 மணி நேரம் வரைகூட தூங்கும். இடையிடையே, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் புகட்டலாம். அது கண் விழிக்காமல் தூங்குவது பற்றிக் கவலை கொள்ளவேண்டியதில்லை. ஆனால், 18 மணி நேரத்துக்கும் அதிகமாகக் குழந்தை தூங்கினால், மருத்துவரிடம் காண்பித்து, அதற்கு தைராய்டு குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்துக்கொள்வது அவசியம்.
பாலூட்டும் அம்மா பத்திய உணவு சாப்பிட வேண்டுமா?
பாலூட்டும் தாய்மார்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டியது அவசியம். அதற்காக, மூன்று இட்லி சாப்பிட்டவர்கள், ஐந்து இட்லிகள் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவாகச் சாப்பிட்டால் போதுமானது. பால் சுரப்புக்கு என எந்தச் சிறப்பு உணவும் தேவையில்லை. ப்ரொலாக்டின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் என, பால் சுரப்பை அதிகப்படுத்தும் ஹார்மோன்கள் தூண்டப்பட, தாய்மை உணர்வின் பூரிப்பே தேவை. குழந்தையைக் கொஞ்சுவது, முத்தமிடுவது, நெஞ்சோடு அணைத்துக் கதகதப்பு கொடுப்பது என அம்மா நேரம் செலவிட வேண்டியது அவசியம். குழந்தைக்கு ஆகாது என்று அம்மா பத்திய உணவு சாப்பிடத் தேவையில்லை. எல்லா வகை உணவுவகைகளையும் உட்கொள்ளலாம். திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது பால் சுரப்புக்கு உதவும்.
குழந்தைகளின் சருமத்துக்குத் தனிக்கவனம்
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே, அதன் இயல்பை அப்படியே பாதுகாக்க வேண்டும். குளிக்கச் செல்லும்முன் பேபி ஆயில் தடவி மென்மையாக மசாஜ் கொடுத்து, இளம்வெயிலில் சிறிது நேரம் வைத்திருக்கலாம். இது சருமத்துக்கு ஊட்டம் தருவதுடன், உடலெங்கும் ரத்த ஓட்டத்தையும் தூண்டும். குளியலுக்கு பேபி சோப் அல்லது வீட்டில் தயாரித்த குளியல் பொடி பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, குளிக்கவைத்தவுடன் தேங்காய் எண்ணெய், பேபி லோஷன் என ஏதாவது ஒன்றை தடவ வேண்டும். சிந்தெடிக் உடைகளைத் தவிர்த்து, காட்டன் உடைகளையே பயன்படுத் தவும். வெள்ளை, வெளிர் பிங்க், வெளிர் ஊதா என வெளிர் நிற ஆடைகளைப் பயன்படுத்தும்போது, பூச்சி, அழுக்கு என்று குழந்தைக்கு ஊறுவிளைக்கக் கூடியவற்றைப் பளிச்சென அடையாளம் காண முடியும்.
அழுகைதான் குழந்தையின் மொழி... அச்சம் வேண்டாம்!
குழந்தை தான் உணரும் அசௌகரியத்தைத் தெரிவிக்கும் ஒரே மொழி, அழுகை மட்டுமே. எனவே, அழுதால், உடனே பசிக்காகத்தான் அழுகிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது. பாலூட்டிய பின்னும் அழுதால், எறும்பு, கொசு என்று ஏதாவது கடிக்கிறதா, ஆடை இறுக்கமாக உள்ளதா, மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா, குழந்தையின் காலில் உள்ள தண்டை, கையில் உள்ள காப்பு, கழுத்து தாயத்து என்று ஏதேனும் பொருட்கள் அதற்கு அழுத்தம் கொடுக்கின்றனவா என ஒவ்வொன்றாக சரிபார்க்க வேண்டும். இவை தவிர, வயிற்று வலி, சுளுக்கு போன்ற காரணங்களால் குழந்தைகள் அழ நேரும்போது, அவற்றைக் கண்டறிவது பெற்றோருக்குக் கஷ்டமானதுதான். என்றாலும், இவை மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்பதுடன், அதை நாளடைவில் பெற்றோர்கள் புரிந்துகொள்ளப் பழகியிருப்பார்கள்.
குழந்தையைக் கைக்குக் கை மாற்றக்கூடாது!
குழந்தை பிறந்த முதல் சில நாட்களில், பார்க்க வருகிறவர்கள் அனைவரும் அதைத் தூக்கிவைத்துக் கொள்வார்கள். அதற்கு முன், அவர்களைக் கைகளைக் கழுவச் சொல்லலாம்; அல்லது ஹேண்ட் சானிட்டைஸர் கொடுத்துப் பயன்படுத்தச் சொல்லலாம். மேலும், குழந்தை இருக்கும் இடத்தில் இருமுவது, தும்முவது, குழந்தைக்கு வாய்வைத்து முத்தம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.
இனி, பச்சிளம் குழந்தையைக் கைகளில் தூக்கும்போது பதற்றம் இருக்காதுதானே?!
---------------------------------------------------------------------------- ஜெ.நிவேதா,
அம்மாக்களின் கவனத்துக்கு...
* குழந்தைக்குப் பால் புகட்டியதும் தோளில் போட்டு முதுகைத் தடவிக்கொடுத்து, ஏப்பம் வரச் செய்யவும். இதனால் அதன் வயிற்றில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டு, உணவு சிறுகுடலுக்குச் செல்ல வழி ஏற்படும்.
* பால் கொடுத்ததும் குழந்தையின் உடலை அதிக அசைவுகளுக்கு உள்ளாக்கினால், அது பாலைக் கக்கலாம். மேலும், தங்கள் தேவைக்கு அதிகமான பாலைக் குடித்த குழந்தைகளும் பால் கக்குவது உண்டு. இது இயல்பானதே. மூக்கு வழியாகவும் சில குழந்தைகள் பால் கக்குவார்கள். இது என்றோ ஒருநாள் நடந்தால் பயப்படத் தேவையில்லை. குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தால் போதும். ஆனால், குழந்தை இதுபோல் அடிக்கடி செய்தால், மருத்துவ ஆலோசனைப் பெறவும்.
* இரண்டு மாதங்களில் குழந்தையின் பார்வைத்திறன் முழுமையடையும். அப்போது ஆடைகள், பொம்மைகள் என வண்ணப் பொருட்களை ஆர்வமுடன் பார்ப்பார்கள். சத்தத்துக்காகத் தங்கள் கொலுசை ஆட்டி ஆட்டி விளையாடுவார்கள். அது அவர்கள் உடலுக்கு ஒருவகைப் பயிற்சியாகவும் அமையும்.
கார்த்திக் சூர்யா, குழந்தைகள் நல மருத்துவர்
• நன்றி : டாக்டர் விகடன் – 16.02.2017
No comments:
Post a Comment