அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?
சென்னை: பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கவும், கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளை மூடவும் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், 'பொது இடங்களில் புகை பிடிக்கவும், கல்வி நிலையங்கள் அருகே சிகரெட் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்; புகை பிடிப்பவர்களுக்கு என, தனியாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். விதிமுறை, சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சட்ட விதிகள் மீறப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும், தாக்கல் செய்யப்படவில்லை. சட்டம் அமலில் இருப்பதாகவும், மீறல் நடப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
ஜன., 30ல், 'இ - மெயில்' மூலம் அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். மறுநாளே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதற்கு முன், அரசுக்கு எந்த மனுவும் அனுப்பவில்லை. இத்தகைய வழக்குகளில் வேறு என்ன கூற முடியும்; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017
No comments:
Post a Comment