மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம்
மருத்துவமனைகளை கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லையா ?
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகள், அரசு மருத்துவமனைகளின் அலட்சியங்கள், போலி மருத்துவர்களின் அட்டகாசங்கள் இவற்றையெல்லாம் நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறோம்.இவற்றையெல்லாம் அரசால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?
சட்டரீதியாக நம்மிடம் என்ன சிக்கல் இருக்கிறது?பதிலளிக்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் கிருஷ்ணன்.
‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மருத்துவ வசதிகளை அளித்து, தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று The Clinical Establishments (Registration and Regulation) Act 2010-ல் சொல்லப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை இதுவரை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவில்லை. இதை ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.
ஆனால், இந்த சட்டம் இந்தியாவின் மற்ற மாநிலங்களான சிக்கிம், மிசோரம், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், உத்தர் காண்ட், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், புதுச்சேரி, சண்டிகர், அந்தமான், லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது’’ என்றவரிடம், தமிழ்நாட்டில் க்ளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் ஆக்ட் நடைமுறைக்கு வருவதில் என்ன சிக்கல் என்று கேட்டோம்.
‘‘இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பில் ‘Tamilnadu Private Clinical Establishment Act என்ற பெயரில் 1997-ல் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்பட்டுள்ளது’ என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் இந்த சட்டமும் இதுவரை சரியாக அமலாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘ஏன் இந்த சட்டம் இதுவரை அமலாக்கப்படவில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் பல இருந்தாலும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பல மருத்துவமனைகளி்ல் தரப்படும் மருத்துவம் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது.
இதுகுறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சேகரித்தபோது, தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று மருத்துவ சேவைகளின் இயக்குநர் அலுவலகம் பதில் அளித்துள்ளது’’ என்கிறார் அவர்.
Clinical Establishment Act 2010-ன் அம்சங்கள் குறித்தும் அவரிடம் கேட்டோம்…‘‘மருத்துவ சிகிச்சை, மருத்துவ சோதனை மற்றும் மருத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த ஒரு நிறுவனமும் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.தனி ஒரு மருத்துவரால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை, சேவை மையங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் போன்ற அனைத்தும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
ஆனால், இந்திய ராணுவத்தால் நடத்தப்படக்கூடிய மருத்துவனைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அகில இந்திய தேசிய கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்த கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவுமுறைகள் நடத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் மருத்துவ நிறுவனங்கள், முதல் முறை செய்யும் தவறுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த முறை செய்யும் தவறுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து செய்யப்படும் தவறுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்மூலம் ஒவ்வொரு நோய்க்கும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் மருத்துவமனைகள் A,B,1(A),1(B) என்று தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பரிசோதனை நிலையங்களும் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்திய மருத்துவம், யுனானி, யோகா, சித்தா, ஹோமியோபதி போன்ற முறைகளை பின்பற்றும் மருத்துவமனைகளும் இதில் அடங்கும்.
இதுபோன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் கல்வித் தகுதியும் நெறிமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
’’இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்?‘‘
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்களுக்கு சரியான, தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிடவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது’’ என்கிறார் கிருஷ்ணன்.
நன்றி குங்குமம் டாக்டர் – 01.12.2016
No comments:
Post a Comment