யூடியூப்புக்கு மாற்று இவை...!
இணையத்தில் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களைப் பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம்தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வுத் தளமாக விளங்கும் நிலையில், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன.
அவற்றைத் தெரிந்துகொள்வது உங்கள் இணைய அனுபவத்தை மேலும் செழுமையாக்கவும் உதவும். மாற்று வீடியோ தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் தளங்களில் முக்கியமான தளங்களின் பட்டியல் இதோ:
வீமியோ
யூடியூப் தவிரவும் அறிந்திருக்க வேண்டிய வீடியோ தளமாக ‘வீமியோ’ கருதப்படுகிறது. இணையத்தின் ஆரம்ப கால வீடியோ தளங்களில் ஒன்று. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தளத்தின் பெயர் ஆங்கிலத்தில் வீடியோ + மீ (வீடியோவும் நானும்) ஆகிய வார்த்தைகளின் சேர்க்கையாக அமைந்துள்ளது. மிகவும் துல்லியமான வீடியோக்களைப் பார்க்கும் வசதியை அளித்த முதல் வீடியோ தளமாகவும் இது கருதப்படுகிறது.
இதன் முகப்புப் பக்கத்திலேயே பல விதமான வீடியோக்களைப் பார்க்கலாம். முகப்புப் பக்கத்தில் வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்திற்கு நாம் பழகிவிட்டால், இணையவாசிகள் தங்களுக்குத் தேவையான தலைப்பை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அனிமேஷன், ஆவணப்படங்கள், இசை, ஃபேஷன், உணவு என 20-க்கும் மேற்பட்ட தலைப்புகள் இருக்கின்றன. இவை தவிர பிரத்யேகப் பரிந்துரைகளும் இருக்கின்றன. வீமியோ தயாரிப்பு வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம்.
தரமான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பதோடு இதில் உறுப்பினராக வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ளலாம். அடிப்படை சேவை இலவசமானது என்றாலும் கூடுதல் அம்சங்களுடன் கட்டணச் சேவைகளும் இருக்கின்றன. பயனர்கள் தாங்கள் விரும்பும் வீடியோ பிரிவில் உறுப்பினராக இணைந்து புதிய வீடியோக்களைப் பின்தொடரலாம்.
இணைய முகவரி: https://vimeo.com/
டெய்லிமோஷன்
வீமியோவுக்கு நிகராக மாற்று வீடியோ தளங்களில் பிரபலமான தளம் ‘டெய்லிமோஷன்’. பயனர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய வீடியோ தளம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் பழமையான வீடியோ சேவை தளம்தான். இது பிரெஞ்சு இணைய சேவை. ஆனால் உலகளாவிய வீடியோக்களைக் கொண்டது.
இதன் முகப்புப் பக்கத்தில் வரிசையாக வீடியோக்களின் பட்டியலைப் பார்க்கலாம். விளம்பரங்களின் ஊடுருவலை மீறி முகப்புப் பக்கம் எளிமையாகவே இருக்கிறது. எண்ணற்ற சேனல்கள் இருக்கின்றன. விரும்பமான சேனல்களைப் பின்தொடரும் வசதியும் இருக்கிறது. பிரபலமான சேனல்களும் முன்னிறுத்தப்படுகின்றன. உறுப்பினராக இணைந்து வீடியோக்களை எளிதாகப் பதிவேற்றலாம். ஆனால் பதிவேற்றும் வீடியோக்களுக்கு ஒரு மணி நேரம் அல்லது 4 ஜிபி கொள்ளளவு எனும் வரம்பு இருக்கிறது.
டெய்லிமோஷன் கேம்ஸ், டெய்லிமோஷன் ஸ்ட்ரீமிங் ஆகிய உப சேவைகளும் இருக்கின்றன. வீடியோக்களைத் தேடும் வசதியும் இருக்கிறது. இந்தியப் பதிப்பும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இணைய முகவரி: http://www.dailymotion.com/in
மெட்டாகேஃப்
மற்றொரு அருமையான வீடியோ தளம் மெட்டாகேஃப். 2003-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் ‘தி கலெக்டிவ்’ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இணையத்தின் மூன்றாவது பிரபலமான வீடியோ தளம் என்று கருதப்படுகிறது.
இதன் முகப்புப் பக்கம் அதிகச் சிக்கல் இல்லாம, வீடியோக்களை முன்வைக்கிறது. சமீபத்திய வீடியோ, முன்னணி வீடியோ, இப்போது பிரபலமாக இருப்பவை என மூன்று வகைகளில் வீடியோக்களைப் பார்க்கலாம். விரும்பிய சேனல்களில் சந்தாதாரராகச் சேரலாம். விரும்பிய வீடியோக்களைத் தேடியும் கண்டறியலாம்.
இதன் முகப்புப் பக்கம் அதிகச் சிக்கல் இல்லாம, வீடியோக்களை முன்வைக்கிறது. சமீபத்திய வீடியோ, முன்னணி வீடியோ, இப்போது பிரபலமாக இருப்பவை என மூன்று வகைகளில் வீடியோக்களைப் பார்க்கலாம். விரும்பிய சேனல்களில் சந்தாதாரராகச் சேரலாம். விரும்பிய வீடியோக்களைத் தேடியும் கண்டறியலாம்.
இணைய முகவரி: http://www.metacafe.com/
லைவ்ஸ்ட்ரீம்
யூடியூப் போன்ற இணையதளம்தான். ஆனால் நேரலை ஒளிபரப்புக்கானது. உலகம் முழுவதும் இருந்து நேரலை ஒளிபரப்பு வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம். பல்வேறு பிரிவுகளின் கீழ் வீடியோக்களைக் காணலாம்.
இந்திய, தமிழ் சேனல் வீடியோக்களையும் பார்க்கலாம். நேரலை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமெனில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
இந்திய, தமிழ் சேனல் வீடியோக்களையும் பார்க்கலாம். நேரலை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமெனில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
இணைய முகவரி: https://livestream.com/
ஓப்பன் வீடியோ
வீடியோக்களுக்கான நூலகம் போலச் செயல்படுகிறது இது. ஆய்வு நோக்கில் வீடியோக்கள் சேகரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் கல்வி சார்ந்த வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆவணப்படங்களின் தொகுப்பும் உள்ளது. அமெரிக்காவின் நாசா அமைப்பின் வீடியோக்களையும் காணலாம்.
இணைய முகவரி: https://open-video.org/
இவை தவிர நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளமான ஹுலு, சோனி நிறுவனத்தின் கிராக்கில், இணைய டிவி என்று வர்ணிக்கப்படும் வியோ, செய்தி வீடியோக்களுக்கான லைவ்லீக், நகைச்சுவை வீடியோக்களுக்கான பிரேக்.காம், வழிகாட்டல் வீடியோக்களுக்கான வீடியோஜக் உள்ளிட்ட வீடியோ தளங்களும் இருக்கின்றன. ஃபிளிக்கர், மைஸ்பேஸ், டிவிட்ச் உள்ளிட்ட தளங்களின் மூலமும் வீடியோக்களைக் காணலாம்.
சைபர் சிம்மன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 03.02.2017
No comments:
Post a Comment