disalbe Right click

Friday, February 3, 2017

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா?

Image may contain: one or more people and text

உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா? 

அறிந்துகொள்ளலாம்..! 

உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்வோம். அவர் நம்மை நன்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ``எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க போதும்’’ என்பார். சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் பலருக்கு உடலில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், மனதில்தான் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கும். தங்களுக்கு இருப்பது மனஅழுத்தம்தான் என்பதைக்கூட பலர் உணராமல் இருப்பார்கள். கவனிக்காமல் விட்டால், இது பல மோசமான விளைவுகளை வாழ்வில் ஏற்படுத்திவிடும். 

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா என்பதை 10 அறிகுறிகள் இங்கே...

எதையும் மூடி மறைப்பவர்!

'எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை’ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி கூறிக்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கும்போதும், பொது இடத்திலும் வலுக்கட்டாயமாக சந்தோஷமாக இருப்பதைப்போல் உங்களைக் காட்டிக்கொள்வீர்கள். ஆனால், தனிமையில் எதையோ பறிகொடுத்ததுபோல வெறுமையில் இருப்பீர்கள்.

அன்புக்குரியர்வர்கள் மீதே பாயும் கோபம்!

காரணம் என்று எதுவும் இருக்காது. ஆனால், உங்கள் மனைவியிடமோ, அம்மா-அப்பாவிடமோ அடிக்கடி கோபத்தைக் காட்டுவீர்கள். அப்படியானால், பல நாட்களாக வெளிப்படுத்த முடியாத அளவுக்குக் காயங்களையும் கோபத்தையையும் மனதிலேயே அடக்கி வைத்திருக்கிறீர்கள் என அர்த்தம். அதனால் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அன்புக்குரியவர்களிடம் கோபத்தைக் காட்டுவீர்கள்.

சந்தேகக் கோடு:

சின்னஞ்சிறு கணக்குகளைப் போடுவதிலும், அலுவலகத்தில் நீங்கள் வழங்கும் பிரசன்டேஷன்களிலும், அடுப்பை அணைத்தோமா, வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்பதிலும்கூட சந்தேகம் எழும். இதற்குக் காரணம், செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல், எண்ணங்கள் வேறு எங்கோ திசை திரும்பி இருப்பதுதான்.

முதலில் வேண்டும் இறுதியில் வேண்டாம்!

கல்யாணம், சினிமா, நண்பர்கள் வீடு, பார்ட்டி என்று பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். `வா... போகலாம்!’ என்று யாராவது அழைத்தால், `வேண்டாம் மூட் சரியில்லை’ என்று தவிர்த்துவிடுவீர்கள்; தனிமையை விரும்புவீர்கள். 

தூக்கமின்மை 

மனஅழுத்தம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறி தூக்கமின்மை. பகலில் எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. இரவில் தூக்கமும் வராது. சிலர் விடிய விடிய டி.வி-யைப் பார்த்தபடி படுத்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கவனம் டி.வி-யில் இருக்காது. விடிந்ததும் எதைப் பற்றி யோசித்தோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

உடல் வலி

அதிக மனஅழுத்தம், பதற்றம் காரணமாக அடிக்கடி உடல் வலி ஏற்படுவதுபோலத் தோன்றும். திடீர் என்று எடை கூடுவதுபோலவும், எலும்புகளில் வலி ஏற்படுவது போலவும் தோன்றும்.

அதிக உணவு வேட்கை 

மனதில் நிம்மதியில்லை என்றாலோ, உணர்வுகளைப் பகிர்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலோ அதிக அளவில் உணவைச் சாப்பிடத் தோன்றும். இப்படிச் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதுதானா என்றுகூட யோசிக்கத் தோன்றாது.

உணவே வேண்டாம் 

சில நேரங்களில் எதிர்மறையாகவும் நடக்கும். அதிக மனஅழுத்தத்தால் சாப்பிடப் பிடிக்காது. சாப்பிடாமல் இருப்பதால், வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்காது. சோகமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலை காணப்படும்.

காரணமற்ற அழுகை

காரணமின்றி அழத் தோன்றும். ஜன்னல் வழியாக எதையாவது பார்த்துக்கொண்டு இருந்தாலும், கண்களில் இருந்து தன்னையறியாமல் கண்ணீர் வரும். காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. எந்தக் காரணமும் இல்லாமலேயே சோகம் ஒட்டிக்கொள்ளூம். மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுதான் இதற்கு முக்கியக் காரணம்.

மேலே குறிப்பிட்டுள்ள 9 அறிகுறிகளில் குறைந்தது நான்கு அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் மனநல ஆலோசகரை அணுக வேண்டும். மனஅழுத்தத்தைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால் மற்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

நன்றி : விகடன் செய்திகள் – 03.02.2017

No comments:

Post a Comment