கூடுதல் காலம் சிறையில் இருந்தால்
அபராதம் செலுத்த வேண்டியதில்லையா?
5 ஆண்டு சிறையில் இருந்தாலும் சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு
குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.
நான்கு ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விலக்கி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா, சுதாகரன், இளவரசி அடைக்கப்பட்டனர். இவர்கள் தரப்பில், அபராத தொகையை செலுத்தியதாக தெரியவில்லை;
ஆனாலும், தண்டனை காலத்துக்குள், அபராத தொகையை செலுத்தலாம்; இல்லையென்றால், சட்டப்படி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
குற்ற வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டால், உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்தில், அதை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தி விட்டு, மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும், மேல் முறையீட்டு மனுவில் இணைக்க வேண்டும். இது ஒரு நடைமுறை.
கூடுதல் காலம் அபராத தொகையின் அளவு அதிகமாக இருந்தால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து,தண்டனையை நிறுத்தி வைக்க கோர முடியும். அதில், அபராதமும் அடங்கும். அதை, உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம்.
அபராத தொகையை, தண்டனையை அனுபவிக்கும் காலத்துக்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், நீதிமன்றம் விதித்துள்ள படி, கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை என்கிற அர்த்தம் அல்ல.
சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், ஆறு ஆண்டுகள் வரை, அபராத தொகையை வசூலிக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும்.
குற்றவாளி பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதை முடக்கி வைத்து, கலெக்டர் மூலம், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த சொத்துக்களை விற்று, நீதிமன்றத்துக்கு அபராத தொகையை, செலுத்தும்படி உத்தரவிட முடியும். அதுவே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டால், அபராத தொகையை வசூலிக்க முடியாது.
இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017
No comments:
Post a Comment