வீடு கட்ட கடன் - வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்கள்
வீட்டுக் கடன் வாங்கும்போது சில விஷயங்களைப் பல வங்கிகளும் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை மட்டுமே வங்கிக்குச் செலுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால் வங்கிகள் தொடக்கத்தில் வெளிப்படுத்தாத சிலவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது வங்கிகள் இவற்றை மேம்போக்காகத் தெரிவிக்கும்போது நீங்கள் வீட்டுக் கடன் பெறும் பரவசத்திலோ, மன அழுத்தத்திலோ அவை குறித்து மனதில் வாங்கிக் கொள்ளாமல் போகலாம்.
அவற்றையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டால்தான் வீடு வாங்குவதற்கான நிதியைச் சரிவரத் திட்டமிட முடியும்.
வங்கிக் கடனை மட்டுமே முழுவதுமாக நம்பி நீங்கள் வீடோ ஃப்ளாட்டோ வாங்கிவிட முடியாது. 10லிருந்து 20சதவிகிதம் தொகையை நீங்கள் கட்டியாக வேண்டும்.
சில வங்கிகளில் உங்கள் பங்கை (இதை ‘மார்ஜின் மணி' என்கின்றனர்) முதலில் கட்டிய பிறகுதான் கடனை விநியோகிப்போம் என்பார்கள். பல வங்கிகளில், விற்பவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தவணையிலும் 10லிருந்து 20 சதவிகிதம் தொகையை நீங்கள் கொடுக்க, பாக்கியை வங்கி அளிக்கும்.
இப்போது வங்கி வசூலிக்கக்கூடிய கட்டணங்களைப் பார்ப்போம்.
1. மதிப்பீட்டுக் கட்டணம்
வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன்னால் வங்கியின் அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து நீங்கள் வாங்க இருக்கும் வீட்டைப் பார்ப்பார். பல வங்கிகள் ஒரு கோடிக்கும் அதிகமான வீட்டுக் கடன் வழங்குவதாக இருந்தால் இதைச் செய்கிறது. இதற்காக ஒரு கட்டணம் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். கட்டுமான நிபுணர் (Architect) ஒருவரின் மதிப்பீடும் பெறப்படும். இதற்கான கட்டணத்தையும் நீங்கள் அளிக்க வேண்டும்.
2. செயலாக்கக் கட்டணம் (Processing fee)
உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பம் மற்றும் இது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க ‘Processing கட்டணம்’ என்பதையும் வங்கிகள் வசூலிக்கும். இது உங்களுக்குக் கொடுக்கும் கடன் தொகையில் 0.25 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதம்வரை இருக்கும்.
உங்கள் வங்கியின் தலைமையகம் வேறெங்கோ (டெல்லி, மும்பை, அலகாபாத் என்பதுபோல்) இருக்கலாம். அங்கு அனுப்பியும் உங்கள் வீட்டுக் கடனுக்கான விண்ணப்பத்தை வங்கி பெற நேரலாம். இதைக் காரணம் காட்டியும் இந்தக் கட்டணம் பெறப்படுகிறது.
3. வழக்கறிஞருக்கான கட்டணம்
வீட்டின் ஆவணங்களை வங்கியின் அங்கீகாரம் பெற்ற ஒரு வழக்கறிஞர் பரிசீலிப்பார். ‘ஆவணங்கள் சரியானவை. கடன் வழங்கலாம்’ என்று வங்கிக்கு எழுத்து மூலமாகக் கருத்துப் பதிவு செய்வார். இந்த வழக்கறிஞருக்கான தொகையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
இவை தவிர வேறு சில கட்டணங்களையும் வங்கிகள் வசூலிக்கக்கூடும். அவற்றைப் பார்ப்போம்.
சில வங்கிகள் Documentation charges என்று வசூலிக்கும். அதாவது பல படிவங்களை நிரப்பி உங்கள் கையெழுத்தைப் பெறுவதற்கான கட்டணம் இது.
வீடு உங்களுடையதுதான் என்றாலும் வீட்டுக் கடன் வழங்கிய வங்கி அதை இன்ஷ்யூர் செய்து அதற்கான ப்ரிமீயத்தை மறக்காமல் உங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளும்.
சில வங்கிகளில் மட்டும் நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும். அதாவது குறிப்பிட்ட வட்டியையே உங்களிடம் வசூலிக்கும் Fixed rate interest, சந்தையின் மாறுபடும் வட்டிக்கேற்ப, வீட்டுக்கான வட்டி விகிதமும் மாறுபடும் (Floating rate interest) ஆகிய இரண்டு வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். (ஆனால் பல வங்கிகள் இப்போது இரண்டாவது சாய்ஸைத்தான் அளிக்கிறார்கள்). ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நடுவே மாற்றிக்கொள்ளலாம். இதற்காக ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். இது மீதமுள்ள கடன் தொகையில் ஒரு சதவிகிதம் அளவுக்கு இருக்கலாம்.
உங்கள் மாதத் தவணையைக் காலப்போக்கில் கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். வருமானம் அதிகமாகும்போது எதற்காக அதிக வட்டியை வங்கிக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து நீங்கள் இப்படி முடிவெடுக்கலாம். ‘‘சீக்கிரம் கடனை அடைத்தால் வங்கிக்கு நல்லதுதானே’ என நீங்கள் நினைத்தாலும் சில வங்கிகள் இந்த மாறுதலுக்கும் ஒரு கட்டணம் வசூலிக்கும்
(நீங்கள் புத்திசாலித்தனமாக, இப்படி மாற்றம் வேண்டும் என்றெல்லாம் வங்கிக்கு எழுதிக் கொடுக்காமல் அதிகத் தொகையைக் கட்டிவரலாம். இதற்கான ஆட்சேபணையைப் பெரும்பாலும் வங்கிகள் எழுப்பாது).
சில சமயம் மொத்தமாக ஏதோ ஒரு தொகை கைக்குக் கிடைத்தால் வீட்டுக் கடனையே அடைத்துவிடலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். சில வங்கிகள் இதற்கும் கொஞ்சம் கட்டணம் வசூலிக்கும் (Pre-closure charges). ஆனால் இப்படி வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
உங்கள் வீட்டு ஆவணங்களை இரண்டு புகைப்படப் பிரதிகள் எடுத்துக் கொள்ளுங்கள். மூலப்பத்திரங்கள் அனைத்தையும் வங்கியிடம் ஒப்படைத்துவிட்டு நடுவே பிரதி எடுக்க அவற்றை அணுகினால் தாமதம் ஏற்படலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்பு உண்டு.
மாதத் தவணையைத் தாமதமாகச் செலுத்தினால் இதற்காகவும் பல வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன (Late payment charges).
இதையெல்லாம் மனதில் கொண்டுதான் நீங்கள் வங்கிக் கடனைத் திட்டமிட வேண்டும்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.02.2017
No comments:
Post a Comment