disalbe Right click

Friday, February 10, 2017

சாட்சி இல்லையென்றால் என்ன? முகாந்திரம் போதுமானது!


சாட்சி இல்லையென்றால் என்ன? முகாந்திரம் போதுமானது!

பழைய வழக்கு தான்...தெரிஞ்சு வச்சிக்குங்க..

ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என தெரிந்து கொண்டாலே போதுமானது. அவ்வாறு இருந்தால், சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவருக்கு தண்டனை வழங்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இதுதான் திரு பி.எச்.பாண்டியன் அவர்களின் வாதம். 

இதற்கு ஆதாரமாக அவர் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட் 1959 டிசம்பர் 14 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு. தீர்ப்பை எழுதியவர் நீதிபதி இதயதுல்லா. பின்னாளில் துணை ஜனாதிபதி ஆனவர். பெஞ்சின் ஏனைய நீதிபதிகள் எம்.தாஸ், எஸ்.கே.சர்க்கார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வழக்கின் சாராம்சம் இங்கே:

மகாராஷ்ட்ர மாநிலத்தின் பூனா நகரில் (இன்று புனே) வசித்தவர் லட்சுமி பாய். பெரும் செல்வந்தர். உறவினர்கள் இல்லை. ஏராளமான சொத்து இருந்தது. பணக்காரர்களுக்கே உரிய உடல் பாதிப்புகள் லட்சுமி பாய்க்கும் இருந்தன. அதனால் அவதிப்பட்டார். சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஆனந்த் லாகு என்பவர் லட்சுமி பாய்க்கு அறிமுகம் ஆனார். மருத்துவம் படித்திருப்பதாகவும், உடல் ஆரோக்கியம் குறித்து நிறைய தெரியும் என்றும் லட்சுமி பாயிடம் சொன்னார். சில மருத்துவ யோசனைகளையும் சொன்னார்.

அதன்படி செய்து பார்த்தார் லட்சுமி பாய். ஆனந்த் சொன்னபடியே அவை நன்கு வேலை செய்தன. லட்சுமி பாய் மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தை தன்னுடனே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பூனாவில் ஆனந்துக்கு தனி வசிப்பிடம் இருந்தாலும், பெரும்பாலான நேரத்தை லட்சுமி பாயுடன் செலவிட்டார்.

தனது உடல் நலத்தில் ஆனந்த் காட்டிய அக்கறை லட்சுமி பாயை கவர்ந்தது. வீடு, தோட்ட நிர்வாகம், கணக்கு வழக்கு போன்ற மற்ற விஷயங்களிலும் வலிய சென்று உதவினார் ஆனந்த். லட்சுமி பாய் நெகிழ்ந்து போனார். வீட்டு நிர்வாகம் மட்டுமின்றி சொத்து விவகாரங்களையும் ஆனந்தை நம்பி ஒப்படைத்தார்.

நீரிழிவு நோயால் அவதிப்பட்ட லட்சுமி பாய்க்கு வேளை தவறாமல் மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டார் ஆனந்த் லாகு. நீரழிவு நோயாளிகளுக்கு போடப்படும் இன்சுலின் ஊசியை லட்சுமி பாய்க்கு நேரம் தப்பாமல் போடவும் தனக்கு தெரிந்த ஒருவரை அமர்த்திக் கொண்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருநாள் லட்சுமி பாயிடம் மெல்ல பேச்சு கொடுத்த ஆனந்த், பம்பாய் நகரில் தனக்கு தெரிந்த ஒரு பெரிய டாக்டர் இருப்பதாகவும், அவரிடம் சிகிச்சை பெற்றால் சீக்கிரம் நீரழிவு நோயில் இருந்து விடுதலை பெறலாம் என யோசனை தெரிவித்தார். லட்சுமி பாய்க்கு அது நல்ல யோசனையாக பட்டது. சம்மதித்தார்.

உடனே ஏற்பாடுகளில் இறங்கினார் ஆனந்த். ”நீங்கள் பம்பாயில் இருக்கும் நாட்களில் இங்கே கவனிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. வரி செலுத்துவது போன்ற விஷயங்களை தள்ளிப்போட முடியாது” என்று சொல்லி, சில பேப்பர்களிலும் செக் புத்தகத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

‘நமது நலத்தில்தான் இந்த ஆனந்துக்கு எவ்வளவு அக்கறை’ என்ற பெருமையுடன் லட்சுமி பாய் எல்லா பேப்பர்களிலும் கையெழுத்து போட்டு கொடுத்தார். அந்த பேப்பர்களில் சில லட்சுமி பாய் பங்குகள் வாங்கி வைத்திருக்கும் கம்பெனிகளிடம் டிவிடெண்ட் பெற்றுக் கொள்வதற்கான வாரன்ட் பத்திரங்கள். சில தேதி எழுதப்படாத மொட்டை செக் தாள்கள்.

ஏற்பாடுகள் முடிந்து லட்சுமி பாயுடன் பம்பாய்க்கு ரயில் ஏறினார் ஆனந்த். அப்போதெல்லாம் ரயில்கள் வேகம் கிடையாது. பயண நேரம் அதிகம். பயணத்தின் நடுவிலும் லட்சுமி பாய்க்கு வேண்டிய உணவு கொடுக்க, மருந்து தர, ஊசி போட ஆனந்த் தவறவில்லை.

ஆனால் ரயில் பம்பாய் நகரை அடைந்தபோது லட்சுமி பாய்க்கு சுய நினைவு இல்லை. மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற ஆனந்த், வேறு ஒரு பெயரில் லட்சுமி பாயை அங்கு சேர்த்தார். தொடர்பு முகவரியாக பூனாவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கொடுத்தார். அவர் சொன்னபடி கேட்டது ஆஸ்பத்திரி நிர்வாகம். ஏனென்றால், அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாகி ஆனந்துடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்.

ரயிலில் வரும்போதே லட்சுமி பாய் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டார் ஆனந்த். எனவே அவர் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என ஆனந்த் சொன்னதை ஆஸ்பத்திரி அலுவலர்கள் சந்தேகிக்கவில்லை.

லட்சுமி பாய்க்கு என்ன பிரச்னை, எப்படி நோய் வந்தது, ஏன் மயக்கம் அடைந்தார் என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்களை சொல்லி குழப்பினார் ஆனந்த்.

இதனால் நோயாளியின் பின்னணி தெரியாமல், அப்போதைக்கு செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.

இன்சுலின் மருந்தும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இன்ட்ரா கேஸ்ட்ரிக் க்ளுகோஸ் ட்ரிப்பும் போடப்பட்டது. 

என்ன செய்தும் நோயாளி மயக்கம் தெளியவில்லை.

எனவே அவர் டயபெடிக் கோமாவில் விழுந்து விட்டதாக டியூட்டி டாக்டர் குறிப்பு எழுதினார். 

ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர், குறிப்பை பார்த்ததும் மேற்படி லேடி டாக்டரை அழைத்து, சிறுநீர் பரிசோதனை செய்யாமல் எப்படி டயபெடிக் கோமா என எழுதலாம் என கடிந்தார்.

உடனே யூரின் டெஸ்ட் செய்த லேடி டாக்டர், அதன் ரிசல்ட்டை பெரிய டாக்டரிடம் காட்டினார். அவர் அதை பார்த்து, சிறுநீரில் கொஞ்சம் அசெட்டின் படிந்துள்ளது என்று சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் லட்சுமி பாய் உயிர் பிரிந்தது.

மரணத்துக்கான காரணம் தெரியாததால் ’போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள்’ என்று விசிட்டிங் டாக்டர் யோசனை சொன்னார். குறிப்பேட்டில் ‘போஸ்ட்மார்ட்டம் கேட்கப்பட்டது’ என்று மட்டும் பதிவு செய்த லேடி டாக்டர், இறுதி பரிசோதனை முடிவுகளை எழுதாமலே சற்று இடம் விட்டு கையெழுத்து போட்டார். விசிட்டிங் டாக்டரும் அதை வாங்கிப் பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில் அங்கு வந்த ஆனந்த், தனது எஜமானி மரணம் அடைந்து விட்டதை அறிந்து உடனே கிளம்பினார். டியூட்டி டாக்டர் தடுத்து கேட்டபோது, “அது யாரென்றே எனக்கு தெரியாது. அனாதை பிணத்துக்கு போஸ்ட் மார்ட்டமெல்லாம் எதற்கு? பேசாமல் மார்ச்சுவரிக்கு தள்ளிவிடுங்கள்” என கூறிவிட்டு அவசரமாக அகன்றார். 

நிர்வாகிக்கு தெரிந்தவர் என்பதால் ஆனந்த் சொன்னபடி சடலம் மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

பூனா திரும்பினார் ஆனந்த். பம்பாயில் லட்சுமி பாய் சிகிச்சை பெற்று வருகிறார், சீக்கிரம் பூரண நலம் பெற்று பூனா திரும்புவார் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கதை அளந்தார். அவர்களும் நம்பினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமி பாயின் சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று பணமாக்கினார் ஆனந்த். வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கி வைத்திருந்ததால் இது சுலபமாக முடிந்தது.

பல நாட்களாகியும் லட்சுமி பாய் திரும்பவில்லை, ஆனந்தும் பம்பாய்க்கு செல்லவில்லை என்பதை உள்ளூர்வாசிகள் கவைத்தனர். கிசுகிசுக்க தொடங்கினர்.

அதே நேரம் பம்பாய் ஆஸ்பத்திரியில் ஒரு சடலம் நீண்ட நாட்களாக மார்ச்சுவறையில் கேட்பாரற்று கிடந்தது பலரது கவனத்துக்கு வந்தது. 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே என விசிட்டிங் டாக்டர் கேட்க, லேடி டாக்டரும் ஆஸ்பத்திரி நிர்வாகியும் முழிக்க, பிரச்னை வெடித்தது. தங்கள் தப்பை மறைக்க இருவரும் அவசரமாக மெடிக்கல் ரிப்போர்ட்டில் திருத்தம் செய்தனர்.

அதற்குள் போலீஸ் மோப்பம் பிடித்து விஷயம் வழக்காக உருவெடுத்தது.

“ஆனந்த் ஆரம்பத்தில் இருந்தே லட்சுமி பாயின் சொத்துக்கள் மீது கண் வைத்திருந்தார். எனவேதான் தன்னை மருத்துவ ஆலோசகராக அறிமுகம் செய்து கொண்டு லட்சுமி பாயின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டு எஜமானியின் தேவைகளை பூர்த்தி செய்து படிப்படியாக நம்பிக்கையை சம்பாதித்துக் கொண்டபின், அவரே வீட்டு நிர்வாகத்தையும் கையில் எடுத்தார். அதன் பின் அவரே சிறுகச் சிறுக லட்சுமி பாய்க்கு தேவைக்கு மேல் இன்சுலின் மருந்தை ஊசியாக செலுத்தி நோயை உருவாக்கினார்” என்று ஆனந்த் மீது குற்றம் சுமத்தியது போலீஸ்.

அது மட்டுமல்ல. ”வீட்டில் இருக்கும்போதோ அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதோ அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷ மருந்தை லட்சுமி பாய் உடலுக்குள் ஆனந்த் செலுத்தி இருக்கிறார். அது குறிப்பிட்ட நேரம் கடந்தபின் எந்த டாக்டராலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ரத்த ஓட்டத்தில் கரைந்துவிடக் கூடிய தன்மை கொண்டது. விஷமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அளவு சற்று அதிகமானாலும் விஷம் அளவுக்கு விளைவை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட மருந்தாகவும் இருக்கலாம்.

“வீட்டை விட்டு ரயில் நிலையத்துக்கு கிளம்பும்போது லட்சுமி பாய்க்கு ஆனந்த் 2 ஊசிகள் போட்டதாக அவரது வீட்டு வேலைக்கார பெண்மணி சாட்சியம் அளித்திருப்பது இதை ஊர்ஜிதம் செய்கிறது.

”நீரழிவுக்கு தரப்படும் இன்சுலினை அளவுக்கு மீறி லட்சுமி பாயின் உடலில் செலுத்தியதால்தான் அவருக்கு ஹைப்போக்ளைசீமியா என்ற நோய் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக முதலில் டயபெடிக் கோமாவும், பின்னர் திடீர் மரணமும் நிகழ்ந்தது” என போலீஸ் அதிரடியாக குற்றச்சாட்டு வாசித்தது.

ஆனந்த் அலட்டிக் கொள்ளவே இல்லை. ”லட்சுமி பாயின் வீட்டில் வேலை செய்யும் ஆயாவுக்கு காது கேட்காது, அவரால் பேசவும் முடியாது. எனவே அவரது சாட்சியத்தை ஏற்க முடியாது” என்றார். அந்த பெண்மணியை வேலைக்கு சேர்த்தவர் யார் என்பதை சொல்லத் தேவையில்லை.

அடுத்து, “ரயிலில் நான் லட்சுமி பாய்க்கு இன்சுலின் ஊசி போட்டேன் என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. சொல்லப் போனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செலுத்திய 40 யூனிட் இன்சுலினால்கூட லட்சுமி பாய்க்கு மரணம் சம்பவித்து இருக்கலாம்” என்று தனக்கு உதவியாக இருந்த டாக்டர்களையும் மாட்டி விட்டார்.

இப்படியாக போன வழக்கு விசாரணையில் நேரடி சாட்சிகளோ வலிமையான தடயங்களோ இல்லாமல் போலீஸ் தடுமாறியது.

அப்போதுதான் லட்சுமி பாய் மரணத்துக்கு முன்னால் ஆனந்தின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது, லட்சுமி பாயின் மரணத்துக்கு பிறகு அது எப்படி மாறியது என்பதை ஒவ்வொரு பாயின்டாக போலீஸ் சேகரித்து கோர்ட்டில் சமர்ப்பித்தது.

சாதாரண மருத்துவ ஆலோசகராக இருந்த ஆனந்த் லாகு அவரது எஜமானியுடன் நெருக்கமான பின் என்னென்ன மாற்றங்களுக்கு ஆளானார், எஜமானியின் மரணத்துக்குப் பின்னர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்ற விவரங்களை புலனாய்வு மூலம் சேகரித்து புட்டுப்புட்டு வைத்தது போலீஸ். நோக்கம் இப்படி தெளிவானதும் பல கேள்விகளுக்கு சடசடவென பதில்கள் வந்து விழுந்தன.

இவ்வளவுக்கு பிறகுதான் இந்திய சட்ட வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.

சாட்சியும் ஆதாரமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பலாம் என கெட்டவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்த தீர்ப்பு அது.

(பதிவு செய்தவர் - ஜெயந்தி சுந்தரமூர்த்தி, அட்வகேட்)

Thanks to : Adv. Dhanesh Balamurugan​

No comments:

Post a Comment